குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

22.11.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அண்ணலாரின் வருகை
அண்ணலாரின் வருகை - அகிலத்திற்கு ஓர் அருட்கொடை!

(நபியே!)நாம் உம்மை அகிலத்திற்கோர் அருட்கொடையாகவே அன்றி அனுப்பிவைக்கவில்லை (21 : 107)

ரஹ்மத் எனும் அரபிச் சொல் பொருட் செறிவானது. கருணை புரிதல், கிருபை, மனம் இரங்குதல் போன்ற பல பொருள்கள் அதற்கு உண்டு.


இதே போன்று ஆலமீன் என்றால் அகிலம் முழுவதையும் அதாவது மனிதர்கள் உள்ளிட்ட பறப்பன, ஊர்வன போன்ற எல்லா உயிரினங்களையும் பிற படைப்புகளையும் குறிக்கும்.

ஆம், அண்ணல் நபிகளார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை இந்த எல்லா அர்த்தங்களிலும் ஓர் அருட்கொடையாகவே திகழ்கிறது!

நபிகளார்(ஸல்) அவர்கள் போதித்த மார்க்கம் தீனுல் இஸ்லாம் ரஹ்மத் ஓர் அருளாகும். இவ்வுலகை அறியாமை இருள் கவ்விப் பிடித்திருந்த காலத்தில் நம்மைப் படைத்த இறைவன் யார்? அவனை வணங்குவது எப்படி? என்பதை அறியாமல் மக்கள் வழிகேட்டில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் இவை யுகத்தை காப்பாற்ற உதித்த கலங்கரை விளக்கே அண்ணல் நபிகளார் போதித்த தீனுல் இஸ்லாம் எனும் சத்திய சன்மார்க்கம்!

தாருஸ் ஸலாம் எனும் அன்பும் அமைதியும் இன்பமும் பூத்துக் குலுங்கும் அருள் இல்லமாகிய சுவனபதி நோக்கி அழைப்பு விடுக்கிறது இஸ்லாம். இது எப்படிப்பட்ட சுவனம?

அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ பாவமான விஷயங்களையோ செவியேற்ற மாட்டார்கள். எது பேசப்பட்டாலும் அமைதி - சாந்தி அளிப்பதாகவே இருக்கும் (56 : 26)

மரணத்திற்குப் பிறகு சந்திக்க இருக்கும் வாழ்வில் சுவனபதி அடைய வேண்டுமானால் உலகில் வீணான காரியங்களில் - பாவம் பழிகளில் ஈடுபடக்கூடாது. இறைநம்பிக்கை ஏற்று நன்மையான செயல்கள் புரிந்து தூய வாழ்வு வாழ வேண்டும் என்கிற உண்மையை தெளிவு படுத்தும் அந்த மார்க்கம் ஓர் அருட்கொடை ஆகும்.

அண்ணல் நபிகளார் போதிக்கும் ஓர் அடிப்படைத் தத்துவம் உலகில் சமூகக் கூட்டு வாழ்வு சீர் பெற ஓர் அருட்கொடையாகத் திகழ்கிறது! அது இதுதான்:

அநீதி இழைத்தவனை மன்னித்துவிடு!

கேடு செய்தவனுக்கும் நன்மை செய்!

உனக்கு விரும்புவதையே உன் சகோதரனுக்கும் விரும்பு!
இத்தகைய உயர் போதனைகளைத் தாங்கிய நபிமொழிகள் வருமாறு:

அநீதி இழைத்தவரை மன்னிக்க வேண்டும் என்றும் உறவைத் துண்டித்தவருடன் இணைந்த வாழ வேண்டும் என்றும் வழங்க மறுத்தவனுக்கும் வழங்கிட வேண்டும் என்றும் என் இரட்சகன் எனக்குக் கட்டயையிடுகிறான்' (ஜாமிஉல் உஸூல்)

எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் எந்த மனிதனும் இறைநம்பிக்கை கொண்டவனாகத் திகழ முடியாது' (நூல்: புகாரி, முஸ்லிம்)

நாம் ஒவ்வொருவரும் நமக்கு எதை விரும்புகிறோம்? பிறர் நம்மை நேசிக்க வேண்டும், வெறுக்கக் கூடாது. நம்மிடம் நம்பிக்கை நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். யாரும் நமக்கு மோசடி செய்து விடக்கூடாது, நம்முடன் பிறர் இனிய சொல் பேச வேண்டும், மனம் புண்படும் படியாகப் பேசக்கூடாது என்று தானே விரும்புகிறோம்?

அதையே பிறருக்கும் விரும்பினால் அவ்வாறே பிறரிடம் நடந்து கொண்டால் இவ்வுலகில் சண்டை தகறாறுகள் ஏன் ஏற்படப் போகின்றன? ஏன் எங்கும் அமைதியும் சாந்தியும்தானே நிறைந்திருக்கும்!

இதையே குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. மிக்சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்பொழுது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர் கூட உற்ற நண்பராய் ஆகுவதைக் காண்பீர்' (41:42)

நம்மிடம் நல்லவிதமாக நடந்து கொள்பவரிடம் நாம் நல்லவிதமாக நடந்து கொள்வது நல்ல குணம் தான். ஆனால் பிறர் நம்முடன் தீங்காக நடந்தாலும் நாம் நல்லவிதமாக நடப்பதென்பது மிக உன்னதக் குணமாகும். அத்தகைய உயர்ந்த நற்குணத்துடன் நபியவர்கள் வாழவும் வழிகாட்டவும் செய்தார்கள். அது குறித்து தன் தூதரை அல்லாஹ் இவ்வாறு புகழ்கிறான்: நிச்சயமாக! நீர் மிகவும் மகத்தான குணநலத்;தின் மீது இருக்கிறீர் (68 : 4)

ஆம், தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது என்பது அது சாதாரண ஒன்றல்ல! அதனால் தான் மகத்தான குணநலன் என்று அல்லாஹ் புகழ்கிறான்.

துன்பம் இழைத்தோருக்கும் நன்மை செய்வது வாழ்வது கடினமானது. ஆனால் இலட்சியம் உயர்வாக இருந்தால் அது எளிதானதே! அந்த உயர்ந்த இலட்சியம் என்ன? நம்மைப் படைத்த இறைவனை அறிதல், அவன் பக்கம் நெருங்கிச் செல்லுதல் என்பது தான் அது.

அந்த வகையில் அல்லாஹ்வின் மகத்தான குணாம்சங்களான ரஹ்மத்-கருணை, கிருபையை நாம் நமது வாழ்க்கையில் மலரச் செய்தால் அவனது அன்பையும் நெருக்கத்தையும் பெறலாம்.

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இணையிலாக் கிருபையாளன். கிருபை செய்பவர்களை நேசிக்கிறான்.

மேலும் கூறினார்கள்;: இப்பூமியில் உள்ளோர் மீது கிருபை பொழியுங்கள்., வானத்திலுள்ள (இறை)வன் உங்கள் மீது கிருபை பொழிவான் (நூல்;: புகாரி, முஸ்லிம்)

நபிகளார்(ஸல்) அவர்கள் தாம் கருணை பொழியும் பண்பில் மக்கள் அனைவரினும் சிறந்து விளங்குகிறார்கள். குர்ஆன் ஓரிடத்தில் இவ்வாறு புகழ்கிறது:

(நபியே!) அல்லாஹ்வின் பெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டீர். கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் நீர் இருந்திருந்தால் இவர்கள் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள் (3 : 159)

உஹுத் போரில் நபிகளாரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. பல் உடைக்கப்பட்டது. அந்நேரத்தில் நபியவர்களே! இந்த எதிரிகள் நாசமாகட்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யக் கூடாதா? என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: சாபமிடுபவனாக நான் அனுப்பப்படவில்லை! நானோ ஓர் அழைப்பாளனாக, அருட்கொடையாகவே அனுப்பப்பட்டிருக்கிறேன். யா அல்லாஹ்! என் கூட்டத்தாருக்கு நேர்வழிகாட்டு! நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவர்!

நபிகளார்(ஸல்) அவர்கள் மனிதர்கள் மீது மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்கள் மீதும் அருள் பொழிபவர்களாத் திகழ்ந்தார்கள்.

ஒரு தடவை சொன்னார்கள்: தனது காலணியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அப்போது ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இந்த வாயில்லா ஜீவன்கள் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா? அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம், உயிருள்ள எந்த ஒரு படைப்புக்கு உதவினாலும் நற்கூலி உண்டு (நூல்: )

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;: ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் பின்னால் என்னை அமர்த்தியிருந்தார்கள். அன்ஸாரி ஒருவரது தோட்டத்தினுள் சென்றார்கள். அங்கே ஓர் ஒட்டகம்! நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் கனைத்தது. அதன் இரு கண்களும் கண்ணீர் வடித்தன. அதன் அருகே நபியவர்கள் வந்து அதன் காதுமடலைத் தடவிக்கொடுத்தார்கள். இதன் எஜமானன் யார்? என்று கேட்டார்கள். ஓர் அன்ஸாரி இளைஞர் வந்து அல்லாஹ்வின் தூதரே! இது எனது ஒட்டகம் தான் என்றார். அவரிடம் நபியவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ் உனக்கு உடமையாக்கிக் கொடுத்துள்ள வாயில்லாத இந்த உயிரினங்கள் விஷயத்தில் நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! இதோ! நீ இந்த ஒட்டகத்தைப் பட்டினி போடுகிறாய் என்றும் கஷ்டப் படுத்துகிறாய் என்றும் என்னிடம் முறையிடுகிறதே! (நூல்: அபூ தாவூத்)
, ,