குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

13.6.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அறிவைத் தேடி...!
மௌலானா மௌதூதி அவர்களின் குத்பா பேருரையிலிந்து
தொகுப்பு: முஃப்தி

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே, இறைவனின்; தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகின்றான்:
''அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம்; அறிவுடையோரே!' (அல்குர்ஆன் 39:9)


என்னருமைச் சகோதரர்களே!

நாம் அனைவரும் ''சுவனத்தை'' அடையவே விரும்புகிறோம்... ஆம் எந்த ஒரு ஆரோக்கியமான மனமும் ''சுவர்க்கம்'' எனும் சுந்தரவனப் பாதையை விரும்பாமலும் நரகம் எனும் நாசகாரப் பாதையை

வெறுக்காமலும் இல்லை. ''சுவனச் சோலையில்... பரவச பானங்கள், பல்சுவைக்கனிகள், முத்தழகுக்கன்னிகள், எழில்மிகும் இல்லங்கள்... இன்னும் உளம் கொள்ளை கொள்ளும் யாவையும்'' உயர்நாயன் தருவதாய் வாக்களித்துள்ளான். எனவே நாம் சுவர்க்கத்தை அடைவது எப்படி? நரகத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி? வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்துச் செத்தால் சுவர்க்கம் கிடைத்துவிடுமா?. சுவர்க்கம் யாருக்கு...? சிந்திக்கவேண்டாமா...?

''முஸ்லிமுக்கும் மாற்றாருக்கும் பாரதூர வேறுபாடு''!

இறை நிராகரிப்பாளனைவிட (காஃபிரை விட) ''முஸ்லிமை'' இறைவன் விரும்புகின்றான் இறை நிராகரிப்பாளனை அவன் விரும்புவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்ததுதான். ''ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கக் கூடிய) செயல்களைச் செய்யாத ஏகத்துவக் கொள்கையுடைய முஃமின்கள், அவர்கள் செய்த பாவங்களுக்காக நரகத்தில் சில காலம் தண்டிக்கப்பட்டாலும் காஃபிர்களைப் போன்று அவர்கள் நரகத்தில் நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை'' என்பது பரவலாகத் தெரிந்த குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் நிரூபணமான ஒன்றாகும். முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் ஏன் இத்தனைப் பெரிய வேற்றுமை? முஸ்லிமாகிய நாம் எப்படி மனிதர்களாகவும், கை, கால்களுடனும் இருக்கின்றோமோ அதைப்போலத்தான் இறை நிராகரிப்பாளனும் இருக்கின்றான். பிறகு ஏன் உங்களுக்கு சுவர்க்கம்? அவர்களுக்கு மட்டும் நரகம் . . . . ???

''அர்த்தமுள்ள வினா''?...

இது சற்று சிந்திக்க வேண்டிய பிரச்சனைதான். பிராமணப் பூசாரி ஒருவன் ''பொருள் தெரியாமல் சமஸ்கிருத மந்திரத்தைச் சொல்வது போல்'', ஒருவன் பொருள் தெரியாமல் அரபிச் சொற்களை சொல்வதனால்தான் இந்த வேறுபாடா? அல்லது நீங்கள் அப்துல்லாஹ் என்றும் அப்துல் ரஹீம் என்றும் பெயரிட்டு அழைத்துக் கொள்கின்றீர்கள். முஸ்லிம்கள் அணிவதுபோல் ஆடை அணிகின்றீர்கள், கத்னா செய்து கொள்கின்றீர்கள், இறைச்சி சாப்பிடுகின்றீர்கள் இதனால்தான் இந்த வேறுபாடா? இத்தகைய அற்பக் காரணங்களுக்காக படைப்பினங்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி ஒருவனை சுவர்க்கத்திற்கும் மற்றொருவனை நரகத்திற்கும் அனுப்புகின்ற அநீதியை, நீதி மிக்க இறைவன் செய்வானா?

''முஸ்லிம்'' என்றால் இனத்தவரின் பெயரா?

சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம் என்று சொல்கின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தாய் வயிற்றிலிருந்தே இஸ்லாத்தைத் தன்னோடு கொண்டு வருகின்றானா? முஸ்லிமுடைய மகன் அல்லது முஸ்லிமுடைய பேரன் என்னும் வாரிசு அடிப்படையில் மட்டுமே ஒரு மனிதன் முஸ்லிமாகின்றானா?

பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகின்றான். ஹரிஜனனுக்குப் பிறந்தவன் ஹரிஜனனாகின்றான். இப்படியே முஸ்லிமுக்குப் பிறந்தவனும் முஸ்லிமாகிவிடுகின்றானா? பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா?

''பொருத்தமுள்ள விடை''!

இவற்றிற்கு நீங்கள் என்ன விடையளிப்பீர்கள்? இல்லை சகோதரரே இல்லை! ஒரு மனிதன் பிராமணனாயிருந்தாலும் ஹரிஜனனாக இருந்தாலும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றினால் அவனும் முஸ்லிம்களில் ஒருவனாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தைப் பின்பற்றுவதைத் துறந்துவிட்டால், அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான்! அதாவது இஸ்லாத்தைப் பின்பற்றுவதனால்தான் ஒருவன் முஸ்லிமாகின்றான். இஸ்லாத்தை நிராகரிப்பதனால்தான் ஒருவன் காஃபிராகின்றான், என்றுதானே பதில் கூறுவீர்கள்?

''புலப்படும் உண்மை''!

அப்படியானால் உங்களின் பதிலில் இருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. அதாவது முஸ்லிம் என்பது வாரிசு சொத்து அல்ல, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நம்முடனேயே வாழ்நாள் முழுதும் ஒட்டிக்கொண்டிருக்க, அந்தப் பேற்றினை அடைவதற்கு நாம்தான் முயற்சி செய்யவேண்டும். முயற்சி எடுத்தால் அது நமக்குக் கிடைக்கும். அலட்சியம் செய்தால் அது கை நழுவிப் போய்விடும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆக, நாம் முஸ்லிம் ஆக விளங்குவதற்கு மற்ற அனைத்தையும் விட முதன்மையானது ''இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு நாம் எடுக்கும் முயற்சி''தான்.

முயற்சியினால்; பெற்ற ''அறிவும் அறிவார்ந்த செயலும்''!

முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் வேற்றுமை தோற்றுவிக்கக்கூடியவை இரண்டு, முதலாவது அறிவு (மழெறடநனபந) இரண்டாவது செயல் (னநநன).

ஒரு பிராமணன் அவனுடைய மதத்தைப் பற்றிய அறிவே இல்லாமல் பிராமணனாக வாழ முடியும்..., அவன் பிராமணனுக்குப் பிறந்ததால்; இவ்வுலகத்தைப் பொறுத்தவரை உயர்ந்தவனாக கருதப்படுகின்றான். ஆனால் ஒருவன் அறிவே இல்லாமல் முஸ்லிமாக வாழ முடியாது. ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக விளங்குவதற்கு முக்கியமான ஒன்று இஸ்லாத்தைப் பற்றிய அறிவு. இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கடமைகள் என்ன? திருக்குர்ஆனுடைய அறிவுரைகள் என்ன? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவியவைகள் என்ன? விலக்கியவைகள் என்ன? ஏகத்துவத்திற்கும் இணைவைத்தலுக்குமிடையில் உள்ள அடிப்படை வேற்றுமை என்ன? என்பன போன்ற அறிவை ஒவ்வொரு முஸ்லிமும் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய அறிவு இல்லாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக இருக்க முடியாது. ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த அறிவை அடைவதுபற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பது கூட இல்லை!

''அறிவின் உயர்வும் அறியாமையின் இழிவும்''!

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சிலைகளை வடித்து, விற்கக்கூடிய மற்றும் வணங்கக்கூடியவனின் வீட்டில் பிறந்தார்கள். ஆனால் தன் அறிவினால் இறைவனைத் தெரிந்துக்கொண்டார்கள். அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்தார்கள். எனவே இறைவன் அவர்களை உலகம் முழுவதற்கும் தலைவராக ஆக்கினான். நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் இறைத்தூதரின் மகனாகப் பிறந்தான் என்றாலும் அவனுடைய அறியாமையின் காரணத்தால் இறைவனை அறிந்து கொள்ளவில்லை. இறைகட்டளைக்குப் பணியவில்லை. அதனால் இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் உலகமே படிப்பினை பெறும் வகையில் அவனை இறைவன் தண்டித்தான்.

''இறைவனின் கணிப்பும் மனிதனின் நினைப்பும்''!

ஆகவே நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். இறைவனிடத்தில் ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையிலுள்ள வேற்றுமை, அறிவையும் செயலையும் அடிப்படையாகக் கொண்டதுதான். அறியாமையால் தான் முஸ்லிமல்லாத நிலையிலுள்ள ஒருவன், ''இப்போதும்கூட நான் முஸ்லிமாகத்தானே இருக்கின்றேன்'' என்று அவன் தன்னைத்தானே நினைத்துக்கொள்வான். உண்மையில் அவன் ''முஸ்லிமாக'' இருக்க முடியாது.

''எளிய உவமையும் ஏற்றிவைத்த தீபமும்''!

இஸ்லாத்திற்கும்; குஃப்ருக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன? ஏகத்துவத்திற்கும் இணைவைத்தலுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன? என்று புரிந்து கொள்ளாத ஒருவனுக்கு நாம் இவ்வாறு உவமை கூறலாம்.

ஒரு மனிதன் கடும் இருள் சூழ்ந்த வேளையில் ஒற்றையடி பாதையில் நடந்து செல்கின்றான். அந்த நேரான பாதையில் சென்று கொண்டிருக்கின்ற அவனது கால்கள் அவனுக்கே தெரியாமல் தாமாகவே வேறு பக்கத்துக்குத் திரும்பிவிடவும் கூடும். இருள் சூழ்ந்திருக்கின்ற வேளையில் அவனால் அதனைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் தான் நேரான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத்தான் அவன் நினைத்துக்கொண்டிருப்பான். இது மட்டுமல்ல, வழியில் ஒரு தீயவன் நின்றுகொண்டு, ''நண்பரே! இருளின் காரணத்தால் உங்கள் வழி தவறிவிட்டது. என்னோடு வாருங்கள், நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு நான் அழைத்துச் செல்கிறேன்'' என்று சொன்னால், அறியாமையின் காரணத்தினால் அவனின் சூழ்ச்சியினைப் புரிந்துகொள்ளாத இவன் தன்னுடைய கையை அந்தத் தீயவனின் கையில் கொடுத்துவிடுவான். அவன் இந்த மனிதனை வழிகெடுத்து எங்கெல்லாமோ அழைத்துச்செல்வான்.

இந்த மனிதனுக்கு ஏன் இப்படி ஆபத்து ஏற்படுகிறதென்றால்......? ''தன்னுடைய பாதையைக்காட்டுகிற அடையாளங்களைத் தானே தெரிந்துக்கொள்கிற ''அறிவு'' (மழெறடநனபந) என்னும் விளக்கு'' அவனிடம் இல்லை. ''அவ்விளக்கு'' இருந்திருந்தால் இவனை மற்றொருவனால் வழிகெடுக்க முடியாது.

'நமக்கென நாமே தொடுக்கும் வினாக்கள்''

நாம் முயற்சி செய்தது நடக்கவில்லை என்றால்..... ''அல்லாஹ் நாடியது நடந்து விட்டது என்று கூறாமல் அப்படி செய்தால் நடந்திருக்குமே, இப்படி செய்தால் முடிந்திருக்குமே'' என்று பேசி ஈமானின் கடமை ஒன்றுக்குக் குந்தகம் விளைவிக்கின்றோமா இல்லையா? ''மரணித்தவரிடத்தில் (அவுலியா போன்றவர்களிடத்தில்) உதவிதேடுவது, சிபாரிசுதேடுவது, மரணித்தவரை அழைப்பது ஆகியவை ''இணைவைத்தல்'' என்னும் மன்னிக்கமுடியாத, நிரந்தர நரகத்தை தேடிதரும் குற்றம்'' என்றும், ''பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும்'' என்றும், ''லஞ்சம் கொடுப்பவனையும் வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாகவும்'' இறைவன் குறிப்பிட்டிருக்கின்றான். ''வட்டி கொடுப்பவனையும் வாங்கு பவனையும் மிக மட்டமான குற்றவாளிகள்'' என்றும் அவன் தீர்ப்பு வழங்கியிருக்கின்றான். ''புறம் பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்கு நிகரானது'' என்று தெளிவாக அறிவுறுத்தியும் இருக்கின்றான். ''கெட்ட பேச்சு, வெட்கங் கெட்ட செயல் தரக்குறைவான நடத்தை ஆகியவற்றிற்குக் கொடிய தண்டனை உண்டு'' என்றும் அவன் குறிப்பிட்டிருக்கின்றான். ''தொழுகையை விட்டவர்களை நரகத்தில் வேதனை செய்வதாகவும்'' கூறுகின்றான். இவையெல்லாம் முஸ்லிம்களாகிய நம்மிடம் இருக்கின்றதா இல்லையா? இதற்குக் காரணம் மேலே கூறப்பட்ட விஷயங்களைப்பற்றிய ''அ...றி...வு'' நம்மிடம் இல்லாமையா? அல்லது ''அ...றி...வு'' இருந்தும் அதைச்செயல்படுத்தாமையா...? சிந்தியுங்கள்...?

''உனக்கேது உரிமை''?

''நிராகரிப்பாளன் (ஹலால்) அனுமதிக்கப்பட்;டதற்கும் (ஹராம்) தடுக்கப்பட்டதற்குமிடையில்'' வேற்றுமை பார்ப்பதில்லை. ''எந்தச் செயலில் தனக்கு நன்மையும் இன்பமும் இருக்கின்றனதோ'' அதனை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். (அது இறைவனிடத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, அனுமதிக்கப்படாமல் இருந்தாலும் சரியே!) இதே நடத்தை ஒரு முஸ்லிமிடம் காணப்பட்டால் அவனுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் என்ன வித்தியாசம்? மொத்தத்தில் நிராகரிப்பாளனைப் போல் ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு பெறாதிருந்தால்..., நிராகரிப்பாளன் செய்வது போன்ற செயல்களை அவனும் செய்தால்... அவனுக்கு எப்படி ''சுவனம்'' எனும் சிறப்பு கிடைக்க முடியும்???

''சிந்தனைக்குச் சில துளிகள்''!

கண்ணியமிக்க சகோதரர்களே! ''இறைவன் அருளிய திருமறையைத்'' தங்;கள்வசம் கொண்டுள்ள முஸ்லிம்களில் பலர்; ''நடந்து கொள்ளும் முறைகளும் செய்கின்ற கூத்துக்களும்'' பரிதாபத்துக்குரியனவாகவே இருக்கின்றன. ''இதே செயல்களை வேறொரு மனிதன் செய்யக் கண்டால் அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவோம். பைத்தியக்காரன்'' என்று பட்டம் கொடுப்போம், அதையே நாம் செய்தால்......?

மருந்துண்ணல் நிவாரணமா? மாட்டித்தொங்கவிடும் தோரணமா?

ஒரு மனிதன் ஒரு மருத்துவரிடமிருந்து மருந்து ஒன்றைக் குறித்துக்கொண்டு வருகின்றான். ''அதனைப்படித்தால் மட்டும் நோய் நீங்கிவிடும்'' என்பது அவனது நினைப்பு அல்லது ''அதனைத் துணியில் மடித்து கழுத்தில் மாட்டிக் கொள்கின்றான் அல்லது அதனைக் கரைத்துக் குடிக்கின்றான்'' என்றால் அவனைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவனுடைய செயலைப்பார்த்து சிரிக்க மாட்டீர்களா? அவனை முட்டாள் என்று நினைக்க மாட்டீர்களா?

''எல்லோரையும் விட சிறந்த மருத்துவனான இறைவன் உங்கள் நோய்க்கு நிகரற்ற மருந்தை அல்குர்ஆனிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் குறித்துக்கொடுத்திருக்கின்றான். ஆனால் அந்தக் குறிப்புகளுக்கு மாற்றமாக நம் கண்களுக்கு முன்னாலேயே இரவும் பகலும் இத்தகைய கூத்துக்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது, அப்படி இருந்தும் அதை நாம் அதிசயமாக பார்ப்பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.

''தான் உடைத்தால் தங்கக்குடம் மாற்றான் உடைத்தால் மண்குடமா''?

''திருக்குர்ஆனை ஓதுவதால் மட்டுமே அல்லது கழுத்தில் தொங்கவிடுவதால் மட்டுமே அல்லது கரைத்து குடிப்பதால் மட்டுமே நோய்களும் பிரச்சினைகளும் போகும்'' என்றும் ''அதனுடைய அறிவுரைக்கு தக்கபடி நடக்க வேண்டியதில்லை அது தீங்கு என்று சுட்டிக்காட்டினால் தவிர்க்க வேண்டியதுமில்லை'' என்று நினைக்கின்றோம். இப்படியிருக்கும் போது தன்னுடைய நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நாம்; எந்தத் தீர்ப்பை வழங்குகின்றோமோ, அதே தீர்ப்பை நமக்கு நாமே ஏன்; வழங்கிக் கொள்வதில்லை?

''மறைமீது இல்லாத அக்கறை மடல்மீது மட்டுமேன்''?

நமக்கு தெரியாத மொழியிலே ஒரு கடிதம் நமக்கு வந்தால், அந்த மொழி தெரிந்தவரிடம் ஓடோடிச் செல்கின்றோம்;. அதிலுள்ள பொருளை நாம் தெரிந்துகொள்ளும் வரை நமக்கு அமைதி ஏற்படுவதில்லை. ஏதோ நாலுகாசு வரக்கூடிய சாதாரணக் கடிதங்களைப் பொறுத்தமட்டில் நாம் நடந்துகொள்ளும் முறையே இப்படி இருக்கும்போது, ஆனால் இம்மை மற்றும் மறுமையினுடைய செல்வங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு எல்லாம் தெரிந்த இறைவனிடமிருந்து ''நமக்கு அருட்கொடையாக'' வந்திருக்கின்ற ''கடிதத்தை'' அப்படியே போட்டுவைத்து விட்டோமே! ''அதிலுள்ள பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்ற துடிப்பும் ''அதன் கட்டளைக்கேற்ப செயல்பட வேண்டும்'' என்ற எண்ணமும்; நமக்கு ஏன் ஏற்படுவதில்லை?. இது சிந்தனையில் தெளிக்கத்தக்க விந்தைக்குறிய விஷயமல்லவா...?

''சாலப்பொருத்தமுறும் மூலக்கருத்தென்ன''?

''உங்களில் ஒவ்வொருவரும் மௌலவி ஆகி (அறிஞராகி) பெரிய பெரிய நூல்களை படிக்க வேண்டும்'' என்றோ, ''கல்விக்காக பல ஆண்டுகள் செலவிட வேண்டும்'' என்றோ சொல்லவில்லை. ''ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தையோ அல்லது அதில் பாதியையோ'' மார்க்க அறிவு பெறுவதற்காகச் செலவிடுங்கள்;. ''திருக்குர்ஆன் எந்த நோக்கத்திற்காக, என்ன அறிவுரையை கொண்டு வந்திருக்கிறது'' என்பதைத் தெளிவாகத் தெரிந்துக்;கொள்ளுங்கள்! ''பெருமானார் (ஸல்) அவர்கள் எதனை இவ்வுலகத்தில் நிலைப்படுத்துவதற்காக வந்தார்கள்'' என்பதனை நன்கு உணர்ந்து, ''முஸ்லிம்களுக்காக இறைவன் வகுத்துக்கொடுத்த தனிப்பட்ட வாழ்க்கை நெறி'' எதுவென்பதை அறிந்து அதன்படி செயல்படுங்கள்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகின்றான்:

''உண்மையில், அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்'' (அல்குர்ஆன் 49:13)

மார்க்க அறிவினைப் பெற்று அதன்படி செயல்பட்டு ஈருலக வெற்றியினையும் அடைந்தவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்குவானாக.
, ,