குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

27.7.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

விதியை பற்றிய சர்ச்சை !
ஏகஇறைவனின் திருப்பெயரால்...




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரையில் ஜகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட அரசு அதிகாரி ஒருவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வரப்பட்டப் பொருட்களில் சிறிதை ஒதுக்கி இது எனக்காக தனிப்பட்ட முறையில் மக்கள் வழங்கியது என்று அன்றைய ஆட்சித் தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூற, அதைக் கேட்ட அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டு மக்களைத் திரட்டி அச் செயலைக் கண்டித்து உரை நிகழ்த்திய சம்பவத்தைப் பார்த்தோம்.

அண்ணல் நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய சொந்த விஷயத்திற்காக யார் மீதும் எப்பொழுதும் கோபம் கொண்டதே கிடையாது, தருணம் பார்த்து பழி தீர்த்ததும் கிடையாது. பழி தீர்த்துக் கொள்வதற்கு அருமையான தருணங்கள் பல முறை அமைந்தும் அதைப் பயன் படுத்திக் கொள்ளவில்லை.

உஹது யுத்த களத்தில் ஷஹீதாக்கப்பட்ட அவர்களுடைய ஆருயிர் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) அவர்களுடைய நெஞ்சைப் பிளந்து ஈரலை மெண்டு துப்பிய ஹிந்தா(ரலி) அவர்களும், அவர்களை குறி வைத்து கொன்ற வஹ்சி(ரலி) அவர்களும், இஸ்லாத்தை வேறோடுப் பிடுங்கி சாய்த்து விட வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டி செயல்பட்ட அபூசுஃப்யான்(ரலி) அவர்களும் அண்ணல் அவர்களுக்கு முன்னாள் கூணிக் குறுகி நின்று கொண்டிருந்த பொழுது அவர்களைப் பழி வாங்க மக்கா வெற்றியை அண்ணல் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை மன்னித்து விட்டார்கள்.

சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்த செயலை யார் செய்தாலும் அது தங்களுடைய உறவினர்களாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமக்களாக இருந்தாலும் சரி அவர்களின் மீது அண்ணல் அவர்கள் கோபம் கொண்டு கண்டிக்காமல் விட்டதில்லை.

கோபத்தை எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டும் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே தொடர்ந்து இது போன்ற வரலாற்று சம்பவங்கள் எழுதப்பட்டு வருகிறது.

விதியைப் பற்றின சர்ச்சை !

ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் விதியைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து பொறுமையும், கருணையும் உருவான அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய முகம் கோபத்தால் மாறிவிட்டது.

'நாங்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களின் முகம் சிவக்குமளவுக்கு அவர்களின் கன்னங்களில் மாதுளை பிழிந்தது போல் கோபமடைந்தார்கள். 'இப்படித்தான் நீங்கள் கட்டளையிடப் பட்டுள்ளீர்களா? இதைத்தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாகக் கொண்டு வந்திருக்கிறேனா? இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகவே உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்: திர்மிதி 2216.

இந்த சர்ச்சையில் ஈடுபடுவதற்கு முன் அரும் பாடுபட்டுக் கட்டி வைத்திருந்த இறைநம்பிக்கை எனும் அசைக்க முடியாத கோட்டையின் அஸ்திவாரத்தை உலுக்கி ஆட்டம் காணச் செய்து விடும் மோசமான சர்ச்சை இது என்பதால் தான் அண்ணல் அவர்கள் விதியைப் பற்றின சர்ச்சையில் ஈடுபட்டோர் மீது கோபம் கொண்டு நீங்கள் இது விஷயத்தில் இனி சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்' என்றுக் கூறினார்கள். அதேப் போன்று இதற்கு முன் சென்ற சமுதாயத்தின் பேரழிவுக்கு விதியைப் பற்றின சர்ச்சையும் ஒரு காரணம் என்று சுட்டிக் காட்டினார்கள்.

விதியின் படியே தான் நடக்கும்

நன்மை, தீமைகள் அனைத்தும் விதியின் படியே தான் நடக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

இஸ்லாத்தின் நம்பிக்கைக்குரிய ஆறு அம்சங்களில் ஆறாவது அம்சமாகிய வல்கத்ரி ஹைரிஹி, வ ஷர்ரிஹி மினல்லாஹூத்தாலா (நன்மை, தீமை அனைத்தும் இறைவன் புறத்திலிருந்தே வருகிறது என்கிற கலா கத்ரை நம்பியே ஆக வேண்டும்.) ஆனால் அதை எவ்வாறு நம்பி செயல் பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று உலகில் பலர் சறுக்குவதற்கு தவறான விதி நம்பிக்கை ஒரு காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு காரியத்தை செய்வதற்கு முன் மசூரா(ஆலோசனை) செய்து அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி நடந்து கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு சொல்லி தந்திருக்கின்றார்கள்.

அமைப்பு சார்ந்த விஷயமாக இருந்தால் அதன் நிர்வாகிகளுடன் அமர்ந்து ஆலோசனை செய்து செயல் படுவோம், தனி விஷயமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நம்பிக்கைக்குரிய நண்பர்களுடன் அமர்ந்து ஆலோசனை செய்து செயல் படுவோம்;. இது அதிக பட்சம் வெற்றியை தரும் ஆனாலும் சில நேரங்களில் தோல்வியில் முடியலாம்;.

ரிசல்ட் நாம் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்றால் இதை விதியின் அமைப்பு என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் நிர்ணயித்து விட்டான். இன்னும் அவன் நாடியதைச்செய்து விட்டான்இ நூல் - முஸ்லிம் , 205.

இத்தனைப் பேருடைய அறிவு தோல்விவைத் தழுவி விட்டதே என்று களங்கக் கூடாது அல்லாஹ் நாடியப் பிரகாரம் (விதியின் படி) நடந்து விட்டது என்று நினைத்து அதை விட்டு விட வேண்டும். அடுத்த காரியங்களை தொடங்கும் போதும் அதேப் போன்ற மசூராவின் அடிப்படையில் தான் தொடங்க வேண்டும்.

இத்தனைப் பெரிய அறிவாளிகளை வைத்து இத்தனை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு நடத்திய காரியம் இத்தனைப் பெரிய தோல்வியைத் தழுவி விட்டதால் இனி வரக் கூடியக் காலங்களில் நம்முடைய அறிவில் தோன்றியப் பிரகாரம் மட்டுமே செயல்படுவோம் என்று எண்ணி விடக் கூடாது,

நாம் நடத்தும் மசூராவில் எடுக்கும் முடிவை அல்லாஹ் அறியக் கூடியவனாக இருப்பதால் அந்த மசூராவில் எடுத்த முடிவு சரியா ? தவறா ? அது நிறைவேறினால் நன்மை பயக்குமா ? தீமை விளையுமா ? என்பதையும் அறியக் கூடியவனாக இருப்பதால் அதை நிறைவேற்றுவான் அல்லது தடுத்து விடுவான்.

அதனால் அந்த மாற்றமான முடிவை தோல்வி என்று நினைத்து துவண்டு விடத் தேவை இல்லை. நம்முடைய முடிவுக்கு மாற்றமாக நடந்தாலும் அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால். ஒவ்வொரு நிலையிலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே எனக்கூற வேண்டும்- என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் ஹாகிம் 1, 499.

சிந்தித்து செயல்படுவதே சிறந்தது.

அனைத்தும் விதியின் படியே நடக்கிறதென்றால் நான் கெட்டவனாகியதற்கு விதியில் முன் கூட்டியே எழுதப்பட்டது தான் காரணம் எனது செயல்பாடுகள் காரணமில்லை என்று ஒருவன் கருதத் தொடங்கினால் அவன் நரகில் வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

இந்த நிலை தொடருமெனில் மனிதன் சிந்தித்து இயங்க முடியாத நிலை உருவாகி விடும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நபிதோழர்கள் ஒருமுறை இது விஷயமாகவும் கேட்டுத் தெளிவடைந்தனர்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்போது அவர்கள் தரையைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். திடீரெனத் தலையை வானத்தை நோக்கி உயர்த்திஇ 'உங்களில் எவராக இருந்தாலும் சொர்க்கத்தில் அவருக்குள்ள இடமும், நரகத்தில் அவருக்குள்ள இடமும் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவ்வாறெனில் நாங்கள் செயல் படாமல் இருக்கலாம் அல்லவா?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொருவரும் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளனரோ அதற்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளனர்' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அலி (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 2219

பிற உயிரினங்களை விட மனித இனத்திற்கு கூடுதல் அறிவு கொடுத்து படைக்கப்பட்டுள்ளக் காரணத்தால் மனிதன் தனது கூடுதல் அறிவைக் கொண்டு நன்மை, தீமைகளைப் பிரித்தறிந்து செயல் பட வேண்டும் அதற்காகத் தான் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளனரோ அதற்கு வாய்ப்பளிக்கப் பட்டுள்ளனர்; என்றுக் கூறி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இயங்கும் படிக் கட்டளை இட்டார்கள்.

நன்மை, தீமைகளைப் பிரித்தறிந்து செயல் பட மறுத்து விதியின் அமைப்புப் படியே நடக்கும் என்று கடிவாளம் பூட்டிய குதிரை போல் ஒரேப் போக்கில் (மனம் போனப் போக்கில்) போய்க் கொண்டிருந்தால் அது மறுமைக்கு மிகப் பெரிய ஆபத்தாக முடிந்து விடும்.

காரணம் நரகில் ஒருவரை குருடராக எழுப்படும் போது இறைவா! உலகில் நான் பார்வையுடையவனாக இருந்தேனே ! இப்பொழுது என்னை ஏன் குருடனாக எழுப்பினாய் ? என்று அவர் தனது இறைவனிடம் கேட்கும் பொழுது உனக்குப் பார்வை கொடுத்த என்னை நீ வணங்க மறுத்தாய் அதனால் இங்கு உன்னை குருடனாக எழுப்பப்பட்டாய் என்று இறைவன் பதிலளிப்பதாகவும்;(20:125)சக்கர் எனும் நரக நெருப்பில் எரிந்து கொண்டிருப்பவர்கள் நாங்கள் இறைவனை வணங்காததாலும், ஏழைக்கு உணவளிக்காததாலும் இந்த நிலையை அடைந்து கொண்டோம் என்று சொர்க்கவாசிகளிடம் கூறுவதாகவும்;(74:42) இன்னும் இது போன்ற பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருப்பதால் மனிதன் நன்மை, தீமைகளைப் பிரித்தறிந்து இயங்க வேண்டும்.
மனிதன் நன்மை, தீமைகளைப் பிரித்தறிந்து இயங்க வேண்டும் என்பதற்காகத்தான் நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் திருமறைக்குர்ஆனை இறைவன் இறக்கி வைத்தான்.

இறைவன் நீதியாளன் நம்முடைய நற்செயல்களுக்கு தகுந்தாற்போல் கூலி வழங்காமல் விட மாட்டான் அதற்கான கூலிகள் கை நிறைய கிடைக்கும் அதைக்கொண்டு சொரக்கம் செல்வோம் என்ற சிந்தனையில் ஒவ்வெருவரும் செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் இறுதித் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மார்க்கம் சம்மந்தமாகப் பேசிய அனைத்துமே அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தவைகள் தான்.

அதனடிப்படையில் விதியைப் பற்றி சர்ச்சை செய்யக் கூடாது எனும் அண்ணல் அவர்களின் கட்டளையை ஏற்று அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையில் நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு சுவனத்தில் நுழையும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக் 
, ,