குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

14.8.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் இக்லாஸ்- அல் ஃபலக்- அந்நாஸ்
இறைவன் என்பவன் …
அல் குல்ஆன் அத்தியாயம்:112 அல் இக்லாஸ்



ஆக்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று


படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் இறைவன்

வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் – அவன்
ஒருவன் என்று கொள்

உடற் தேவை உளத் தேவை
உள்ளிழுத்து வெளியேற்றும்
உயிர் சுவாசத் தேவை – இன்னும்
அகத் தேவை புறத் தேவை
அளவற்ற பொருட் தேவை
எனும் எத் தேவையும்
இல்லாதவன் அவன்

தாயொரு தெய்வம்
தந்தையொரு கடவுள்
மகனொரு கடவுள் – அவர்தம்
அண்ணனும் ஆண்டவன் என்று
குடும்ப உறுப்பினர்
பட்டியல் போலன்றி

ஈகையை எடுத்தியம்பும்
ஈடிணையற்ற இறைவன்
எவரையும்
ஈன்றெடுத்ததில்லை
யாராலும்
ஈன்றெடுக்கப் படவுமில்லை

அவனியைக் காக்கும்
அவனுக் கிணையோ
அகிலமும் படைத்த
அவனுக்கு நிகரோ
அவ் வொருவனைத் தவிர
யாரு மிலர்!

_ இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.


விடியல்
அல் குல்ஆன் அத்தியாயம்:113 அல் ஃபலக் 


 வெள்ளி விழித் தெழ
விடிகாலை வெளிச்ச மிட
வைகறை வரவுக் கென
வழிவிட்டு இருள் நீங்க

தூக்கத்தை விடச் சிறந்தது
தொழுகை எனக் குறித்து
வணங்க வரச் சொல்லி
வாங்கொலி விளித் தழைக்க

சேவல் சிணுங்கிக் கூவ
சிறு வண்டுகள் ரீங்கரிக்க
குருவிகள் கிரீச்சிட்டு
கலந்தொரு மெட்டுக் கட்ட

அகிலத்தின் விடியல்தனை
அழகாய்ப் படைத் தமைத்த
அவனிடமே நாடிவிடு
அத்துணைப் பாதுகாப்பும்

படைத்தவனின் பரிபாலிப்பில்
பலவிதப் படைப்பினங்கள் -அவை
சொல்லிலும் செயலிலுமான
தீங்கைவிட்டும் காக்கக் கேள்!

விழியைக் குருடாக்கும்
ஒளியை அழித்தொழிக்கும்
இருள்மேவும் இராப்போதின்
தீதைவிட்டும் காக்கக் கேள்!

அன்பின் ஆற்றலறியாத
அறிவால் தேற்றவியலாத
பண்பையும் பாழாக்கி
பாசமெனப் பசப்பியும்…

சூதையும் வாதையும்
சுருக்கிட்டு முடிச்சாக்கி -அதில்
மந்திரக் காற்றூதும்
மங்கையரின் தீங்கைவிட்டும்

தன்னுழைப்பில் தானுயரா
தன்னிலையில் நிறைவடையா
தன்மையான மானுடர்தம்
தீங்கிழைக்கும் தீயதுவாம்…

பொறாமை கொள்பவரின்
பொல்லாங்குத் தீண்டாமல்
காக்கக்கேள் கையேந்தி
கருணையாளன் இறைவனிடம் !

_ இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

பாதுகாவல்..
அல் குர்ஆன் அத்தியாயம்:114   அந்நாஸ் 


காவல் நிலையத்திலோ – வழக்
காடு மன்றத்திலோ
சட்டாம் பிள்ளையிடமோ – கடுங்
கட்டப் பஞ்சாயத்திலோ…

பாதுகாவல் தேடுவது
போதுமான தாகிடுமோ?
மானுடத்தைப் படைத்தவன் – அந்த
மாபெரும் இறையிடம்தேடு !

அவனன்றோ ஆக்குபவன் – துயர்
அனைத்தும் நீக்குபவன்;
மனிதகுலம் மீட்சியுற – நல்
மார்க்கம் தந்த மன்னனவன் !

நிற்கின்ற நிலையினிலோ – முன்
நெற்றிநிலம் தொட்டவாறோ
மனிதரெலாம் வணங்குதற்கு
இணையில்லா இறைவனவன் !

பிணிநீக்கிப் பாதுகாக்க – பல
மருத்துவர்கள் இங்குண்டு
பசியிலிருந்தும் மீட்டுவிடும் – சில
புண்ணியர்தம் பூமியிது !

கண்ணுக்குத் தெரியாமல் – நம்
கணிப்புக்கும் அடங்காமல்
பதுங்கி ஐயநோய் விதைப்போர்
தீங்கைவிட்டும் நீக்கக்கேள் !

இயல்பிலேயே பலவீனம் – இம்
மாந்தர்தம் இதயங்கள்
சந்தேக நோய்விதைக்கும் – அத்
தீயோரிடமிருந்து காக்கக்கேள் !

இத்தகைய தீயோர்கள்…

கண்ணுக்குப் புலப்படாத
படைப் பினங்களிலும் – நம்
கண்முன் நடமாடும் மனிதர்களிலும்
உளரென்று உணர் !

_ இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்.
, ,