இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

05/04/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மரணம் ஒரு படிப்பினை
மரணம் ஒரு படிப்பினை


மரணம்..! ஒவ்வொரு துளி நிமிடத்திலும் நம் வாழ்வு கரைந்து போய்க் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் மரணத்தின் தூதுவன் உங்களை நெருங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா அல்லது மற்றவர்களுக்கு எப்படியோ உங்களுக்கும் அந்த மரணம் மிக அண்மித்துக் கொண்டிருக்கின்றது என்பதைப் பற்றி சிந்தனை ஏதும் உண்டா உங்களுக்கு?
இறைவன் நமக்கு அதனை இவ்வாறு ஞாபகமூட்டுகின்றான்:
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள். (அல் அன்கபூத் : 57)

இந்த உலகத்தில் வந்துதித்த அனைவரும் மரணத்தைச் சந்திக்க இருக்கின்றவர்களே. அதில் யாருக்கும் விதிவிலக்கின்றி.., அனைவருமே. இன்றைய நமது வாழ்வு, எத்தனையோ மக்களின் மரணத்திற்குப் பின்பு அவர்களின் எச்சங்களாக நாம் மிச்சமாகி இருக்கின்றோம். இன்றைக்கு வாழ்பவர்கள், நாம் என்றென்றைக்கும் வாழ்வாங்கு வாழ்வோம் என்ற எதிர்பார்ப்போடு இருப்போர் அனைவருக்கும், மரணத்தின் கதவுகள் ஓசையின்றி திறந்து கொண்டு அவர்களை அழைத்துக் கொண்டிருக்கும். அதன் கதவுகளைக் கடந்து செல்வதற்கு யாருக்குமே விருப்பமில்லை தான், ஆனால் நம்முடைய விருப்பங்கள் அங்கே விடைபெற்று விடும், அடிபணிவது ஒன்றே நம்முடைய தேர்வாக இருக்கும்.
சற்று சந்தித்துப் பாருங்கள், ஊரின் ஒரு கோடியில் ஒரு குழந்தை அப்பொழுது தான் பிறந்து தனது கண்ணை அகலத் திறந்து கொண்டிருக்கும், இன்னொரு கோடியில் இந்த உலக வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைவதற்காக ஒரு மனிதனின் கண்கள் மூடிக் கொண்டிருக்கும். உயிர்களின் ஜனனமும், மரணமும் யாருடைய விருப்பத்தின் அடிப்படையிலும் நிகழ்வதில்லை, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், இறைவனை அன்றி யாருடைய கட்டுப்பாட்டிலும் அது இல்லை.
ஒவ்வொரு உயிரும், அதற்கு வழங்கப்பட்டுள்ள தவணை வரைக்கும் தான் தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்க முடியும். அத்தகைய மரணத்தினைப் பற்றி திருமறை மனிதர்களுக்கு சற்று நெகிழ்ச்சியுடனேயே விவரித்துக் காட்டுகின்றது, சுருக்கமான வார்த்தைகளில் நிறைவான அர்த்தங்களுடன்..!
''நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்'' (என்று) (நபியே!) நீர் கூறுவீராக. (ஜும்ஆ : 8)
அநேகமான மக்கள் மரணத்தைப் பற்றிய சிந்தனையற்றவர்களாக இருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் அதிவேகமான வாழ்க்கை ஓட்டத்திற்கிடையே, ஒவ்வொருவரும் தங்களது சொந்த அலுவல்களிலேயே மூழ்கி விடக் கூடியவர்களாக இருக்கின்றோம். இன்றைய தினத்தில் யாரைச் சந்திப்பது, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடுத்த திட்டம் என்ன? குழந்தைக்கு எந்தப் பள்ளிக் கூடத்தில் இடம் பிடிப்பது, அதிகரித்து வரும் தேவையை எவ்வாறு நிறைவு செய்யலாம், எந்தக் கலர் ஆடையை இன்றைக்கு அணிவது, இன்றைக்கு என்ன சமைப்பது என்பது உட்பட வாழ்க்கையின் அனைத்துத் தேவையையும் மனிதர்களாகிய நாம் பார்த்துப் பார்த்து ரசனையுடன் செய்கின்றோம். இந்த அலுவல்களுக்கிடையே ஒருவர் வந்து மரணத்தைப் பற்றி சிறிது ஞாபகமூட்டினால் போதும், அபசகுணம் படைத்த மனிதர் வந்து விட்டார் என்று முகத்தைச் சுழித்து விடுவோம். மரணம் என்பது வயதாகி விட்ட காலத்தில் தானே வரும் என்ற இறுமாப்புத் தான் நம்மை அப்படிச் சிந்திக்கத் தூண்டி விட்டது. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், தாயின் தொப்புள் கொடியை அறுத்துக் கொண்டு நீங்கள் பிறக்கும் பொழுது, இத்தனை காலம் தான் வாழ்வீர்கள் என்ற உத்தரவாதப் பத்திரத்தோடு வந்துதிக்கவில்லை. ஒவ்வொரு உங்களது கண்ணுக்கு முன்பு மரணம் என்பது நிச்சயம் என்பதை சாட்சியமளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள், உங்களைச் சுற்றி வாழ்ந்த எத்தனையோ நபர்கள் இன்றைக்கு உங்களிடையே இல்லை, அவர்கள் எங்கே சென்றார்கள், அவர்களது வீட்டுக் கதவைத் தட்டிய மரணம், நம்முடைய வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு எத்தனை நேரம் ஆகும். இத்தகைய தருணத்திற்காக நாமும் காத்திருக்கின்றோம், காத்திருக்கின்றேன் என்ற சிந்தனை ஏன் நமக்கு வருவதில்லை..!
நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போலல்ல.., மரணம் என்பது வந்து விட்டால், உங்களது வாழ்வின் அனைத்து 'நிதர்சனங்களும்' சடுதியில் நின்று விடும், மறைந்து விடும். இவை இவை நிரந்தரமானவை என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த உங்களது எண்ணத்தில் மண் விழுந்து விடும். பழைய நாட்களைத் திரும்பிப் பார்ப்பது என்பது அப்பொழுது நடக்காது. இப்பொழுது உங்களால் செய்ய இயலுகின்ற அனைத்து உடல் அசைவுகளைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பாருங்கள் : உங்களால் உங்களது கண்ணைச் சிமிட்ட முடிகின்றது, உங்களது உடம்பை அங்கும் இங்கும் அசைக்க முடிகின்றது, பேச, பார்க்க, செவியேற்க என்று அனைத்துமே உங்களது உடம்பின் அசைவுகள் நல்ல ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், இப்பொழுது உங்களது உடம்புக்கு மரணம் வந்து விடுகின்றது.., உங்களது உடம்பின் அமைப்பு என்ன., அதன் நிலை என்ன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்களேன்..!
இது தான் உங்களது கடைசி மூச்சு, இதற்குப் பின் சுவாசம் என்பது உங்களது உடலில் நடைபெறாது என்றால், உங்களது உடம்பு என்பது வெறும் சதைப் பிண்டம் தான். உங்களது உடம்பு, ஓசையின்றி, அசைவற்று.., மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே, உங்களது உடம்பு இறுதிக் குளிப்பை.., சுத்தப்படுத்தப்படும். கபனிடப்படும், சந்தூக்கில் வைத்து மையவாடிக்குக் கொண்டு செல்லப்படும். உங்களது உடம்பு மண்ணறைக்குள்.., மண் போட்டு மூடப்படுகின்றீர்கள். உங்களது சகாப்தம் முடிவடைந்து விட்டது. சற்று சில நாட்களுக்கு உங்களது மண்ணறையின் மீது சற்றுக் குவியலாக மண் தெரியும் வரைக்கும், ஆ.. இது தான் இன்னாருடைய மண்ணறை என்று தங்களுக்குள் கூறிக் கொள்வார்கள். அதன் பின் காற்று மழை என்று மேல் மண் கரைந்து தரையோடு தரையாக ஆகி விட்ட பின்பு, உங்களை எப்படி மறந்து போனார்களோ, அப்படியே உங்களை அடக்கப்பட்ட இடத்தையும் மறந்து போவார்கள்.
இன்னும் இஸ்லாம் அல்லாத நபராக நீங்கள் இருந்தால்.., முதல் மாதங்களில்.. அல்லது முதல் ஆண்டில், உங்களது கல்லறையைப் பார்க்க வருபவர்களின்.. உறவினர்கள், நண்பர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாகவே இருக்கும், இன்னும் அடிக்கடியும் கூட வந்து போவார்கள். நாட்கள் செல்லச் செல்ல.., வரும் நபர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். ஆண்டுகள் சென்ற பின்.., அந்தோ பரிதாபம், நினைவு கூறத் தான் யாருமில்லை. ஒன்று அவர்கள் உங்களை மறந்திருக்கக் கூடும், அல்லது உங்களைப் போலவே அவர்களும்..!?
உங்களது மரணம், உங்களது குடும்பத்தவர்களிடையே பல்வேறு மாறுதல்களை உண்டாக்கி இருக்கும். வீட்டில்.., உங்களது அறை.., படுக்கை காலியாக இருக்கும். அடக்கத்திற்குப் பின்னர் உங்களது பொருட்களில் சில வீட்டில் எஞ்சியிருக்கும், உங்களது உடைகள், நீங்கள் பயன்படுத்திய பொருட்களை தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டு விடும். மரணத்தை பதிவு செய்த பின் உங்களது அடையாள அட்டைப் பதிவேடு அதன் தகவல் ஏட்டிலிருந்து நீக்கப்பட்டு விடும். முதல் ஆண்டில், சிலர் உங்களை ஞாபகம் வைத்திருக்கக் கூடும்.இருப்பினும் நாட்கள் கரையக் கரைய உங்களது நினைவுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். நான்கு அல்லது தசாப்தங்களுக்குப் பின்னர் உங்களை நினைவு கூறுவோர்களின் எண்ணிக்கை விரல் விட்டு என்னும் அளவுக்கு மெலிந்து விடும். சற்று நூற்றாண்டுகள் கடந்தால் உங்களது சந்ததிகள் தான் எஞ்சியிருப்பர், உங்களை அடுது;த உறவுகள் யாரும் இருக்க மாட்டார்கள். உங்களை அவர்கள் நினைவு கூர்ந்தாலும் இல்லா விட்;டாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது.
உங்களது வாழ்வு நிறைவுக்கு வந்து விட்டது, உங்களது உடல் மண்ணறையில் வைக்கப்பட்டு விட்டது, இப்பொழுது அனைத்தும் அழிவுக்கு ஆரம்பப் புள்ளி ஆரம்பமாகி விடும். உங்களது உடல் மண்ணறையில் வைக்கப்பட்டவுடன், ஆக்ஸிஜன் என்ற பிராணவாயு இல்லாத நிலையில், பாக்டீரியாக்களும், புழுக்களும், பூச்சிகளும் உங்களது உடலைச் சுற்றி.., சிதைக்க ஆரம்பித்து விடும். அந்த நுண்ணியிரிகளிடமிருந்து வெளியாகக் கூடிய வாயுக்கள் உங்களது உடலை ஊதச் செய்கின்றன. உங்களது வயிற்றிலிருந்து ஆரம்பமாகி, உடலின் அமைப்பை சீர்குலைக்க ஆரம்பிக்கின்றது. மார்புப் பகுதியில் உருவாகக் கூடிய வாயுக்களின் அழுத்தத்தின் காரணமாக வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் இரத்தக் கசிவுகள் வெளியேற ஆரம்பிக்கின்றன. சிதைவுகள் தொடர, உடம்பு, முடி, நகம், பாதங்கள், கைகள் என அனைத்தும் தன்னிலை இழக்கும். உடம்பின் வெளிப்புறங்களில் மாற்றங்கள் ஆரம்பிக்க, அதனைத் தொடர்ந்து உள்ளுறுப்புக்களான சுவாசப்பை, இதயம், ஈரல், சிறுநீரகம் என்று தொடர்கின்றது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் வயிற்றுப் பகுதியில் மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, நுண்ணியிரிகள் வெளியிடும் வாயுக்களின் அழுத்தத்தைத் தாங்க இயலாத நிலையில் வயிறான வெடித்து விடுகின்றது, வெறுக்கத்தக்க துர்நாற்றத்தைக் கிளப்பி விடுகின்றது. கபால ஓட்டுடன் இணைந்திருக்கக் கூடிய விசேஷ தசைநார்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. தசையும், மெல்லிய திசுக்களும் முற்றிலும் மக்கி விடுகின்றன. மூளையும் சிதைய ஆரம்பித்து, அவை களி மண் போல ஆகி விடுகின்றன. இந்த நடைமுறைகள் யாவும் உடம்பில் போர்த்தப்பட்டிருக்கும் அனைத்து தசைப் பகுதிகளும் அழிந்து எலும்புக் கூடு மட்டும் மிஞ்சும் வரைக்கும் தொடர்கின்றன.
மரணம் என்ற ஒன்று நிகழ்ந்த பின்னர் இந்த உலகத்திற்கு மீண்டும் மீள்வது என்பதே கிடையாது. சாப்பாட்டு மேஜையின் மீது ஒன்றாக அமர்ந்து, குடும்பத்தினர்களுடன் உறவாடிக் கழித்த நாட்கள் எங்கே..! சமூகத்தில்.., அலுவலகத்தில்.., கண்ணியமிக்க பதவியில் இருந்த வாழ்க்கை எங்கே..! கண்டிப்பாக அந்த நாட்கள் திரும்பக் கிடைக்காது.
சுருக்கமாகச் சொன்னால், இப்பொழுது நீங்கள் ''உணர்வற்ற தசையும் எலும்பும்'' தான், அழிவிற்கான ஆரம்ப கட்டத்தில் அடிஎடுத்து வைத்து விட்டீர்கள். அதேநேரத்தில், கடைசி மூச்சை இழுத்து விட்டவுடன், உங்களது ஆன்மாவும் உங்களை விட்டும் பறந்தோடி விடும். உங்களது எச்சம்.., உங்களது உடம்பு..! இன்னும் சற்று நேரத்தில் மண்ணுக்கு இரையாக..!
ஆம், இந்த அத்தனை நிகழ்வுகளும் நடைபெற என்ன தான் காரணம்? என்று சிந்தித்திருக்கின்றோமா?
இறைவன் நாடியிருப்பானாகில், நம்முடைய உடம்பு இத்தகையதொரு பேரழிவைச் சந்தித்திருக்காது. இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு மிகப் பெரும் அத்தாட்சி இருக்கின்றது.
இந்த அழிவுக்குப் பின்னர் தான் அவன் உணர்ந்து கொள்வான், இந்த உடம்புக்குள் இன்னுமொன்றும் அடைக்கப்பட்டுள்ளது.., அது தான் அவனது ஆன்மா என்பதைக் கண்டு கொள்வான். அப்பொழுது நம்முடைய உடம்புக்குத் தான் அழிவு என்பது, அந்த அழிவுக்குப் பின்னாலும் ஒரு வாழ்க்கை ஒன்றிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்வான்.
இன்னும் அதிகமாக, தான் எப்பொழுதும் உயிர் வாழ்வோம், இந்த உடம்பு எப்பொழுதுமே அழியாது என்று எண்ணி எண்ணி, தன்னுடைய உடம்புக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்கின்ற மனிதன்.., இந்த உலகமும் நிலையானதல்ல, இந்த உடம்பும் நிலையானதல்ல, அழிவைச் சந்திக்கக் கூடியவைகளே என்பதை மரணம் கதவைத் தட்டியவுடன் உணர்ந்து கொள்வான். தமாதமாகி விட்டதொன்று.., உடம்பை புழுக்கள் உண்டு கொண்டிருக்கும் நிலையில் சத்தியம் எது என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும், மண்ணோடு மண்ணாகி வெறும் எலும்புக் கூடாக ஆகி விடப் போகின்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். அந்த நாள் இப்பொழுதோ.., அப்பொழுதோ..! என்பதையும் கூட..!
இந்த மரணமும், அதற்குப் பின் அவன் அடையப் போகும் கதியைப் பற்றியும் அவன் அறிந்திருந்தும் கூட, அந்த அறிவானது அந்த நிலைக்கு தான் போய் விடக் கூடாது என்று நினைக்கத் தூண்டுகின்றது. நிச்சயமான ஒன்றை விட்டும் அவன் வெருண்டோடுகின்றான். அதன் காரணமாகவே மரணம் என்பது மிகப் பெரியதொரு பிரச்னையாகி விடுகின்றது. நல்லடக்க நிகழ்ச்சிகள் அல்லது நெருங்கி உறவுகளில் எவராது மரணித்து விட்டால், அப்போதைக்கு அந்த மரணத்தின் அதிர்வுகள் அவனது மனதை சற்று அசைத்துப் பார்க்கின்றன. இருப்பினும், மரணம் என்பது நம்மைப் பொறுத்தவரையில் சற்று தொலைவில் தான் என்று எண்ணிக் கொள்ள ஆரம்பிக்கின்றோம். தூக்கத்தில் உயிர் துறந்தவர்கள் அல்லது விபத்துக்களில் உயிர் துறந்தவர்கள் ஆகிய அனைவரும் நம்மைப் போலவே மிக நீண்ட காலம் உயிர் வாழ்வோம் என்று தான் எண்ணி இருப்பார்கள். ஆனால் கைசேதம்.., அவர்களையும் அறியாமல் அது அவர்களை அணைத்து விட்டது.
அலுவலக பரபரப்புகளில், வியாபார கொடுக்கல் வாங்கல்களில், சந்தோஷமான நிகழ்வுகளில்.., இதயத்தை தொலைத்து விட்டு, உலகத்தை மறந்த அந்த நாட்களில் மறுநாள் நாம் உயிரோடு இருப்போமா இதே சந்தோஷம் நிலைக்குமா என்று எவர் தான் எண்ணிப் பார்க்கின்றார்கள்.., அடுத்த நாள் பத்திரிக்கைகளில் நமதுமரணத்தைத் தாங்கி செய்தி வரும் என்பதை யார் தான் நினைத்துப் பார்க்கின்றார்கள். இந்த வரியை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது., ஒருவேளை அது நிதர்சனமாகக் கூட ஆகி விடலாம். அதாவது நமக்கென்ன இப்பொழுது.., இறப்புக்கு இன்னும் நாள் இருக்கின்றது என்று எண்ணிக் கொள்ளலாம், இன்னும் நாம் சாதிக்க வேண்டியது ஏராளம் இருக்கின்றது என்றும் எண்ணிக் கொள்ளலாம். இருப்பினும், இது நிச்சயமானதொன்றை தவிர்ப்பதற்கானதொரு முயற்சியே.., ஆனால் உங்களது அந்த முயற்சி நிறைவேறாது, அதிலிருந்து நீங்கள் தப்பிக்கவும் இயலாது.
ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல் அஹ்ஜாப் : 16)
மனிதனுடைய பிறப்பே தனிமையிலிருந்து ஆரம்பமாகி, அவனது முடிவும் தனிமையில் தான் முடியப் போகின்றது. இருப்பினும், அவன் உயிர்வாழக் கூடிய நாட்களில் ஆதிக்க மனப்பான்மைக்கு அடிமையாகி விடுகின்றான். அதிகம் வேண்டும்.., இன்னும் இன்னும் என்று அவனது வாழ்க்கையையே தன்னுடைய இருப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கழித்து விடுகின்றான். ஆனால் அவன் சம்பாதித்த எதனையும் அவன் கொண்டு போகப் போவதில்லை.
அவனது உடம்பு கூட மிகவும் விலை மலிந்ததொரு துண்டுத் துணியில் தான் சுற்றபட இருக்கின்றது. உடம்பானது இந்த உலகத்திற்கு எப்படி அது தனியாகவே வந்ததோ, அதைப் போன்றே தனியாகவே செல்ல இருக்கின்றது. அவன் கொண்டு செல்லும் பொருள் ஒன்றை ஒன்று தான்.., அந்த மிகப் பெரிய சொத்து எதுவென்றால்.., இறைநம்பிக்கையாளனாக மரணித்தானா அல்லது இறைநிராகரிப்பாளனாக மரணித்தானா.., என்பதேயாகும்.
, ,