பதிவுகளில் தேர்வானவை
3.8.19
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
டேலி அடிப்படை
ஏனெனில் கணக்கியல் பற்றிப் படிக்காதவர்களும் நிறுவன கணக்கு பொறுப்புகளை திறம்பட நடத்த டேலி மென் பொருள் உதவுகிறது.
இருப்பினும் கணக்கு பதிவியல் பற்றிய அடிப்படை அறிவும் தேவை. ஆகையால் இந்த பாடத்தில் கணக்கு பதிவியல் அடிப்படை சொற்கள் மற்றும் விதிகளை தெரிந்து கொள்வோம்.
கணக்கு பதிவியல் என்றால் என்ன?
பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் (அல்லது ) ஒரு இடத்தில் இருந்து வேறு இடம்
மாறுவதால் ஏற்படக்கூடிய வியாபார நடவடிக்கைகளை சரியாக கணக்கேடுகளில் பராமரிப்பது கணக்கு பதிவியல் எனப்படுகிறது.
கணக்கு பதிவியலில் சில அடிப்படை சொற்கள்
1. Business Transaction : இரு நபர்களுக்கு இடையே பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ கை மாறுவதை வியாபார நடவடிக்கை ( Business Transaction ) எனப்படுகிறது.
2. Assets : ஒருவரிடம் அல்லது நிறுவனத்திடம் சொந்தமாகவுள்ள பணம், கட்டிடம், நிலம், கருவிகள் போன்றவையும் வரவேண்டிய கடன் தொகையும் சொத்துகள் (Assets) எனப்படுகிறது.
3. Liabilities : முதலீடும் ( Capital ), தொழிலில் பிறருக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களும் பொறுப்புகள் (Liabilities) எனப்படுகிறது.
4. Capital : ஒரு தொழிலை தொடங்க முதலில் உரிமையாளர் கொடுக்கும் பணம் முதல் அல்லது முதலீடு (Capital) எனப்படுகிறது.
5. Goods : நிறுவனத்தில் விற்பதற்காக வாங்கப்படும் அனைத்து பொருட்களையும் சரக்கு ( Goods) எனப்படும்.
6. Debit : பற்று ( பயன் பெறுதலைக் குறிக்கும்)
7. Credit : வரவு ( பயன் கொடுத்தலைக் குறிக்கும்)
8. Debtor : பயனை (பொருளை) கடனுக்கு பெற்று நிறுவனத்திற்கு பணம் தரவேண்டியவரே கடனாளி ( Debtor) ஆவார்.
9. Creditor : நிறுவனம் பயனை (பொருளை) கடனுக்கு பெற்று திரும்ப பணம் பெறவேண்டியவரே கடன் ஈந்தோர் ( Creditor) ஆவார்.
10. Drawing : தனது சொந்த பயன்பாட்டிற்கு தொழிலில் இருந்து உரிமையாளர் எடுக்கும் பணம் அல்லது பொருள் எடுப்பு ( Drawing) எனப்படுகிறது.
11. Entry : ஒரு வியாபார நடவடிக்கை கணக்கு ஏடுகளில் பதியபடுவது பதிவு ( Entry) எனப்படுகிறது.
12. Ledger : பேரேடு ( ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு பெயர் கொடுத்து எழுதுவது )
13. Profit & Loss : இலாபம் & நட்டம்
14. Discount : தள்ளுபடி
இந்த வார்த்தைகள் அனைத்தும் கணக்கு பதிவியலின் சில அடிப்படை சொற்கள்.
இந்த கணக்கு பதிவியலின் கணக்குகள் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.
1. ஆள்சார் கணக்கு (Personal Account):
ஆள்களின் பெயர்களை கொண்டவை ஆள்சார் கணக்கு. இதில் தனி நபர்கள் , நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் பொது நிறுவனங்கள் பெயர்களை கொண்டவை ஆள்சார் கணக்குகள் .
2. சொத்து கணக்கு(Real or Asset Account):
சொத்துகளின் பெயர்களை கொண்டவை சொத்து கணக்குகள் எனப்படும்.
இதில் பணம், நிலம், கட்டிடம் , அறைகலன்கள் ( Furniture ), சரக்கிருப்பு (Stock- in - hand) இவையனைத்தும் அடங்கும்.
3. பெயரளவு கணக்கு(Nominal Account):
செலவுகள் மற்றும் வருமானங்கள் ஆகியவற்றின் பெயர்களை கொண்டது பெயரளவு கணக்கு. இதில் வாடகை , சம்பளம் , தள்ளுபடி , தரகு (Comission), தேய்மானம் (Depreciation) , விளம்பரம் ஆகியவை அடங்கும்.
கணக்கு பதிவியலின் அடிப்படை :
இரண்டு நபர்கள் (நிறுவனங்கள் ) தொடர்பு கொள்வதால்தான் ஒவ்வொரு வியாபார நடவடிக்கையும் உருவாகிறது . வாங்குபவர் இல்லாமல் விற்பவர் இல்லை. கொடுப்பவர் இல்லாமல் பெறுபவர் இல்லை. இப்படி ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு பகுதிகளை அடிப்படையாக கொண்டிருக்கும்.
இதை கணக்கு பதிவியலில் இரட்டை பதிவு முறை ( Double Entry System) எனப்படும்.
கணக்கு பதிவியலின் அடிப்படை விதிகள் :
1. ஆள்சார் கணக்கு (Personal Account):
பெறுபவரை பற்றில் வை - Debit : The Receiver.
தருபவரை வரவில் வை - Credit : The Giver.
2. சொத்து கணக்கு(Real or Asset Account):
உள் வருவனவற்றை பற்றில் வை Debit : What comes in.
வெளிச்செல்வனவற்றை வரவில் வை Credit: What goes out.
3. பெயரளவு கணக்கு(Nominal Account):
அனைத்து செலவுகளையும் நட்டங்களையும் பற்றில் வை
அனைத்து வருமானங்களையும் ஆதாயங்களையும் வரவில் வை
Debit : All Expenses and Losses.
Credit: All Incomes and Gains.
இங்கு கூறியுள்ள கணக்கு பதிவியலின் அடிப்படை விதிகள் எல்லா நேரத்திற்கும் பொருந்தும் . இந்த பாடத்திற்கு இந்த விதிகளே அடித்தளம் எனவே நினைவில் வைத்து கொள்வது அவசியம்.