குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

29.4.22

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

லைலத்துல் கத்ரு
உலகப் பொதுமறையான அல்குர்ஆனை இறக்கிய நாளை புனித நாளாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டியாக வந்த அல்குர்ஆன் அருளப்பட்ட அந்த இரவை பாக்கிய மிக்க இரவாக ஆக்கி, அதில் தன்னை வணங்குவோருக்கு ஆயிரம் மாதங்கள் வணங்கிய நன்மைகளை வல்ல அல்லாஹ் வழங்குகின்றான்.

ஆயிரம் மாதங்களை விட மேன்மையான இந்த லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகளை முஸ்லிம் சமுதாயம் அறியாமல் இல்லை. ஆனால் அந்தோ பரிதாபம்! மார்க்கக் காரியங்களில் குர்ஆன் ஹதீஸை விட்டு விலகிச் சென்று விட்ட இந்தச் சமுதாயத்தில் லைலத்துல் கத்ரு விஷயத்திலும் வழக்கமான பித்அத்துகளே மேலோங்கி நிற்கின்றன. இதனால் லைலத்துல் கத்ரு இரவில் அல்லாஹ் நமக்கு வழங்குகின்ற எண்ணிலடங்காத நன்மைகளை வீணாக்கிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்.

லைலத்துல் கத்ரு இரவு எப்போது?

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்றால் அந்த இரவு எப்போது?என்ற கேள்விக்கு விடை காண்பது அவசியமாகின்றது. இந்தக் கேள்விக்கு விளக்கமளிக்கப் புகுந்த விற்பன்னர்கள், அந்தப் பெரியார் அப்படிக் கனவு கண்டார்,இந்தப் பெரியார் இப்படிக் கனவு கண்டார் என்று கனவுக் கதைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதித் தீர்ப்பாக 27ஆம் இரவில் வந்து நிற்கின்றார்கள்.

பொதுவாகவே லைலத்துல் கத்ரு என்ற உடனே நமக்கு நினைவுக்கு வருவது ரமலான் பிறை 27ஆம் இரவு தான். மஸ்ஜிதுகளில் ஜொலிக்கும் வண்ண விளக்குகள்,அலங்காரங்கள், தோரணங்கள், வீதிகளில் ஒளி மயம் என்று 27ம் இரவு, களை கட்டியிருப்பதைப் பார்க்க முடிகின்றது. மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய ஆலிம்களும் 27ம் இரவில் மட்டும் திக்ரு மஜ்லிஸ்கள், சிறப்புத் தொழுகைகள் என நடத்தி விட்டு மற்ற நாட்களில் காயப் போட்டு விடுகின்றனர்.

ஆனால் 27ம் இரவு தான் லைலத்துல் கத்ரு என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் காட்டித் தரவில்லை. மகத்துவமிக்க இரவில் அல்குர்ஆன் யாருக்கு வழங்கப் பட்டதோ அந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த இரவு குறித்து என்ன கூறுகின்றார்கள் என்று பார்ப்போம்.

நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர், இருபத்தி ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் கனவைப் போல் நானும் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாட்களில் தான் அமைந்துள்ளது. யார் லைலத்துல் கத்ரை அடைய முயற்சிக்கின்றாரோ அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 1158

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 2017

இந்த ஹதீஸ்களில் ரமளானின் பிந்திய பத்து இரவுகளிலுள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரு அமைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன. மேலும் சில ஹதீஸ்களில் பிந்திய ஏழு இரவுகளிலுள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரு அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர லைலத்துல் கத்ரு இன்ன இரவு என்று குறிப்பிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த இரவையும் கூறவில்லை. ஆனால் பொதுவாக ரமளானின் பிந்திய பத்து இரவுகளுமே நபி (ஸல்) அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வணங்குவார்கள் என்று பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இடம்பெறுகின்றன.

லைலத்துல் கத்ரில் இல்லறத் தொடர்பை தடுத்துக் கொள்ளல்.

(ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள். இரவை உயிர்ப்பிப்பார்கள். தமது குடும்பத்தினரையும் (இறைவனை வணங்குவதற்காக) எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 2024

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்து நாட்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம்

லைலத்துல் கத்ரை அடைவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்த இமாலய முயற்சிகள் இவை! பிந்திய பத்து நாட்களிலும் அவர்கள் மஸ்ஜிதில் தங்கி (இஃதிகாஃப்) இருந்துள்ளார்கள். அவர்கள் மரணிக்கும் வரை இவ்வாறு செய்துள்ளார்கள் எனும் போது, நாம் இந்த இரவுகளைக் கோட்டை விட்டு விட்டு,குறட்டை விட்டுத் தூங்கலாமா?

லைலத்துல் கத்ரில் செய்ய வேண்டிய அமல்கள்

இந்தத் தலைப்பிட்ட பிரசுரங்கள் ரமளான் மாதத்தில் எல்லா மஸ்ஜிதுகளிலும் பரவலாக வழங்கப்படுவதைக் காணலாம். அந்தப் பிரசுரங்களில் ஏராளமான வணக்கங்களைக் கூறியிருப்பார்கள். அதன் அடிப்படையில் குல்ஹுவல்லாஹு சூராவை நூறு தடவை ஓதி தொழுதல், தஸ்பீஹ் தொழுகை, கூட்டாக சப்தம் போட்டு திக்ரு செய்தல் என பல்வேறு வணக்கங்களை மக்கள் செய்து வருகின்றார்கள். இவை எதற்குமே ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.

பாக்கியமிக்க இந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தராத,பித்அத்தான செயல்களைச் செய்து நம்முடைய அமல்களை நாம் பாழாக்கி விடக் கூடாது.

லைலத்துல் கத்ரில் தொழ வேண்டியவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ஒரு தனிப்பட்ட தொழுகையையும் கற்றுத் தரவில்லை.

ரமளானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூ ஸலமா, நூல் : புகாரி 1147

லைலத்துல் கத்ருக்கு என பிரத்தியேகமாக எந்தத் தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக எடுத்துரைக்கின்றது. வழக்கமாக தொழும் இரவுத் தொழுகை 8+3 பதினொரு ரக்அத்துகளைத் தான் நபி (ஸல்) அவர்கள் நிறுத்தி, நிதானமாகத் தொழுதுள்ளார்கள். எனவே பதினொரு ரக்அத்துகளை நிலை, ருகூவு, சுஜூது போன்ற தொழுகையின் ஒவ்வொரு அம்சத்தையும் நீட்டித் தொழுவது தான் லைலத்துல் கத்ரில் நாம் செய்ய வேண்டிய வணக்கமாகும்.

லைலத்துல் கத்ரில் சொல்ல வேண்டிய துஆ

“அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கற்றுத் தந்தார்கள்.

அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ

பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு! அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : திர்மிதீ 3435

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரில் செய்வதெற்கென பிரத்தியேகமாகக் கற்றுத் தந்த ஒரு வணக்கம் உண்டென்றால் அது இந்த துஆ தான். எனவே இந்த துஆவை பிந்திய பத்து இரவுகளில் அதிகமாகச் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி பிந்திய பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்து, அந்த இரவுகளில் நின்று வணங்கி ஆயிரம் மாதங்களை விட மேன்மையான அந்த லைலத்துல் கத்ரை இன்ஷா அல்லாஹ் அடைவோமாக!

நன்றி Riyadhtntj.net
, ,