இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

20/06/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

சகோதரத்துவம்
சகோதரத்துவம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம். ஒருவரையொருவர் பகைத்துக் கொள்ள வேண்டாம். ஒருவரையொருவர் புறக்கணித்து நடக்க வேண்டாம். உங்களில் சிலர் இன்னும் சிலரது வியாபாரத்திற்கெதிராக வியாபாரம் செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரனாவான். எனவே அம்முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு அநீதியிழைக்க மாட்டான். அவனைக் கைவிட மாட்டான். அவனிடம் பொய்யுரைக்க மாட்டான். அவனை இழிவாகக் கருத மாட்டான். ''இறையச்சம் இங்கே உள்ளது'' என்று மூன்று தடவைகள் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிய நபியவர்கள் தொடர்ந்தும் கூறினார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே அவன் தண்டனை பெறுவதற்கு போதுமான தீய செயலாகும். ஒவ்வொரு முஸ்லிமின் இரத்தமும் உடமையும் மானமும் அடுத்த முஸ்லிமின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழி இமாம் முஸ்லிம் அவர்களின் பதிவாகும். இந்த ஹதீஸின் பல பகுதிகள் ஸுனன் அத்திர்மிதி, ஸுனன் அபூதாவூத் போன்ற நூல்களிலும் இன்னும் ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய நூல்களிலும் வித்தியாசமான அறிவிப்பாளர் தொடர் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகக் கட்டுக்கோப்புக்கு அத்திவாரமாக திகழும் சகோதரத்துவம் குறித்து இங்கு உணர்த்தப்படுகின்றது. சகோதரத்துவம் என்பது தானாக உருவாகி வளரக் கூடியதொன்றாகும். சமூகத்தின் எல்லா உறுப்பினர்களும் பரஸ்பரம் நல்லெண்ணத்துடனும் ஒத்துழைப்புடனும் சேர்ந்து பணியாற்றும் போதே அச்சமூகம் வளர்ச்சியடைய முடியும்.

இந்த ஹதீஸ் பற்றி இப்னு ஹஜர் அல் ஹைதமி பின்வருமாறு விளக்குகிறார் :

''இந்த ஹதீஸ் அதிகமான போதனைகளை உள்ளடக்கியுள்ளது. இஸ்லாத்தின் நோக்கங்களையும் அடிப்படைகளையும் சுட்டிக் காட்டுகின்றது. இந்த ஹதீஸ் கூறும் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கினால் இஸ்லாமிய சட்டத்துடன் தொடர்புடைய பல அம்சங்கள் உட்பொதிந்திருப்பதைக் காணலாம்''.

மனித நடத்தைகளை ஒழுங்குபடுத்தி அவர்களிடையே சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப விரும்பிய நபியவர்கள் சகோதரத்துவத்துக்கு சவாலாக அமைகின்ற மனிதனது மனோநிலைகளை இங்கு தடை செய்திருப்பதைக் காண்கிறோம்.பொறாமை கொள்ளல்

பொதுவாக பொறாமை என்பது, ஒருவர் தன்னிடம் இல்லாத பிறரிடம் காணப்படும் ஏதேனுமொரு அல்லாஹ்வின் அருள் அவரை விட்டும் நீங்கி தனக்குக் கிட்ட வேண்டுமென்றோ அல்லது வேறு யாருக்காவது கிடைக்க வேண்டுமென்றோ எண்ணுவதைக் குறிக்கும்.

இத்தகைய மனோநிலை மனிதனிலே காணப்படும் மிகவும் இழிவான பண்பாகும். தன்னைவிட அடுத்தவன் சிறப்புக்களை, உயர்வுகளை அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது. மனிதர்களுக்கிடையிலான உறவுகளுக்கு இது பெரும் சவாலாக அமைந்து விட முடியும்.

யூதர்களிடம் காணப்படும் இம்மோசமான மனோநிலை பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது :

வேதம் அருளப்பட்டவர்களில் பலர் நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு விட்டதன் பின்னர் உங்களை எவ்விதத்திலாவது நிராகரிப்பாளர்களாக திருப்பிவிட வேண்டும் என விரும்புகின்றனர். சத்தியம் தமக்குத் தெளிவாகி விடடதன்பின்னரும் தங்களிடமுள்ள பொறாமையின் காரணமாக (இவ்வாறு முனைகின்றனர்). ஸுரா அல்பகரா – 109

ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். ''உங்களுக்கு முன்பிருந் சமூகத்தினருக்கு ஏற்பட்ட பொறாமை, பகைமை போன்ற நோய்கள் உங்களையும் பீடிக்கும் பகைமை உணர்வு சிதைத்து விடக் கூடியது. அது மார்க்கத்தை சிதைத்து விடும். தலைமயிரை அல்ல, எவனது கைவசம் முஹம்மதின் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒருவருக்கொருவர் நேசத்துடன் நடந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள் பூரண முஃமீன்களாக மாட்டீர்கள்.நான் ஒரு விசயத்தை உங்களுக்குச் சொல்லித் தரவா? நீங்கள் அதனைச் செய்வீர்களாயின் பரஸ்பரம் நேசம் கொண்டவர்களாகி விடுவீர்கள். உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்!'' (ஆதாரம் : அஹ்மத், திர்மிதீ)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றார்கள். ''பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நெருப்பு விறகையோ புட்பூண்டுகளையோ தின்றுவிடுவது போல, பொறாமையானது நற்செயல்களைத் தின்று விடும்''. (ஆதாரம் : அபூதாவூத்)

இவ்வாறு அல்குர்ஆனும், அல்ஹதீஸும் இதன் பாரதூரத்தை, சுபாவத்தை விளக்குகிறது. உண்மையில் பொறாமைப்படுபவன் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகின்றான்.அல்லாஹ் தனது அடியார்களுக்கு கொடுத்திருக்கும் அருள்கள் குறித்து திருப்தியடையாதவனாக, அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்க மறுத்து அதற்கெதிராக செயற்பட முனைவதனையோ பொறாமைக்காரனின் மனோநிலை காட்டுகிறது.

பிற சகோதரனைப் பற்றியும் அவனுக்குக் கிடைத்திருக்கும் திருப்திகரமான வாழ்வு குறித்தும் நல்ல மனோநிலையோடு நோக்கும் முஸ்லிம் எப்போது சாந்தி மயமான மனோ உணர்வுடன் இவ்வுலகில் வாழ்வான்.

பொதுவாக, பொறாமைக்குணம் படைத்தவர்களை பின்வருமாறு நோக்கலாம்.

பிறர் பெற்றுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகள் அவர்களை விட்டும் நீங்கி விட வேண்டும் என்ற மனோநிலை படைத்தவர்கள். இவர்கள் தமது சொல்லாலும் செயலாலும் இதற்காக முழுப் பிரயத்தனம் மேற்கொள்வர். அவை தமக்குக் கிட்டிவிட வேண்டுமெனவும் விரும்புவர்.

தனக்குக் கிடைக்காதவை பிறருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனப்பாங்கு கொண்டோர். அவை தனக்குக் கிடைக்க வேண்டுமென ஆசை கொள்ளா விட்டாலும் பிறரிடம் இருப்பதை சகித்துக் கொள்ளாதோர்.

பிறர் பெற்றிருக்கும் அருட்கொடைகள் பற்றி பொறாமை கொண்டாலும் அதற்கேற்ப செயல்படாதவர்கள்.

இவ்வாறாக பொறாமை கொள்வோரின் மனநிலைக்கேற்ப அவர்களுக்கு பாவமுண்டு. எனினும் பிறர் செய்யும் நற்செயல்களைப் பார்த்து தானும் அவ்வாறு செய்ய வேண்டும் எனும் எண்ணம் கொள்வது பிழையானதல்ல. வரவேற்கத்தக்கது.வியாபாரப் போட்டி

நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தைப் பாதிக்கும் மற்றுமொரு காரணிணை தொடர்ந்து சொல்கிறார்கள். பொருளை வாங்கும் எண்ணமின்றி அப்பொருளின் விலையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அதன் விலையை கூடுதலாக கேட்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சந்தையில் ஏலத்துக்காக விடப்பட்டுள்ள பொருட்களை கொள்வனவு செய்யும் போது இத்தகைய நிலைமைகள் ஏற்படலாம். வாங்குவோர் கூடுதலான விலையை செலுத்துவதற்காக தந்திரமாக பொருட்களின் விலையைக் கூட்டிக் கேட்பதற்கு சிலரை ஏற்பாடு செய்து கொள்ளும் மரபு வியாபாரிகளிடையே இருப்பதனை நாம் காண்கிறோம். இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இங்கு வந்துள்ள ''லா தனாஜஷு'' என்பது சூழ்ச்சி, ஏமாற்று, தந்திரம் போன்றவற்றில் ஈடுபடாதீர்கள் எனும் கருத்திலும் விளக்கப்பட முடியும். அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

''தீய சூழ்ச்சிகள் அவற்றைச் செய்வோரையே தாக்கும்'' (ஸூரா பாதிர் : 43) நபி (ஸல்) அவர்கள் சூழ்ச்சி செய்பவனைப் பற்றி பின்வருமாறு உரைத்தார்கள். ''முஸ்லிமுக்கு சூழ்ச்சி செய்தவனும் அவனுக்கு அநீதியிழைத்தவனும் சபிக்கப்பட்டவனாவான்''. (ஆதாரம் : திர்மிதீ)பகைமையுணர்வு

தனது சகோதர முஸ்லிமுடன் அன்புடனும் நேசத்துடனுமேயே உறவுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பணிக்கிறது. ஒருவருக்கொருவர் பகைமையுணர்வை ஏற்படுத்திக் கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இந்த வகையில் முஸ்லிம்களிடையே குரோதத்தையும் பகைமையுணர்வையும் ஏற்படுத்தும் காரணிகளையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. ஸூரா அல்மாயிதாவின் 91 ம் வசனம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

''மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்வதிலிருந்தும்,தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது இவற்றை நீங்கள் தவிர்ந்து கொள்வீர்களா?''

பகைமையுணர்வை நீக்கி, இணக்கத்தை ஏற்படுத்தியமையை அல்லாஹ்வின் அருட்கொடைகளிலொன்றாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

''அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நினைத்துப்பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்த போது அல்லாஹ் உங்களிடையே மனப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான்''. (ஸூரா ஆல இம்ரான் : 103)

எனவே தான் இஸ்லாம் புறம்பேசி, கோள் சொல்லித் திரிவதை ஹராமாக்கியுள்ளது. இவற்றினால் மனிதர்களுக்கிடையே கசப்புணர்வுகள் வளர வாய்ப்பேற்படுகிறது. மனிதர்களுக்கிடையே சமரசம் செய்து வைப்பதற்காக பொய்யுரைப்பதற்குக் கூட இஸ்லாம் சலுகையளித்துள்ளது. அதே போன்று சமரச முயற்சிகளை இஸ்லாம் வரவேற்றுள்ளதுடன் அதற்கான தூண்டுதல்களையும் வழங்கியுள்ளது.

''மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுக்களில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களிடையே சமரசத்தை, இணக்கத்தை ஏற்படுத்தும்படியோ அறிவுரை கூறுபவர்களைத் தவிர.(அவற்றில் நன்மை உண்டு)''. (ஸூரா அன்னிஸா :114)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ''உங்களிலே மோசமானவர்களை நான் அறிவிக்கட்டுமா?'' என நபியவர்கள் வினவ ஸஹாபாக்கள் ''ஆம், அல்லாஹ்வின் தூதரே'' என்றனர். ''புறம் பேசித் திரிபவர்கள், நேசம் கொண்டோரிடையே பிரிவினையை ஏற்படுத்துவோர், நிரபராதிகளுக்கு குற்றம் சுமத்த விரும்புவோர்'' எனக் கூறினார்கள்.

அல்லாஹ்வுக்காக ஒருவருடன் பகைமை கொள்வது பிழையானதல்ல. ஈமானின் விளைவுகளிலொன்றாக இது அமைய முடியும். தனது சகோதரன் ஹராமான ஒரு செயலில் ஈடுபடுவதைக் காணும் முஸ்லிம் அதற்காக கோபப்படுவான். அந்த தீய செயலில் அவன் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக அவனுடன் பகைமை கொள்வது இவன் மீது குற்றமாகாது. மாற்றமாக அதற்காக நன்மை வழங்கப்படும்.சகோதர முஸ்லிமைப் புறக்கணித்து நடத்தல்

சகோதரத்துவத்தைப் பாதிக்கும் மற்றொரு அம்சமான சகோதர முஸ்லிமைப் புறக்கணித்து நடப்பதனை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஒருவரையொருவர் புறக்கணித் பரஸ்பரம் உறவுகளைத் துண்டித்துக் கொள்வதனை இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

இது பற்றிக் குறிப்பிடும் ஏராளமா ஹதீஸ்களை நாம் காணலாம். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். ''நீங்கள் பரஸ்பரம் பொறாமை கொள்ளாதீர்கள். பகைமை கொள்ளாதீர்கள். உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக இருங்கள். (ஆதாரம் :முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ''ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேலாக புறக்கணித் நடக்கலாகாது. அவர்களில் ஒவ்வொருவரும் அடுத்தவரை சந்தித்தும் புறக்கணித்துச் செல்கின்றனர். இந்நிலையில் இருவரில் முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவர். (ஆதாரம் : புகாரீ,முஸ்லிம்)

இது தொடர்பாக ஏராளமான ஹதீஸ்களை மேற்கோள்களாகக் காட்டலாம். எனினும் விரிவஞ்சித் தவிர்த்துக் கொள்கின்றோம்.

மார்க்க விசயங்களுக்காக மூன்று நாட்களுக்கு அதிகமாக புறக்கணித்து நடத்தலை இஸ்லாம் அனுமதித்துள்ளது. தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளா சிலருடன் அல்லாஹ் அவர்கள் தொடர்பான முடிவை வழங்கும் வரை நபித்தோழர்களும், நபியவர்களும் ஐம்பது நாட்களுக்கும் கூடுதலா புறக்கணித்து நடந்தமையை இதற்கு ஆதாரமா இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார்கள். தந்தை தனது பிள்ளையையும், கணவன் தனது மனைவியையும் அவர்களைத் திருத்தும் நோக்கில் மூன்று நாட்களுக்கும் அதிகமாக புறக்கணித்து நடக்க முடியும் என இமாம் அல்கத்தாபி குறிப்பிடுகிறார்கள்.

தொடர்ந்து நபியவர்கள் வியாபார நடவடிக்கைகளின் போது நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்க முறையொன்றை உணர்த்துகிறார்கள். ''உங்களில் ஒருவர் அடுத்தவரது வியாபார முயற்சிகளுக்கெதிரா வியாபாரம் செய்ய வேண்டாம்'' என நபியவர்கள் தடுத்திருப்பது சகோதரத்துவத்தைப் பேணுவதற்குக் காட்டித்தரும் ஒரு முக்கிய வழிகாட்டலாகும். நாளாந்த வியாபார நடவடிக்கைகளின் போது அடுத்த வியாபாரிக்கு நட்டம் ஏற்படுத்தும் வகையில் பொருட்களின் விலையை சந்தை விலையிலும் குறைவாக நிர்ணயித்துப் பொருட்களை விற்பனை செய்வதும் விரும்பத்தக்கதல்ல. கொள்வனவாளனும், விற்பனையாளனும் நட்டமடையாதவாறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இந்த ஹதீஸின் அடுத்த அம்சம் நபியவர்கள் நேரடியாகவே ''சகோதரர்களாக இருங்கள்'' எனும் கருத்தைக் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய உங்களுக்கு மத்தியில் பொறாமை, பகைமையுணர்வு, தந்திரம், மோசடி, புறக்கணிப்பு என்பவற்றை நீக்கிக் கொள்வதனூடாக உண்மையான சகோதரப் பிணைப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்ற கருத்தையே இதன் பின்னணியில் எமக்கு புரிந்து கொள்ள முடிகிறது.

சகோதரத்துவ உறவுக்குத் தடையாக இருக்கும் மேற்கூறப்பட்ட அம்சங்களை தவிர்ந்துகொண்டு, தனது சக முஸ்லிமுடைய உரிமைகளைப் பேணி வாழுகின்ற போது சகோதரத்துவ உணர்வு பலமடைய முடியும்.

ஸலாம் உரைத்தல், தும்மினால் - அருள் வேண்டிப் பிரார்த்தித்தல், நோய் ஏற்பட்டால் நலம் விசாரிக்கச் செல்லல், மரணித்தால் ஜனாஸாவில் கலந்து கொள்ளல், அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளல், உபதேசம் புரியுமாறு வேண்டினால் உபதேசம் புரிதல், எப்போதும் தூய்மையாக நடத்தல் போன்றன சக முஸ்லிமின் உரிமைகளாகக் காணப்படுகின்றன.

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஹதீஸின் அடுத்த பகுதி விளக்குகிறது. பிற முஸ்லிமுக்கு எத்தகையதொரு அநீதியையும் இழைக்காமல் அவனுக்கு உதவி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அவனை கைவிட்டு விடாமல், அவ்விடம் பொய்யுரைக்காமல், அவனை இழிவாகக் கருதாமல் இணக்கப்பாட்டுடனும் ஒத்துழைப்புடனும் வாழ வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

இஸ்லாம் இத்தகைய அம்சங்களை முஸ்லிம்களுடன் மாத்திரம் சுருக்கி விடாமல், முழுமனித சமூகத்தாருடனும் இவ்வாறான உயர்பண்புகளைப் பேணுவதை வலியுறுத்துகிறது.

அடுத்த மனிதனுக்கு அநீதியிழைப்பது பற்றி அல்லாஹ் மிகவும் கண்டித்திருக்கின்றான். ''எனது அடியார்களே! அநீதியிழைப்பதனை எனக்கு நான் ஹராமாக்கிக் கொண்டேன்.அதனை நான் உங்களுக்கும் தடை செய்து விட்டேன். எனவே நீங்கள் உங்களில் ஒருவருக்கொருவர் அநீதியிழைத்துக் கொள்ளாதீர்கள்'' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

தனது சகோதர முஸ்லிமை அவனுக்கு உதவ வேண்டிய சந்தர்ப்பத்தில் கைவிட்டு விடுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

''ஒரு முஸ்லிம் இழிவுபடுத்தப்படும் போ அவனுக்கு உதவி செய்யும் சக்தியிருந்தும் உதவி செய்யாதவனை மறுமையில் அல்லாஹ் படைப்பினங்ளக் அனைத்திற்கும் முன்னால் இழிவுபடுத்தி விடுவான்''. ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)

தனது சகோதரனிடம் பொய்யுரைப்பது பாவமாகும். இதனைப் பின்வரும் நபிமொழி குறிப்பிடுகிறது. ''உனது சகோதரன் உன்னை நம்பிய நிலையில் அவனுக்கு நீ பொய்யாக ஒரு செய்தியைக் கூறுவது மிகப் பெரும் மோசடியாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்)

தனது சகோதரனை இழிவுபடுத்தி நோக்குவதும் ஒரு முஸ்லிமிடம் காணப்படக் கூடாத பண்பாகும். ''தனது அடியானை அல்லாஹ் கண்ணியப்படுத்தி பொறுப்புள்ளவனாகப் படைத்திருக்கும் போது அவனை இழிவபடுத்தி தரத்தில் குறைத் மதிப்பிடுவது பெரும் பாவமாகும். இறுதியாக இந்த ஹதீஸ் மனிதர்களை அளவிடும் சரியான அளவுகோள் எது என்பதை உணர்த்துகின்றது. உண்மையில் இந்த உலகின் சொத்துச் செல்வங்களையோ, கோத்திர, குல உயர்வுகளையோ அடிப்படையாகக் கொண்டு மனிதர்களைத் தரப்படுத்தி நோக்குவது தவறானது. அல்லாஹ்வை தக்வா செய்து வாழும் மனிதனே மிகவும் உயர்ந்தவன். தக்வா என்பது அல்லாஹ்வுடைய ஏவல்களை ஏற்று விலக்கல்களைத் தவிர்த்து வாழும் வாழ்க்கையமைப்பைப் பேணும் நிலையைக் குறிக்கும். உலகத்தில் ஒரு முஸ்லிம் சிலபோது சாதாரணமாக, எளிமையாக, எவராலும் மதிக்கப்படா, சொத்துச் செல்வங்களின்றி வாழ்ந்தாலும் அவனது உள்ளம் தக்வா எனும் உணர்வால் நிரம்பி இருக்குமாயின் அவன் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றுக் கொள்வான்.

ஒரு மனிதனுடைய தக்வாவை ஏனைய மனிதர்களால் புரிந்துகொள்ள இயலாது. தக்வாவின் இடம் உள்ளமாகும். எனவே அதன் உண்மை நிலையை அல்லாஹ்வேயன்றி வேறு எவருக்கும் அறிந்து கொள்ள முடியாது.

''யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள புனிதச் சின்னங்களுக்கு கண்ணியம் அளிப்பாராயின் நிச்சயமாக அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்''. (ஸூரா அல் ஹஜ் : 32)

வெளிப்படையான செயல்களை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு ஒருவன அந்தஸ்தைக் கணிப்பிட முடியாது. மாற்றமாக உள்ளத்தில் அல்லாஹ் மீதான அச்சமும் அல்லாஹ் தன்னை எப்போதுமே அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற மனோ உணர்வுமே அல்லாஹ்விடத்தில் அவன் கண்ணியம் பெறுதவற்கு வழியமைக்கும். இதன் தவிர்க்க முடியாத விளைவுகள் அவனது வாழ்வின் சகல துறைகளிலும் பிரதிபலிக்கும். எனவே தான் அல்லாஹ் மனிதர்களது உள்ளத்தில் நிலையை கணித்து அதற்கேற்ப மனிதனது புறத்தோற்றத்தை வைத்து அவனது அந்தஸ்தை அளவிடுவது பிழையானதாகும்.

இறுதியாக, இந்த ஹதீஸ் ஒரு முஸ்லிமின் உயிர், உடமை, மானம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துகிறது. இவற்றில் அத்துமீறி பங்கம் ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

இவை பொதுவான மனித உரிமைகளாகும். இஸ்லாமிய உம்மத்தும் இவ்வுரிகைளின் அடிப்படையில் பாதுகாப்பான ஒரு வாழ்வை தனது குடிமக்களுக்கு வழங்குகிறது. எனினும் இஸ்லாத்தின் தண்டனைகளுக்கான குற்றங்களை இழைத்தோரைத் தவிர ஏனையோர் எத்தகைய அச்சமும் பீதியுமின்றி மன நிறைவுடன் பூரண பாதுகாப்புடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிய சமூக அமைப்பில் காண முடியும்.


- நன்றி : இஸ்லாமியச் சிந்தனை – அஷ்ஷெய்க் எஸ்.எம்.அஸாஹிம்
, ,