குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

5.9.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அந்நஸ்ர்-தப்பத்
படைத்தவன் உதவி !  
அல் குர்ஆன் அத்தியாயம் : 110   அந்நஸ்ர்



வகுத்தவன் உதவி
வந்திட்டபோது – வழிவகை
விதித்தவன் வெற்றி
வாய்த்திட்டபோது


அலையலையாய் யாவரும்
அணி திரண்டுவந்து
ஆண்டவன் மார்க்கத்தில்
அவர் இணையும்போது

ஆண்டவன் புகழை
அதிகம் துதித்திடுவீர் – அவன்றன்
அளப்பரிய அருளை
அழுது கேட்டிடுவீர்;

மன்னிப்பை ஏற்குமந்த
மாண்புடையோன் முன்னிலையில் – எல்லாப்
பாவமும் பிழைகளும்
பொறுத்தருள வேண்டிடுவீர்!

இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.



அழிந்து ஆனவம் !
அல் குர்ஆன் அத்தியாயம் :111 அல் மஸது



தீப்பிழம்பின் தந்தை
யெனும்
தீயவன் அபுலஹபு
‘தீனு’க்கு எதிராகச் செய்த
தீமைகள் ஏராளம்!

நல்ல வழிகாட்டிய நம்
நாயகத்தை எதிர்த்து
‘நாசமே’ என் றுரைத்த
நயவஞ்சக நோயவன்!

அநியாயச் செயல் செய்த
அயோக்கிய அரக்கனவன்
அழியட்டும் கை இரண்டும்
அவனுமே ஒழியட்டும்!

அவன் கொண்ட செல்வமோ
அவன் சேர்த்த யாதுமோ
அவனுக்கு உதவாது- தீர்வு
அழிவுதான், மாறாது!

கொழுந்து விட் டெரியும்
கொடுந் தீயில் எறிந்து
நிரந்தர நெருப்பில் அவன்
நிலைகுலைந்து வீழ்வான்!

சுமக்கும் விறகை விட
கனக்கும் பாவம் செய்த
பாவியவன் மனைவிக்கும்
பேரழிவு உறுதியே!

பொன்மனச்செம்மல் நபி
போதனைக் கெதிராகப்
புறம்பேசி பகைவளர்த்து
பாதகம் செய்துவந்தக்

கொடுமைக்குப் பலனாக அக்
கொடியவள் கொலையாவாள்
கழுத்தில் சுருக்கிட்ட – ஈச்ச
முறுக்குக் கயிற்றினால் !

இளங்கவி சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்
, ,