இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

27/10/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

வாழப் பழகுங்கள்
almighty-arrahim.blogspot.com
உலக வாழ்க்கையைத் தேடி
ஊரூராய்ப் பறக்கும் மனிதா
அது
ஒழுகும் கூரைக்கொண்ட
உன் வீட்டு முற்றத்தில்
உட்கார்ந்திருப்பதை உணர்!


சில்லறையைத் தேடி நீ
சீமைக்குப் போனதால்
இழந்த
இல்லற வாழ்க்கையை
ஈடு செய்தல் எங்ஙனம்?

லட்சக் கணக்குப் பார்க்கும்
உ?ச்சகட்ட அவலமே,
நீ இழந்த
முத்தக் கணக்கை
என்றேனும் பார்த்ததுண்டா?

உச்சி மோந்து உருகும்
உம்மாவின் முத்தம்
தட்டிக் கொடுத்துத் தேற்றும்
தந்தையின் முத்தம்

தோள் தழுவும் உன்
தோழனின் முத்தம்
தேன் இனிக்கும் உன்
திருமதியின் முத்தம்

ஒட்டுமொத்தச் செல்வமும்
தட்டில் வைத்துத் தந்தாலும்
கிட்டிவிடுமா உனக்கு உன்
குட்டிப் பாப்பாவின் முத்தம்!

தாத்தாவுக்குத் தரும்
இருமல் மருந்திலும்
பாட்டியின் கைத்தாங்கி
படுக்கையில் இருத்துவதிலும்

அம்மாவுக்காக நிற்கும்
ஆஸ்பத்திரி காத்திருப்பிலும்
அப்பா அலுவல்களில்
அரைவாசியை ஏற்பதிலும்

ஆயிரம் முறை பார்த்தாலும்
அலுக்காத
அன்பு மனைவி கண்களிலும்

அவளை
அம்மாவென்று கழுத்தைக் கட்டும்
அன்பு மக்கள் அருகாமையிலும்
கொட்டிக்கிடக்கிறது வாழ்க்கை

கட்டுக் கட்டாய்க்
காசு கொடுத்தாலும்
கேவலம்
கனவுகளைக் கூட உன்னால்
வாங்கிவிட முடியாது

பிறகு ஏன்
நிதர்சனங்களை விட்டுவிட்டு
நிழலைப் பிடிக்க
நிற்காத இந்த ஓட்டம்

பந்தயக் குதிரைகள்
பிந்தைய நாட்களில்
சுட்டுக் கொல்லப்படுவதை அறி

லட்சங்களைக் காட்டிலும்
லட்சியங்களே வலிமையானவை

வசதிகளைவிட
வருடல்களே
வாழ்க்கையின் ஆதாரம்.
வாழப் பழகுங்கள்!

        * 'இளங்கவி'சபீர் அஹ்மது அபுஷாரூக்

, ,