குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.2.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அன்னை மைமூனா பின்த் ஹாரித் அல் ஹிலாலிய்யா (ரலி)
இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்கள்

மைமூனா பின்த் ஹாரித் அல் ஹிலாலிய்யா (ரலி)

குடும்பப் பின்னணி

அபூஹுரைரா (ரலி) மற்றும் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) ஆகியோர்கள் கூறுகின்றார்கள், அன்னையவர்களின் இயற் பெயர் பரா என்றிருந்ததை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா என்று மாற்றினார்கள்.


இவரது தந்தை ஹாரித் பின் ஹஸன் பனூ ஹலால் என்னும் கோத்திரத்தைச் சார்ந்தவராக இருந்தார். இவரது தாயாரின் பெயர் ஹிந்த பின்த் அவ்ஃப் என்பதாகும். இவருக்கு உம்மு அல் பழ்ள் லபாபா குப்ரா, லபாபா ஸஹ்ரா, அஸ்மா மற்றும் உஸ்ஸா ஆகிய சகோதரிகளும் இருந்தார்கள்.

உம்முல் பழ்ள் லபாபா குப்ரா என்ற சகோதரி பிரபலமான நபித்தோழரான அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இவர், கதீஜா (ரலி) அவர்களுக்குப் பிறகு, இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாவது பெண்மணி என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டவராவார்.

லபாபா ஸஹ்ரா வலீத் பின் முகீரா அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள், இவரது மகனான காலித் பின் வலீத் (ரலி) அவர்களால் இஸ்லாமிய சரித்திரம் போற்றும் மாபெரும் வீரராகவும், போர்ப்படைத் தளபதியாகவும் திகழ்ந்வராவார்.

அஸ்மா பின்த் ஹாரித் அவர்கள் உபை இப்னு கலப் க்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இன்னும் உஸ்ஸா அவர்கள் ஸைத் பின் அப்துல்லா பின் மாலிக் என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இன்னும் தாயாரின் வழியாக, அஸ்மா பின் உமைஸ், ஸலமா பின் உமைஸ், ஸலாமா பின்த் உமைஸ் ஆகியோர்கள் சகோதரி உறவு முறைகளுக்குரியவராவார்கள்.

அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் முதலில் ஜாபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இவரின் மூலமாக மூன்று மகன்களைப் பெற்றுக் கொண்டார்கள், அவர்களாவன : அப்துல்லா, அவ்ன், முஹம்மத் ஆகியோர்களாவார்கள். ஜாபிர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களை மணந்து கொண்டதன் பின், முஹம்மது பின் அபூபக்கர் என்ற மகவைப் பெற்றுக் கொண்டார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மரணமடைந்ததன் பின்னாள், அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை மணந்து கொண்டு, யஹ்யா என்ற மகவைப் பெற்றெடுத்தார்கள். ஸலமா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் ஹமஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். அன்னையவர்களின் மூன்றாவது சகோதரி ஸலாமா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்துல்லா பின் கஃப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.

எனவே, இதன் மூலம் அன்னையவர்களின் தாயாரான, ஹிந்த் பின் அவ்ஃப் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மாமியார் என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும், ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களுக்கும், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களுக்கும், ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கும், அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கும் மாமியாராக ஆன மாபெரும் நற்பேற்றுக்குரியவராகத் திகழ்ந்தார்கள்.

இன்னும், இவருடைய பேரர்களுள் ஒருவரான அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி), அவர்கள் இஸ்லாமிய போர்ப்படை வரலாற்றில் மிகப் பெரும் போர்வீரராகத் திகழ்ந்த நற்பேற்றுக்குரியவராகத் திகழ்ந்தார்கள். இவர் இறைவசனங்களுக்கு விரிவுரை வழங்குவதில் தனிச்சிறப்பு மிக்கவராகத் திகழ்ந்ததோடு, நபிமொழிகளில் நல்ல ஞானம் உள்ளதோடு, ஃபிக்ஹு - இஸ்லாமியச் சட்டக்கலையிலும் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இன்னுமொரு பேரரான லபாபா ஸுஹ்ரா வினுடைய மகனுமான இஸ்லாமியப் போர்ப்படைத் தளபதிகளுள் தனிச்சிறப்பு மிக்கவராகத் திகழ்ந்தவருமான காலித் பின் வலீத் (ரலி) அவர்களும், இவருக்கு பேரர் முறையாகும்.

எனவே, அன்னை மைமூனா (ரலி) அவர்கள் மிகச் சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டதோடு, இஸ்லாமிய உயிர்த்தியாகிகளையும், போர் வீரர்களையும், அறிஞர் பெருமக்களையும் கொண்டதொரு பாரம்பர்யத்தில் உதித்தவருமாவார்.

அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடிக்கு முன்பாக, மசூத் பின் அம்ர் பின் உமைர் தகஃபீ என்பவரை மணந்திருந்தார்கள், இருவருக்குமிடையே ஏற்பட்ட மணப் பொறுத்தமின்னை காரணமாக விரைவிலேயே அவர்களது மணவாழ்வு முடிவுக்கு வந்தது. அதன் பின் இரண்டாவது கணவராக, அப்துர் ரஹம் பின் அப்துல் உஸ்ஸா ஆம்ரி குரைஷி என்பவரை மணந்து கொண்டார்கள். திருமணமான சில நாட்களிலேயே இவர் இறந்ததன் பின், இளமையிலேயே விதவையான சோகத்துக்கு ஆளானார்கள் மைமூனா அவர்கள்.

ஹிஜ்ரி 7 ம் வருடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் மக்காவிற்கு உம்ரா செய்யும் நிமித்தமாகச் சென்றார்கள். அப்பொழுது மைமூனா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்தன் பின்னாள், உடனே இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணமும் நடந்தேறியது. இதன் மூலம் கண்ணியமிக்க இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களுள் ஒருவராக அன்னை மைமூனா (ரலி) அவர்கள் இணைந்து கொண்டார்கள்.

இந்தத் திருமண பந்தத்தின் மூலமாக, பனூ ஹிலால் கோத்திரமும் - பனூ தீம், பனூ அதீ, பனூ உமைய்யா, பனூ மக்சூம், பனூ அஸத் மற்றும் பனூ முஸ்தலக் கோத்திரத்தார்கள் திருமண பந்தத்தின் மூலமாக இணைந்து கொண்டது போல இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று கருதினார்கள். இவரது சகோதரிகளுள் ஒருவரான லபாபா குப்ரா அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களைத் திருமணம் செய்திருப்பதால், மைத்துனரும் இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சிறிய தந்தையுமான அப்பாஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, மைமூனா அவர்களை மணந்து கொள்ளும்படிக் கோரும் போது மறுக்க மாட்டார்கள் தானே என்று நினைத்தார்கள், அவர்கள் நினைத்தது போலவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு, மணமுடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பேசி விட்ட பின், ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் கூறி, திருமண ஏற்பாட்டைக் கவனிக்கும்படிக் கோரப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா வை நிறைவு செய்து விட்டு ஓய்வாக இருந்து கொண்டிருக்கும் பொழுது, மைமூனா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, தன்னையும் அறியாமல், ''இந்த ஒட்டகமும், இந்த ஒட்டகத்தை ஓட்டி வருபவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அற்பணமாகட்டும்'' என்று சந்தோஷத்தில் கூறி விட்டார்கள்.எனவே, இதன் மூலம் தன்னையே அன்பளிப்பாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு, அற்பணித்துக் கொண்டவர்கள் தான் அன்னை மைமூனா (ரலி) அவர்கள். மைமூனா (ரலி) அவர்களின் கோரிக்கைக்கு இணங்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னையவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.

ஆனால், மிகவும் பிரபலமான நபிமொழி ஒன்று இந்தச் சம்பவத்தை இப்படியும் விவரிக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவை நிறைவு செய்து விட்டபின், மைமூனா (ரலி) அவர்களை மணமுடிக்க விரும்புவதாகவும், அதற்கான சம்மத்தை அவரிடம் பெற்று வரும்படி ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை மைமூனா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைக்கின்றார் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள், இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று நிறைவேற்றி வைக்கும்படி, தனது மச்சானான அப்பாஸ் (ரலி) அவர்களை மைமூனா (ரலி) அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவை நிறைவு செய்து விட்டபின், திருமண ஏற்பாடுகளைச் செய்கின்றார்கள் அப்பாஸ் (ரலி) அவர்கள்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் :

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ராவை நிறைவு செய்து விட்டபின், மக்காவில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள். அப்பொழுது, நான்காவது நாள் அதிகாலையில் ஹாதிப் பின் அப்துல் உஸ்ஸா என்பவரும், அவருடன் சில இறைநிராகரிப்பாளர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'நாம் செய்து கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பிரகாரம், உங்களது உம்ராவை நிறைவேற்றிய பின் நீங்கள் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும், அதன்படி நீங்கள் உடனே இங்கிருந்து கிளம்புங்கள்' என்று கூறினார்கள்.

இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு கிளம்பி விடுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள், இன்னும் தனது திருமண விருந்தில் கலந்து கொள்ளும்படியும் அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

எங்களுக்கு, இந்த விருந்தில் கலந்து கொள்ளும் ஆர்வம் எங்களுக்கு இல்லை, நீங்கள் இங்கிருந்து கிளம்பி விடுவதொன்றையே நாங்கள் விரும்புகின்றோம் என்று அந்தக் குறைஷிகள் கூறினார்கள்.

இதற்குப் பின் அங்கிருக்க விரும்பாத இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்து கிளம்பி, மக்காவை விட்டும் ஒன்பது மைல் தொலைவில் உள்ள ஸரஃப் என்ற இடத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு, அங்கேயே தனது திருமண விருந்தை நடத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அடிமையான அபூ ரஃபி அவர்கள் ஒட்டகத்தில் வைத்து மைமூனா (ரலி) அவர்களை அழைத்து வந்தார்கள். இங்கு வைத்துத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பரா என்ற பெயரை மாற்றி மைமூனா என்ற பெயரைச் சூட்டினார்கள். இருவரும் உம்ரா வை நிறைவு செய்வதற்கான அனைத்து விதிகளையும் நிறைவுசெய்து விட்ட பின், உம்ராவைக் களைந்து அதன் பின் தான் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இஸ்லாமிய சட்ட விதிகளின்படி திருமணம் நடந்தேறியது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களைத் தான் இறுதியாக மணந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அன்னைக்கு 26 வயது தான் ஆகி இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவை அடைந்தவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகே ஒரு அன்னையவர்களுக்காக கட்டப்பட்டு, அங்கே அன்னையவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மற்ற மனைவியர்கள், அன்னையவர்களை அன்புடன் வரவேற்றார்கள்.

அன்னையவர்கள், தனது தொழுகையை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் வைத்து நிறைவு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில், மக்கா ஹரம் பள்ளியைத் தவிர்த்து, ஏனைய பள்ளிகளில் தொழுவதைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவது ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற காரணத்தினால், அவ்வாறு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

மக்காவில் உள்ள ஹரத்தில் ஒரு முறை தொழுவதானது மற்ற பள்ளிகளில் தொழுவதைக் காட்டிலும், ஒரு லட்சம் மடங்கு சிறப்பானது.

ஒரு வருடத்தில் பல குழுக்கள் மதீனாவிற்கு வந்திருந்தன. அவ்வாறு வந்த குழுக்களில் பனூ ஹிலால் கோத்திரத்தவரும் வந்திருந்தனர். அந்தக் கோத்திரத்தாருடன் அன்னையவர்களின் சகோதரியின் மகனான ஸியாத் பின் அப்துல்லா பின் மாலிக் ஆம்ரீ அவர்களும் வந்திருந்தார்கள். இவர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருக்கும் நேரத்தில் தனது சிற்றன்னையான மைமூனா (ரலி) அவர்களைச் சந்திக்குமுகமாக வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்பொழுது தனது வீட்டிற்குத் திரும்பி வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மைமூனா (ரலி) அவர்களுக்கு அருகில் முன்பின் தனக்குத் தெரியாத நபர் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும், மைமூனா (ரலி) அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டிருப்பதையும் பார்த்து நின்றார்கள். அப்பொழுது, அன்னை மைமூனா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இவர் எனது சகோதரியின் மகன், உங்களைச் சந்திக்க வந்த குழுவினருடன் வந்திருக்கின்றார் என்று அறிமுகப்படுத்தினார்கள். மிகவும் சந்தோஷமடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனையும் செய்தார்கள்.

மைமூனா (ரலி) அவர்கள் இறையச்சம் மிக்க பெண்மணியாகத் திகழ்ந்ததோடு, நற்பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்டவர்களாகவும் திகழ்ந்ததோடு, உறவுகளைப் பேணக் கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள். அன்னையவர்கள் இறந்த பொழுது, இதனையே புகழாரமாக அன்னையவர்களுக்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சூட்டினார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''இறைவன் மீது சத்தியமாக..! மைமூனா (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள், இறையச்சமிக்கவர்களில் ஒருவராக அவர் இருந்தார், இன்னும் இரத்த உறவு முறைகளைப் பேணியவராகவும் அவர் இருந்தார்'', என்று கூறினார்கள்.

மைமூனா (ரலி) அவர்கள் மிகச் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றிருந்த காரணத்தால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளை நன்கு மனனமிட்டிருந்தார்கள். நபிமொழிகளில், ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரால் அறிவிக்கப்பட்டவை 2200 நபிமொழிகளாகும். இவருக்கு அடுத்தபடியாக, உம்மு ஸலமா (ரலி) அவர்கள் 378 நபிமொழிகளையும், இவருக்கு அடுத்தபடியாக அன்னையவர்கள் 76 நபிமொழிகளையும் அறிவித்திருக்கின்ற நற்பேறு பெற்றவர்களாவார்கள்.

அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லா பின் ஷத்தாத் (ரலி), ஒபைத் பின் ஸபக் (ரலி), யஸீத் பின் அஸம் (ரலி), அப்துர் ரஹ்மான் ஸாயிப் அல் ஹிலாலீ (ரலி), உபைதுல்லா கௌலானி (ரலி), சுலைமான் பின் யாஸர் (ரலி) மற்றும் அதா பின் யாஸர் (ரலி) ஆகியோர் அன்னையவர்களை மேற்கோள் காட்டி நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.

ஸஹீஹ் புகாரீ நபிமொழித் தொகுப்பில் அன்னையின் மூலமாக, அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழியில்,

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கேட்டார், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! வெண்ணையக் கட்டியில் எலி விழுந்து விட்டால் என்ன செய்வது என்பது குறித்துக் கேட்டார். அதற்கு, எலியையும், அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் உள்ள பகுதியில் உள்ளவற்றை எறிந்து விட்டு, மீதி உள்ளவற்றை உண்ணுங்கள்'' என்று கூறினார்கள்.

முஸ்னத் அபூ யஃலா, முஸ்லிம், அபூதாவூத் மற்றும் நஸயீ ல் அன்னையின் பெயரைக் கொண்டு, ஒரு நபிமொழி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதனை அறிவிப்பவர், அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் மனைவியாவார்.

ஒருநாள் காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள், அதே போன்றே மாலையிலும் காணப்பட்டார்கள். மறுநாளும் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடனே காணப்பட்டார்கள். அப்பொழுது, உங்களைக் கவலைப்படச் செய்தது என்னவென்று மைமூனா (ரலி) அவர்கள் வினவினார்கள். அதற்கு, வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை வந்து சந்திப்பதாக வாக்குறுதி அளித்து விட்டுச் சென்றார்கள், அவர்கள் வருவதாகக் கூறிச் சென்ற நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை. இவ்வாறு என்றுமே நிகழ்ந்ததில்லை என்று கூறினார்கள். பின்பு, படுக்கைக்குக் கீழாக நாய்க் குட்டி ஒன்று படுத்திருப்பது தெரிந்தது. அதனை விரட்டி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்த திசையின் பக்கமாக, அது படுத்துக் கிடந்த இடத்தை தண்ணீரைக் கொண்டு கழுவியும் விடப்பட்டது. இதன் பின் உடனே ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகை தந்து விட்டார்கள். பின், ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், தாங்கள் கூறிச் சென்ற நேரத்திற்கு வராததன் காரணமென்னவென்றும், இது போல் எப்பொழுதும் நிகழ்ந்ததல்லவே..! என்றும் விசாரித்தார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ''நாயும், உருவப்படங்களும் எங்கே இருக்கின்றனவோ அங்கு வானவர்கள் நுழைய மாட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

மைமூனா (ரலி) அவர்கள் கடன் வாங்கும் பழக்கத்தைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஒரு முறை அவரது குடும்பத்தவர்களில் ஒருவர், இந்தப் பழக்கம் குறித்து அவரிடம் வினவிய பொழுது, அதற்கு பதில் சொல்லாமல் இருக்கவில்லை, மாறாக, இவ்வாறு பதில் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஒரு முஸ்லிம் கடன் வாங்கி, அதனை அடைப்பதற்கு அல்லாஹ் நிச்சயமாக உதவுவான் என்று முழுமையாக நம்பிக்கை கொண்டானெனில், அல்லாஹ் நிச்சயமாக (அந்தக் கடனை அடைப்பதற்கு) எதிர்பாராத விதத்தில் இருந்து ஏற்பாடு செய்து தருவான்''.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நோய் முற்றி இறுதி நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தக் கணத்தில், மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் இருந்தார்கள். பின்பு, தனது அனைத்து மனைவிமார்களையும் அழைத்து, தான் தனது இறுதி வாழ்வை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்தில் கழிக்க விரும்புவதாகக் கோரினார்கள். அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை அன்னாரது மனைவிமார்கள் முழுமையாகத் திருப்தி கொண்ட நிலையிலேயே ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்தில் அவர்களது மடியில் படுத்திருக்கும் நிலையிலேயே மரணத்தையும் தழுவினார்கள். அவர்களது பாசத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திலேயே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த அந்த நேர்த்தில், அவர்களது ஒன்பது மனைவிமார்கள் உயிருடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களாவான :

ஆயிஷா (ரலி), மைமூனா (ரலி), ஷஃபிய்யா (ரலி), ஜுவைரிய்யா (ரலி), சௌதா (ரலி), ஸைனப் (ரலி), ரம்ளா (ரலி), ஹிந்த் (ரலி) மற்றும் ஹஃப்ஸா (ரலி) ஆகியோர்களாவார்கள்.

ஹிஜ்ரி 51 ஆம் வருடம் முஆவியா (ரலி) அவர்கள் ஆட்சியாளராக இருந்து கொண்டிருந்த நேரத்தில் அன்னை மைமூனா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். மக்காவில் வைத்து அன்னையவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அந்த இடத்தில் அவர்களது மனது நிலை கொள்ளாமல், எதையோ நினைத்து தவித்துக் கொண்டிருந்தது. அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடித்த இடமான மக்காவின் புறவெளிப்பகுதியான சராஃப் க்கு அன்னையவர்களை அன்னையவர்களது உறவினர்கள், எடுத்துச் சென்றார்கள். எந்த இடத்தில் தனது திருமண இரவை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் கழித்தார்களோ, அந்த இடத்தை அடைந்தவுடன் அன்னையவர்களது உயிர் பிரிந்தது.

அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தலைமையேற்க அன்னையவர்களுக்கு, இறுதி (ஜனாஸா) தொழுகை நிறைவேற்றப்பட்டு, கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:30)
, ,