குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

4.3.21

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் ஆதியாத்-அல் காரிஆ

வேகமாக ஓடும் குதிரைகள்!
அல் குர்ஆன் அத்தியாயம் :100  
அல் ஆதியாத்


முழு உந்து விசையோடு
முடுக்கிவிட்ட எந்திரம்போல்
மூச்சிரைக்க விரைந்தோடி
முந்துவன மீதாணை !

சிக்கிமுக்கிக் கற்களவைச்
சேர்ந் தெழுப்பும் தீப்பொறிபோல்
குளம்பில் பொறிபறக்க
குதித் தோடுவன மீதாணை !

ஒளிக்கதிரின் வேகம்போல்
விடிகாலை போதினிலே
எதிரிகளை வீழ்த்தவென
எம்பிப் பாய்வன மீதாணை !

புகைகிறதோ பூமி யென
பிரமித்துப் போகுமாறு
புழுதிப்படலம் எழுப்பி
பாய்ந்து செல்பவை மீதாணை !

எதிரிப் படைக்கிடையே
எகிரிப் பாய்ந்து சென்று
கூட்டமாய் உள்நுழைந்து
கலங்கடிப்பவை மீதாணை!

நிலையற்ற வாழ்விதனை
நிரந்தர மென்றெண்ணி – மனிதன்
நிச்சயமாக நாயனுக்கு
நன்றி கெட்டவனாகின்றான்!

நன்றி கெட்டச் செயல்களுக்கு
நல்லதொரு சாட்சியாக
தனக்கே எதிராகத்
தன்னையே காண்கிறான்!

ஆண்டவன் அளிக்குமந்த
அருள் வேண்டாமென்று -அற்பப்
பொருட்களை யன்றோ
பெரிதும் நேசிக்கிறான்!

அறிவுக்கு ஏனோ
அவனுக்கு எட்டவில்லை…

புதைக்கப்பட்ட குழியிலிருந்து
எழுப்பப்படும் நாளில் – மனிதன்
மனத்தில் மறைத்த யாவும்
வெளிக்கொணரப்படும் என்று !

எல்லாரும் அந்நாளில்
எழுப்பப்படும் வேளை
படைப்புகளின் கணக்கை
வடிப்பதில் இறைவன் நிபுணன் !

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி
அல் குர்ஆன் அத்தியாயம் :101 
அல் காரிஆ


நிலநடுக்கத்தை விஞ்சிடும்
குலைநடுங்கும் அதிர்ச்சி;
அழிகிறதோ உலகம் என
விழிபிதுங்கும் நிகழ்வு – அது!

சீரழிவை மீறிவிடும்
பேரழிவுப் பிரளயம்; சொல்லவொண்ணசோகமா
சோதனை என்பதெது?

என்ன அந்த அதிர்ச்சி?
எத்தகைய நிகழ்ச்சி?
எடுத்துமக்கு இங்கு
இயம்பியதும் – எது?

விளக்கைச் சுற்றிச்சுற்றி
வெளிச்சப் பாலருந்தும்
விட்டில்களாய் மனிதர்கள்
வீழ்ந்திடுவர் அந்நாளில்

கடும் கற்கள் அடர்த்தியுற்று
பெருத்துவந்த கனமலைகள்
வெறும் பஞ்சுப் பொதிகளென
பறந்துவிடும் அந்நாளில்

நற்செயல்களை நாடியும்
நல்லறங்களைத் தேடியும்
நன்மைகளின் எடை கனத்த
இம்மையின் நல் இனத்தோர்…

நிம்மதியும் நிறைமனதும்
மங்காத இன்பமுடன்
மகிழ்வுடனே வாழ்ந்திடுவர்
மேன்மைமிகு இறையருளால்!

பாவங்கங்கள் செய்துகொண்டு
பலவாறு தீங்கிழைத்து
நன்மைகளின் எடை குறைந்த
இம்மையில் இழிவானோர்

தங்குமிடம் கொடியதாகும்
எத்தகையக் கொடியதென்று
இயம்பியது எது உமக்கு?
அழித்தொழிக்கும் தீயாகும் – அது!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்
, ,