குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

27.6.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பிறை பார்த்தல்
பிறை பார்த்தல் - ஆதாரங்கள் முழு தொகுப்பு
                                                       
பிறையை கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும். முன்கூட்டியே கணிப்பது மார்க்க அடிப்படையில் தவறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் இங்கு தொகுந்து தரப்பட்டுள்ளது.

ஆதாரம் 1 

மாதத்திற்கு 29 நாட்களாகும். எனவே பிறையை காணாமல் நோன்பு வைக்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்ப்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக்கி கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புஹாரி


(ஒவ்வொரு மாதமும் 29 முடிந்த பிறகு பிறை பார்க்க வேண்டும். பிறை தெரிந்தால் அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் துவங்கி விட்டது. முடியவில்லை என்றால் முந்தைய மாதம் இன்னொரு நாள் தொடருகிறது!)

ஆதாரம் 2

குறைப்:
"உம்முள் பல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருக்கும் முஆவியா அவர்களிடம் என்னை அனுப்பினார். நான் சிரியாவிலிருக்கும் போது ரமளானின் முதல் பிறை எனக்கு தென்ப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையை பார்த்தேன். பின்னர் அம்மாத இறுதியில் மதீனா வந்தேன்.
இப்னு அப்பாஸ் அவர்கள் பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தப்பேச்சை எடுத்தார்கள்.
இப்னு அப்பாஸ் :
"நீங்கள் எப்போது பிறையை பார்த்தீர்கள் ?.
குறைப்:
நாங்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தோம்.
இப்னு அப்பாஸ் :
நீயே பிறையை பார்த்தாயா?
குறைப் : .
ஆம், மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியாவும் நோன்பு பிடித்தார்கள்.
இப்னு அப்பாஸ்:
நாங்கள் சனிக்கிழமை தான் பிறை பார்த்தோம் , ஆகவே, மறு பிறை பார்க்கும் வரை, அல்லது முப்பதாக பூர்த்தி செய்யும் வரை நோன்பு வைதுக்கொண்டிருப்போம்.
குறைப் :
ஏன்?, முஆவியா அவர்கள் பார்த்ததும், நோன்பு வைத்ததும் உங்களுக்கு போதாதா?
இப்னு அப்பாஸ்:
"போதாது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : குறைப்
நூல் : முஸ்லிம்

(ஒரு ஊரில் ஒரு நாளிலும், இன்னொரு ஊரில் இன்னொரு நாளிலும் பிறை பார்க்கப்பட்டிருக்கிறது!
எங்கள் ஊரில் நாங்கள் பார்த்ததை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? என்று கேட்ட பிறகும் கூட இப்னு அப்பாஸ் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நாங்கள் பிறை பார்த்து தான் தீர்மானிப்போம் என்கிறார்கள்.)

ஆதாரம் 3 :

"நாங்கள் உம்ராவுக்காக புறப்பட்டோம். பதன் நகலா எனும் இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம் . (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாம் இரவில் பிறை என்றனர். சிலர் இது இரண்டாம் இரவின் பிறை என்றனர். இது பற்றி இப்னு அப்பாஸ் அவர்களிடம் கூறினோம். "நீங்கள் எந்த இரவில் பிறை பார்த்தீர்கள்", என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம், என்று கூறினோம்.
அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் "பிறை பார்க்கும் வரை (முந்தய) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான், என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான், என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபுல் பக்தரி ,
நூல் : முஸ்லிம்

(ஏதேனும் காரணத்தால் தலைப்பிறை நம் கண்களுக்கு தெரியாமல் போய், அதற்கடுத்த நாள் பிறை பெரிதாக, இரண்டாம் பிறையாகவோ மூன்றாம் பிறையாகவோ தென்பட்டால் கூட, அதை பெரிதாக எடுக்க தேவையில்லை. நம் கண்களுக்கு பிறை தெரிவது தான் நமக்கு முதல் பிறை! அது வரை, அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டியுள்ளான்!)

ஆதாரம் 4 :

நாங்கள் "தாது இர்க்" எனும் இடத்தில் ரமலான் (முதல்) பிறையை பார்த்தோம். இது பற்றி விளக்கம் கேட்க இப்னு அப்பாஸ் அவர்களிடம் ஆளை அனுப்பினோம்.
இப்னு அப்பாஸ் அவர்கள், "நீங்கள் பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் வானத்தில் சிறிது நேரம் தென்பட செய்கிறான், உங்களுக்கு மேகமூட்டம் காரணமாக பிறை தெரியவில்லை என்றால் (முந்தைய) மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக சொன்னார்கள்.
அறிவிப்பவர் : செய்யத் பின் பைரூஸ்
முஸ்லிம் : 1985

(நாம் தலைப்பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் பிறையை சிறிது நேரம் வானில் தென்பட செய்கிறான்!)

ஆதாரம் 5

மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபு உமைர்
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.

(பிறையை கணித்து பின்பற்றுபவர்கள் என்றால் நேற்று பிறை பார்க்க தேவையில்லை. அதை நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்ல தேவையில்லை. அவர்கள் சொல்லியதை வைத்து நோன்பை விடுமாறு நபி அவர்கள் அவர்களுக்கு கட்டளை இட தேவையில்லை. நீங்கள் கணித்து கொள்ள வேண்டியது தானே? ஏன் பிறை பார்த்தீர்கள்?
அதை ஏன் என்னிடம் வந்து சொல்கிறீர்கள்? நானும் கணித்துகொள்வேனே, என்று அவர்கள் கேட்கவில்லை!)

ஆதாரம் 6

சந்தேகத்திற்குரிய நாளில் (ஷாபான் 30 இல்) யார் நோன்பு வைக்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.
அறிவிப்பவர் : அம்மார் (ரலி)
நூல் : ஹாக்கிம்.

(சந்தேகத்திற்குரிய நாள் என்பதெல்லாம் ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்து மாதங்களை முடிவு செய்பவர்களுக்கு மட்டுமே ஏற்ப்படும். 2015 ஆம் ஆண்டு , ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை எத்தனை நாட்கள் என்பதை இன்றே அறிவித்து விட்டவர்களுக்கு அனைத்து நாட்களும் உறுதியான நாட்கள் தான். எதுவும் சந்தேகமான நாள் இல்லை.
அப்படியானால், இந்த ஹதீஸே அவர்களுக்கு பொருளற்றதாகி விடுகிறது!)

ஆதாரம் 7

அபு உமைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.:
மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபு உமைர்
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.

(பிறை தகவல் சொன்ன வாகனக்கூட்டதாரிடம் தான் நோன்பை விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்களே தவிர, உடன் இருந்த சஹாபாக்களிடம் நோன்பை விட சொல்லவில்லை.
அவர்கள் பார்த்தது அவர்களுக்கு, நாம் பார்ப்பது நமக்கு என்று தான் செயல்பட்டிருக்கிறார்கள். நபி (ஸல்) கணித்து முடிவு செய்பவர்களாக இருந்தால் அனைவருக்கும் ஒரே நாள் தான் வந்திருக்க வேண்டும்.
குறைந்த பட்சம், தகவல் கிடைத்த பிறகாவது, ஒரே தினத்தில் பெருநாள் வைத்திருக்க வேண்டும். அனால், அவ்வாறு வரவில்லை!)

ஆதாரம் 8
அபு உமைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.:
மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.

(ஒவ்வொரு மாதமும் தலைப்பிறையை பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.
நோன்பு வைத்த நிலையில், ஷவ்வால் பிறையை பார்க்க முயற்சித்த சஹாபாக்கள், பிறை தெரியாததால், நோன்பை தொடர்ந்தவர்களாக ரசூல் (ஸல்) அவர்களுடன் மாலை பொழுது வரை இருக்கிறார்கள், என்று ஹதீஸ் சொல்கிறது..)

ஆதாரம் - 9
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் மக்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ரிப்யீ பின் கிராஷ்
நூல் : அபு தாவூத்

(ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டிருக்கிறது என்று ஹதீஸ் சொல்கிறது. முன்கூட்டியே கணித்து முடிவு செய்திருபார்களேயானால், கருத்து வேறுபாடுகள் ஏற்படாது. அனைத்தும் உறுதியான நாட்கள் தான்.
பிறை தெரியாமல் நோன்பு வைத்துக்கொண்டிருந்த நபி (ஸல்) அவரகளிடம் ஒரு கிராமவாசி கூட்டம் வந்து பிறை பார்த்த தகவலை சொல்கிறது. தகவல் கிடைத்த பிறகு நோன்பை விடுகிறார்கள்.
முன்கூட்டியே கணிக்கலாம் என்றிருந்தால் பிறை தகவலுக்காக அவர்கள் காத்திருக்க தேவையில்லை. வந்தவர்களிடம் "நாங்கள் கணித்து செயல்படுவோமே, நீங்கள் பிறை தகவலை ஏன் வந்து சொல்ல வேண்டும்? என்று கேட்டிருப்பார்கள்.
மார்க்கத்தில் முன்கூட்டியே கணிக்கலாம் என்றல்லவா இருக்கிறது? நீங்கள் ஏன் பிறை பார்த்தீர்கள்? என்று அவர்கள் கேட்டிருக்க வேண்டும், அவ்வாறும் கேட்கவில்லை)


அன்புடன், நாஷித் அஹமத்
السلام عليكم ورحمة الله وبركاته
, ,