குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

25.4.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

உடல் ஆரோக்கியம்
almighy-arrahim.blogspot.com
கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்றால் என்ன?
நமது உடலில், சவ்வு போல் உள்ள ஒரு படலம் கொழுப்புச் சத்து ஆகும்.

அதிக கொழுப்புச் சத்து இருதயத்துக்குக் கேடு. ஏன்?

நம் உடலுக்குத் தேவையான சராசரி 1500 மில்லிகிராம் கொழுப்பை, நம் உடம்பே உற்பத்தி செய்துகொள்கிறது. சுமார், 200 - 500 மில்லிகிராம் கொழுப்பு, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைப்பதால், உடலில் கொழுப்புச் சத்தின் அளவு கூடுகிறது. நாளடைவில் இந்தக் கூடுதல் கொழுப்பு, நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் படிந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.

உங்களுடைய உடலில் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்று சோதித்தது உண்டா?

அதற்கு, ‘லிப்பிட் புரொப்பைல் என்ற பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையை, 20 வயது முதல் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.

200 மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால் நமது உடலுக்கு நல்லது.

200-239மில்லிகிராம் அளவு இருந்தால் நாம் உஷாராக இருக்க வேண்டும்.

240மில்லிகிராமுக்கும் அதிகமாக இருந்தால், நாம் அதிக ஆபத்தை நோக்கிச் செல்வதாக அர்த்தம்.

நல்ல கொழுப்பு என்றால் என்ன? கெட்ட கொழுப்பு என்றால் என்ன?

HDL என்பது “நல்ல கொலஸ்ட்ரால்”ஆகும். இது நம்முடைய இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை நீக்க உதவும். இது நம் உடம்பில் 40மில்லிகிராமுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

HDL(நல்ல கொலஸ்ட்ரால்) இதனுடன் LDL(கெட்ட கொலஸ்ட்ரால்) மற்றும் டிரைகிளஷரைட்ஸ் சேர்ந்ததே கொழுப்பு ஆகும்.

HDL கொலஸ்ட்ராலை நமது உடம்பில் உள்ள கல்லீரலே உற்பத்தி செய்துகொள்ளும். இந்த நல்ல கொலஸ்ட்ரால், இருதயத்துக்குச் செல்லும் இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி, கல்லீரல் மூலமாக உடம்பில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. அதிகளவு கெட்ட கொலஸ்ட்ராலும், டிரைகிளஷரைட்டும், குறைவான நல்ல கொலஸ்ட்ராலும் இருந்தால், இருதய நோய்க்கான வாய்ப்பு அதிகமாகிறது.

குறைவான நல்ல கொலஸ்ட்ரால் உண்டாவதற்கான சில காரணங்கள்:

அதிக உடல் பருமன்;உடற்பயிற்சி இல்லாமை, டிரைகிளஷரைட்இன் அளவு அதிகமாக இருப்பதால், புகை பிடிப்பதால், சர்க்கரை நோய், சில மருந்துகள் உட்கொள்வதால், அதிகமான மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) உள்ள பொருட்களை உண்பதால். LDL என்பது “கெட்ட கொலஸ்ட்ரால்” ஆகும்.

வாழ்க்கையில் நாம் சில எண்களை மனப்பாடமாகத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். நம் நண்பர்களுடைய தொலைபேசி எண்கள், உயரம் மற்றும் உடல் எடை, அவர்களுடைய பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களை எவ்வாறு தெரிந்து வைத்து இருக்கிறோமோ, அதே போல் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் தெரிந்து கொள்வது அவசியம். இது நம் உடம்பில் 100 மில்லிகிராமுக்கும் கீழ் குறைவாக இருக்க வேண்டும். இது உடம்பில் உள்ள கொழுப்பை நமது இரத்த நாளங்களில் - குழாயில் எப்படித் துரு படிகிறதோ - அதேபோல் நமது இரத்த நாளங்களில் கொழுப்பு படிய உதவுகிறது.

இதனால் நாளடைவில் நமது இரத்த நாளங்கள் சுருங்கி, சீரான இரத்த ஓட்டத்துக்கு தடையாக ஆங்காங்கே இரத்த நாளங்களில் சிறுசிறு கட்டிகளாகப் படிந்து கொள்கிறது. இதனால் இருதயத்துக்கும், மூளைக்கும் குறைவான இரத்தம் கிடைக்கிறது.

கீழ்க்காணும் உணவு வகைகள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்

ஐÞகிரீம், வெண்ணெய் நீக்கப்படாத பால், ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சிகள், லிவர், கிட்னி போன்ற உறுப்புகளைச் சாப்பிடுவதாலும், தேங்காய் மற்றும் பனைமரத்து எண்ணெயால் செய்யப்பட்ட பதார்த்தங்களை அதிகமாக உட்கொள்வதாலும் அதிகரிக்கிறது.

டிரைகிளஷரைட்ஸ் என்றால் என்ன?

இதுவும் இரத்தத்தில் உள்ள ஒரு வகையான கொழுப்பு ஆகும். இது அதிகமானால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். உடம்பில் டிரைகிளஷரைட்இன் அளவு 150மில்லிகிராமுக்கும் குறைவாக இருப்பது அவசியம்.

இந்த 150 மில்லிகிராம் அளவை அடைய வேண்டுமானால், நாம் கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடிப்பது அவசியம்.

சீரான உடல் எடை இருக்க வேண்டும். சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும். புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். மதுபானம் அருந்துவதை அளவோடு வைத்து இருக்கவேண்டும்.

கொலஸ்ட்ரோலின் அளவை எப்படிக் குறைப்பது?

முதலில் நம் உணவு முறையை மாற்றவேண்டும். வேகவைத்த மற்றும் வெந்த உணவுகளை அதிகம் சாப்பிடலாம். வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை குறைவாகச் சாப்பிட வேண்டும். காய்கறி மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்க்கலாம். பச்சைத் தேயிலை டீ(Green Tea) பருகலாம். சீரான உடல் எடையுடன் இருக்க வேண்டும். தினசரி 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி இருக்கவேண்டும். மீன் வகைகள் சாப்பிடலாம். தோல் உரித்த கோழிகறிவகைகள் சாப்பிடலாம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் மீன், மாதத்தில் இரண்டு நாட்கள் கோழி, வருடத்தில் இரண்டு நாட்கள் ஆட்டு இறைச்சி உட்கொண்டால் எந்தக் கேடும் விளையாது. 40 வயதுக்கு மேல் பால் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. உலகில் எந்த ஒரு விலங்கினமும் மற்ற இனத்தின் பாலை அருந்துவது இல்லை, மனிதனைத் தவிர.

உங்கள் இருதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சர்க்கரை நோய், அதிக உடல் எடை, அதிக இரத்த அழுத்தம், அதிக இடுப்பின் அளவு, சோம்பேறித்தனம், மனச்சோர்வு மற்றும் அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு இவை எல்லாம் தீயவையே. இப்போதே நடவடிக்கை எடுத்து, கொழுப்புச் சத்தைக் குறைத்து, புகைப் பிடிப்பதைத் தவிர்த்து, காய்கறிகள் மற்றும் பழவகைகள் அதிகமாக உட்கொண்டு, நண்பர்களுடன் நடைப்பயிற்சி மற்றும் இசை, நடனங்களில் ஈடுபாடு கொண்டு, ரசித்து வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து, ஆரோக்கியமாக வாழுங்கள், இருதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

டாக்டர் அருள்.
, ,