குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

7.6.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இரக்க மனப்பான்மையும், மரியாதைப் பண்பும்
இரக்க மனப்பான்மையும், மரியாதைப் பண்பும்
அஷ்ஷெய்க் ர்.ஆ. மின்ஹாஜ் இஸ்லாஹி

--------------------------------------------------------------------------------

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சிறியோருக்கு இரக்கம் காட்டப்படாதவரும், பெரியோரின் மதிப்பை உணராதவரும் எம்மைச் சார்ந்தவரல்ல. (ஆதாரம் : அபூதாவூத், திர்மிதி).
இந்த ஹதீஸ் தாரமி, முஸ்னத், அஹமத் போன்ற கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது. சமூக வாழ்வு வளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைவதற்கு மனிதனை மதித்தல் அடித்தளமாக அமைகிறது. இஸ்லாம் மனிதனை மதிக்குமாறு கட்டளை இட்டதுடன் அதற்கான வழிகாட்டல்களையும் முன்வைக்கிறது. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டு இறைவனின் ரூஹ் ஊதப்பட்டிருப்பதே அவன் மதிக்கப்படுதவற்கு பிரதான காரணமாகும். இந்த அடிப்படைத் தத்துவப் பின்னணியில் நாம் இந்த ஹதீஸை விளக்குவோம்.

சிறார்கள் நாளைய தலைவர்கள். இன்றே அவர்களை நல்ல முறையில் வளர்த்துப் பரிபாலித்திட வேண்டிய கடப்பாடு மூத்தவர்களைக் சார்ந்துள்ளது. தனது ரூஹ் ஊதப்பட்ட மானிட வர்க்கதின் மீது அளவற்ற அருளையும், நிகரற்ற அன்பையும் பொழிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அவனுக்கு எதிராக மனிதன் செயலாற்றும் போது கூட அவனது அன்பு அவனது கோபத்தை விஞ்சி நிற்கிறது. இந்தப் பிரபஞ்சம் அன்பினால் நிர்வகிக்கப்படுகிறது. அப்படியென்றால் இறைவனின் ரூஹ் ஊதப்பட்ட சிறார்களுடன் மூத்தவர்கள் அன்பைப் பரிமாறுவது கட்டாயக் கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் பிள்ளை வளர்ப்பின் போது அன்பை அடிப்படையாகக் கொண்ட பயிற்றுவிப்பு முறை அவசியம் என்பதை உணர்த்துகிறார்கள். கடும்போக்கு, வன்மை, சட்டம், பலாத்காரம், பலவந்தம், சாட்டை, துப்பாக்கி போன்றவை சாதிக்க முடியாதவற்றை அன்பு, இரக்கம், பாசம், நேசம், மென்மை போன்ற பண்புகள் சாதித்து விடுகின்றன. எனவே தான், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அவன் மென்மையை விரும்புகிறான். கடும் போக்கு - அதைத் தவிர்;து உள்ள பண்புகளினால் உருவாக்கத்தை நல்விளைவுகளை மென்மை என்ற பண்பு மூலம் அல்லாஹ் தோற்றுவித்து விடுகிறான் (முஸ்லிம்).
பொதுவாக மூத்தோர், சிறார்கள் விடயத்தில் கடும்போக்கைப் பிரயோகிக்கின்றனர். ஒரு போலிஸ்காரனைப் போல அவர்களுடன் நடந்து கொள்கின்றனர். பெற்றோர் தங்கள் குடும்ப வாழ்வில் சந்திக்கின்ற எரிகின்ற பிரச்சினைகள், உளைச்சல்கள் முதலியவற்றின் அடியாக உருவாகின்ற எரிச்சல்கள், எதிர்ப்புணர்வுகள், கோபம், வெறுப்புணர்வுகளை சிறார்களின் முன் கொட்டுகின்றனர். கண்டிப்பும், தண்டிப்பும் பிள்ளை வளர்ப்பில் பரவி வியாபித்துக் காணப்படுகின்றன. இதனடியாக சிறார்கள் உளரீதியாகப் பாதிப்படைந்து சிந்தனா ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நலிவடைந்து விடுகின்றனர். சமூகத்தில் நற்பிரஜையாக வாழ்வதற்குப் பகரமாக சிறார்கள் வன்முறையாளர்களாக வாழத்தலைப்படுகின்றனர். பெற்றோரின் கண்டிப்பும், தண்டிப்பும் அன்பின் அடியாக உருவானது என்று ஒரு பிள்ளை உளத்திருப்தியடைகின்ற அளவு ஏலவே பெற்றோர் மற்றும் மூத்தவர்கள், சிறார்களுடன் அன்பு பாராட்டி அவர்களது உள்ளத்தை சம்பாதித்திருக்க வேண்டும். இத்தகைய விழுமியத்தை அண்ணலாரின் நடைமுறை வாழ்வில் நாம் அவதானிக்க முடிகிறது. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மதீனாவிலுள்ள சிறுமி ஒருத்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அவள் விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்வாள். (புகாரி)
அனஸ் (ரலி) அவர்கள் சிறார்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் சொல்லி விட்டு, நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் (சிறார்களுடன்) இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று கூறுவார்கள் (புகாரி, முஸ்லிம்).
அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் ஒரு ரஸுல் மதீனாவின் ஆட்சித் தலைவர். சிறார்களுக்கு இரக்கம் காட்டி, கூடிப்பழக அவர்களுக்கு நேரம் இருக்கிறது. எமது அவசரமான உலகில் சிறார்களுகு;கு இரக்கம் காட்டி, கூடி விளையாடி அவர்களது ஆதங்கங்களை உள்வாங்கிக் கொள்ள மூத்தவர்கள் நேரம், இடம் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமே!
சிறுவர்களுக்கு இரக்கம் காட்டப்படுவது போல் பெரியோர் மதிக்கப்படல் வேண்டும். பெற்றார் மற்றும் மூத்தோர் வயோதிகர், ஆலிம்கள், ஸாலிஹீன்கள் உள்ளிட்ட அனைவரும் மதிக்கப்படல் வேண்டும். இவர்கள் மதிக்கப்படாமைக்கு இவர்கள் அந்தஸ்துகள் பிறரால் உணரப்படாமை பிரதான காரணமாகும். எனவே தான் ஹதீஸின் மூலத்தில் எவர் உணரவில்லையோ என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பெரியோரின் கண்ணியத்தை உணராதவர், அறியாதவர் அவர்களை எவ்வாறு கண்ணியப்படுத்துவார்? எனவே தான் இஸ்லாம் அறிவு, தெளிவு, ஆகியவற்றின் அடியாக கடமைகளை விதிக்கிறது. அறிவும், தெளிவும், உணர்வும் இல்லாதவரிடத்தில் கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பண்மை எதிர்பார்க்க முடியுமா?
அல்குர்ஆன் ஏகத்துவக் கொள்கைக்கு அடுத்தபடியாக பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. மனிதனது உலகப் பிரவேசத்துக்கு முழு முதற் காரணமாக அல்லாஹ் இருக்கின்றான். அடுத்ததாக பெற்றோர்கள் இருக்கின்றனர்.
மனிதர்களில் நான் நல்லுறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் யார்? என ஒரு நபித்தோழர் கேட்க, மூன்று முறையும் உனது தாய் என பதிலளித்த அண்ணலார், நான்காவதாக அவர் வினவிய போது, உனது தந்தை என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தந்தை சுவனத்தில் நடுவாயில், நீ விரும்பினால் அதைப் பாதுகாத்துக் கொள்! நீ விரும்பினால் உடைத்து விடு. (திர்மிதி).
சுவனப் பிரவேசத்துக்கு தாயும், தந்தையும் காரண கர்த்தாக்களாக இருக்கின்றனர் என்பதை மேற்படி ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
அவ்வாறே மதிக்கப்பட வேண்டியவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனங்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு சமூகத்துக்கு அல்குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தவர் தொழுகை நடாத்தட்டும். குர்ஆனைக் கற்றதில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் ஸுன்னாவைக் கற்றுத் தேர்ந்தர் தொழுகை நடத்தட்டும். சுன்னாவைக் கற்றதில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத் செய்தவர் தொழுகை நடத்தட்டும். ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத் செய்ததில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் அவர்களில் வயதால் மூத்தவர் அவர்களுக்கு தொழுகை நடத்தட்டும்.. .. ..(முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனக்குப் பின்னால் (ஸப்பிலே) பருவ வயதை அடைந்தோரும், அறிவாளிகளும் நிற்கட்டும். அதற்கடுத்த ஸப்பிலே அடுத்த தரத்தில் உள்ளவர்கள் நிற்கட்டும் என மூன்று முறை கூறி விட்டு, கடைத்தெருக் கூக்குரல், குழப்பங்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன் என்று கூறினார்கள். (முஸ்லிம்).
மேற்படி ஹதீஸ்கள் அல்குர்ஆன் சுன்னாவைக் கற்றவர்களையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், மூத்தவர்களையும், பருவ வயதை அடைந்தவர்களையும், அறிவாளிகளையும் இறைத்தூதர் (ஸல்) அவாகள் மதித்த மனப்பான்மையை எமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
மூத்தோரை மதித்தல், சங்கை செய்தல், மரியாதை செய்தல், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கல் முதலியன வஹியுடன் நேரடி சம்பந்தமுடைய விடயங்கள் என்பதைக் கீழ்வரும் நபிவாக்கு எடுத்தியம்புகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் பல்துலக்குவதைப் போல கனவு கண்டேன். அப்போது இருவர் என்னிடம் வந்தனர் அவ்விருவரில் ஒருவர் அடுத்தவரை விட மூத்தவர். நான் பல்துலக்கும் குச்சியை சிறுவருக்குக் கொடுத்தேன். அவ்வேளை, பெரியவருக்குக் கொடுப்பீராக! என எனக்குக் கூறப்பட்டது. உடனே நான் அதை பெரியவருக்குக் கொடுத்தேன். (முஸ்லிம்)
இவை வெறும் தத்துவப் பிதற்றல்கள் அல்ல. மாறாக அண்ணலார் தமது நடைமுறை வாழ்வில் செயற்படுத்தியவைகள்.
நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களது வீட்டுக்குச் சென்றால், அவர்கள் அண்ணலாரை நோக்கி எழுந்து நின்று அவர்களது கரத்தை முத்தமிட்டு தங்களது இடத்தில் அமரச் செய்வார்கள். அவ்வாறே பாத்திமா (ரலி) அவர்கள் நபியவர்களின் வீட்டிற்குச் சென்றால் அண்ணலார் அவர்களை நோக்கி எழுந்து நின்று அவர்களது கரத்தை முத்தமிட்டுத் தங்களது இடத்தில் அமரச் செய்வார்கள், என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
இத்தகைய மரியாதைப் பண்பு நபித்தோழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்தன. ஸமூரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நான் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களது காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து ஹதீஸ்களை மனனம் செய்திருந்தேன். அங்கே என்னை விட வயதில் மூத்தவர்கள் இருந்தமை அந்த ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் என்னைத் தடுத்துக் கொண்டிருந்தது. (புகாரி, முஸ்லிம்).
ரயீஸுல் முபஸ்ஸிரீன், தர்ஜுமானுல் குர்ஆன் என்ற சிறப்புப் பட்டங்களைப் பெற்ற இளைய நபித்தோழரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், மூத்த நபித்தோழரான ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களது வீட்டுக்கு ஹதீஸ் ஒன்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்காகச் சென்று கதவோரம் கதவைத் தட்டாமல் உட்கார்ந்திருந்தார்கள். தூசு கலந்த காற்று முகத்தில்பட்டது. முகத்தைக் கரங்களினால் மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். வெகு நேரம் கழித்து கதவு திறக்கப்பட்டது. அங்கே அமர்ந்திருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்ளைப் பார்த்து ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள், அண்ணலாரின் பெரியப்பாவின் மகனே!? நீங்கள் ஆளனுப்பி இருந்தால் நானே வந்திருப்பேனே! என்றார்கள். அறிவு வீடு தேடி வரமாட்டாது. அதைத் தேடி நான் வந்துள்ளேன். ஹதீஸ் ஒன்றை உங்களிடம் நான் கேட்டுப் பெற்றுக் கொள்ள வந்துள்ளேன் என்றார்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். பிறகு ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள். உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு அடிமை போல நின்றார்கள். மேலே இருந்த ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கடிவாளத்தை விடுங்கள் என்றார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆலிம்களை இவ்வாறு தான் சங்கை செய்யுமாறு நாம் பணிக்கப்பட்டுள்ளோம் என்றார்கள். அப்போது ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள், உங்களது கரத்தை நீட்டுங்கள் என்று கூறி, அவர் கையை நீட்டியவுடன் அதை முத்தமிட்டு விட்டு, இவ்வாறு தான் அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவர்களை சங்கை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளோம் என்றார்கள்.
இத்தகைய மரியாதைப் பண்புகள் இன்று வழக்கொழிந்து சென்று கொண்டிருக்கின்றன. பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து மரியாதைப் பண்புகள் விடைபெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன. மூத்தோருக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமை, எதிர்த்துப் பேசுதல், பணிவைத் தவிர்த்து மூத்தோருக்கு முன் துணிவு கொள்ளுதல், ஏசுதல், தூற்றுதல், பாதையில் செல்லும் மூத்தோரை மதிக்காது வாகனத்தில் வேகமாகச் செல்லுதல், பரிகாசம் செய்தல், சிநேகிதர்களுடன் உரையாடுவதைப் போல மூத்தவருடன் உரையாடுதல் முதலிய துர்க்குணங்கள் இளைய தலைமுறையினரிடம் பரவலாக காணப்படுகின்றன.
இன்று இஸ்லாத்தின் பெயரிலேயே பண்பாட்டு வீழ்ச்சிக்கு வித்திடப்படுவது விசனிக்கத்தக்கது. அதாவது நபி (ஸல்) அவர்களது ஹதீஸை தவறாக விளங்கி பெரியோருக்கு எழுந்து நின்று மரியாதை செய்வது விலக்கப்பட்டுள்ளது என்ற அந்நியமான கருத்தும் பரப்பப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அந்நியர்கள் ஒருவரை ஒருவர் மகத்துவப்படுத்தும் வகையில் எழுந்து நிற்பதைப் போல நீங்களும் எழுந்து நிற்காதீர்கள். (அஹ்மத்).
மேலும் கூறினார்கள் :
தனக்காக அடியார்கள் எழுந்த நிற்க வேண்டும் என்று விரும்புகின்றவன் நரகத்தில் ஒரு இருப்பிடத்தை எடுத்துக் கொள்ளட்டும். (முஸ்னத் அஹ்மத்).
இணைவைப்பு, தனிநபர் வழிபாடு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் பூஜிக்கும் தோரணையில் அந்நியர்களுக்கு ஒப்பாகும் வகையில் எழுந்து நிற்பதையும் ஆணவக்காரர்கள், அடக்கியாளுகின்றவர்கள் ஆகியோருக்காக எழுந்து நிற்பதையும் இந்த ஹதீஸ்கள் தடுக்கின்றன. மாறாக, பெற்றோர்கள், நல்லோர்கள், ஆசிரியர்கள், ஆலிம்கள் போன்றோருக்காக எழுந்து நிற்பதை ஹதீஸ்கள் மறுத்துரைக்கவில்லை. ஹதீஸின் வரலாற்றுப் பின்னணியையும், அதன் உள்ளார்ந்த கருத்துக்களையும், விளக்கவுரைகளையும் கவனத்திற் கொள்ளாமல் ஹதீஸின் வசனங்களுடனும், வரிகளுடனும் கூடுகட்டி வாழுகின்றவர்களே ஆரோக்கியமற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். இத்தகைய கருத்துக்களே ஸலபுஸ் ஸாலிஹீன்களைக் கூட சாமான்யமாகக் கருதி, அவர்களைக் கூட மதிக்காமல் நடந்து கொள்கின்ற நிலைக்கு வழி வகுத்துள்ளன. இத்தகையவர்கள் நாம் விளக்கத்திற்காக எடுத்துள்ள ஹதீஸில் இடம் பெற்று எம்மைச் சார்ந்தவரல்ல என்ற எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டார்களா?
ஆகவே, சமூக வாழ்வில் இரக்க மனப்பான்மையும், மரியாதைப் பண்பும் வளர்ந்தோங்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோமாக!
, ,