குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

26.3.24

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்குரான் விளக்கம்
Masjid janna

1. மறுமை நாள்

வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும்.
அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான். யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. உலகம் அழிக்கப்பட்ட பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும். நல்லவர்களுக்குப் பேரின்பம் கிடைக்கும். கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது. மறுமை, மறுஉலகம், அவ்வுலகம், தீர்ப்பு நாள், ஒன்று திரட்டப்படும் நாள், யாரும் யாருக்கும் உதவ முடியாத நாள், திரும்பச் செல்லும் நாள், கூலி வழங்கும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன் தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், கைசேதப்படும் நாள், இறைவன் முன்னால் நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள் இன்னும் பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள், எந்தச் சந்தேகமும் இல்லாத நாள் போன்ற சொற்கள் அழிக்கப்படும் நாளுக்கும், உயிர்ப்பிக்கப்படும் நாளுக்கும் பொதுவானவை. அழிக்கப்படும் நாள், மீண்டும் உயிர்ப்பிக்கும் நாள் ஆகிய இரு நாட்களும் எப்போது ஏற்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும், ஏன் வானவர்களும் கூட அறிய மாட்டார்கள். அந்த நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்று 7:187, 20:15, 33:63, 79:42 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இவ்வுலகில் மனிதன் நல்லவனாக வாழ இத்தகைய ஒரு நாளை நம்புவது பெரிதும் உதவும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். (இந்நாள் குறித்து அதிக விபரங்கள் அறிய பொருள் அட்டவணை பகுதியில் கியாமத் நாள் - இறுதி நாள் என்ற தலைப்பில் காண்க!)
2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள் திருக்குர்ஆனில்


சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக SUN (சன்) எனக் கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். S.U.N (எஸ், யு, என்) எனத் தனித்தனியாகக் கூறினால் மூன்று எழுத்துக்களைக் கூறியுள்ளோம் என்பதைத் தவிர இதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. இது போலவே அரபுமொழியில் 'அலம' என்று கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். அலிஃப், லாம், மீம் என அச்சொல்லின் எழுத்துக்களைத் தனித்தனியாகக் கூறினால் அரபு மொழியில் உள்ள மூன்று எழுத்துக்களைக் கூறினோம் என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இதற்கு இருக்காது. திருக்குர்ஆனில் 29 அத்தியாயங்கள் இதுபோல் சில எழுத்துக்களைக் கொண்டு துவங்குகின்றன. 2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 50, 68 ஆகியவை அந்த அத்தியாயங்களாகும் பொருள் கூற முடியாத எழுத்துக்களைக் கொண்டு இந்த 29 அத்தியாயங்களும் ஏன் துவங்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். அன்றைய அரபுப் பண்டிதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. உயர்தரமான இலக்கியங்களைப் படைக்கும்போது துவக்கத்தில் ஓரிரு எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தனர். எனவே அனைத்து அரபு இலக்கியங்களையும் மிஞ்சி நிற்கின்ற திருக்குர்ஆன் - தன்னைப் போல் எவராலும் உருவாக்க முடியாது என்று அறைகூவல் விடும் திருக்குர்ஆன் - அதே வழிமுறையைக் கையாண்டு அறை கூவல் விடுத்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறு விஷயத்திற்குக் கூட விளக்கம் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் இது குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பியதில்லை. இது பற்றி கேள்வி எழுப்பியதாக ஒரு சான்றும் இல்லை. அன்றைக்கு இது சாதாரணமான நடைமுறையாக இருந்ததை இதிலிருந்து அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்துக்கும் களங்கம் ஏற்படுத்த எத்தனையோ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். திருக்குர்ஆனில் கையாளப்பட்ட இது போன்ற சொற்பிரயோகம் அன்றைக்கு சாதாரணமாகவும், அன்றைய மக்களால் ஏற்கப்பட்டதாகவும் இல்லாதிருந்தால் இதைக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்கள். முஹம்மதைப் பார்த்தீர்களா? அர்த்தமே இல்லாமல் உளறி விட்டு இறைவேதம் என்கிறார் எனக் கூறியிருப்பார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் செய்த எதிரிகள் இது குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஒரே ஒருவர் விமர்சித்ததாகக் கூட எந்தச் சான்றும் இல்லை. அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்ததிலிருந்தும் இதுபோன்ற சொல்வழக்கு அன்றைய மக்களிடம் இருந்துள்ளதை அறியலாம். எனவேதான் மேலே குறிப்பிட்ட அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம்பெறும் எழுத்துக்களைத் தமிழிலும் அப்படியே குறிப்பிட்டுள்ளோம். அன்றைக்கு இது அரபுகளிடம் சர்வ சாதாரணமாக இருந்த ஒரு வழக்கம் என்று இதைப் புரிந்து கொள்வதே போதுமானதாகும்.

3. மறைவானவற்றை நம்புதல்


இவ்வசனத்தில் (2:3) மறைவானவற்றை நம்பவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி மறைவானவற்றை நம்புவது என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை நம்புவதைக் குறிக்கும். அல்லாஹ்வையும், வானவர்களையும், சொர்க்கத்தையும், அதில் கிடைக்கும் இன்பங்களையும், நரகத்தையும், அதில் அமைக்கப்பட்ட பல்வேறு தண்டனைகளையும், நியாயத் தீர்ப்பு நாளையும், அந்நாளில் ஏற்படும் அமளிகளையும் மற்றும் மறுமையில் நடக்கவுள்ளதாக இஸ்லாம் கூறும் அனைத்து விஷயங்களையும் கண்ணால் காணாமல் இருந்தும் நம்புவது தான் மறைவானவற்றை நம்புதல் எனப்படும்.

4. முன்னர் அருளப்பட்டவை


இவ்வசனங்களில் (2:4, 4:60, 4:136, 4:162, 5:59, 10:94) முன்னர் அருளப்பட்டவை குறித்து கூறப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எனும் இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன. முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அவற்றை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41 ஆகிய வசனங்களில் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன எனவும் கூறுகிறது. திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்ப வேண்டும். வேதங்களைக் குறித்து முஸ்லிம்களிடம் சில தவறான நம்பிக்கைகள் உள்ளன. "தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன'' என்பதும் அந்த தவறான நம்பிக்கையில் ஒன்றாகும். தவ்ராத், ஸபூர், இஞ்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதால் இந்தத் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். எல்லா இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று 2:213, 14:4, 19:12, 57:25, 87:18,19 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. மேற்கண்ட நான்கு வேதங்கள் கிதாப் எனும் பெரிய வேதங்கள் என்றும், இவை அல்லாதவை ஸுஹுஃப் எனும் சிறிய வேதங்கள் என்றும், ஸுஹுஃப் எனும் சிறு வேதங்கள் சில தூதர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தன என்றும் சிலர் கருதுகின்றனர். திருக்குர்ஆன், தவ்ராத், இஞ்ஜீல், ஸபூர் ஆகிய நான்கும் முறையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூஸா நபி, ஈஸா நபி, தாவூத் நபி ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இவை மட்டுமே கிதாப் எனும் பெரிய வேதங்கள். மற்ற இறைத்தூதர்களுக்கு ஸுஹுஃப் எனும் சிறிய ஏடுகள் வழங்கப்பட்டன என்றும் கூறுகின்றனர். இது வேதம் குறித்து முஸ்லிம்களிடம் காணப்படும் மற்றொரு தவறான நம்பிக்கையாகும். இதற்குத் திருக்குர்ஆனிலோ, ஏற்கத்தக்க நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை. திருக்குர்ஆன் 98:2 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஸுஹுஃபை ஓதிக் காட்டுவார்கள்'' என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தைப் பற்றி, கிதாப் என்று பல வசனங்களில் கூறப்படுவது போல் இவ்வசனத்தில் (98:2) ஸுஹுஃபு என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கிதாப் என்பதும், ஸுஹுஃபு என்பதும் ஒரே கருத்தைக் கொண்டவை என்பது தெளிவாகின்றது. வேதம் என்ற அடிப்படையில் இவ்விரு சொற்களும் ஒரே கருத்தைத் தருபவை தான் என்றாலும், தொகுக்கப்படும் விதத்தைப் பொறுத்து இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. தனித்தனி ஏடுகளாக இருக்கும்போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும்போது அது கிதாப் என்றும் சொல்லப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது. அதனால் ஸுஹுஃப் என்று சொல்லப்படுகிறது. இந்தக் குர்ஆன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்து ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் கொண்டு வரப்பட்டதால் இது கிதாப் என்றும் சொல்லப்பட்டது.

5. மனித ஷைத்தான்கள்


இவ்வசனங்களில் (2:14, 2:102, 6:112) குறிப்பிடப்படும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதர்களைக் குறித்து சொல்லப்பட்டதாகும். இவை தவிர மற்ற அனைத்து வசனங்களிலும் ஷைத்தான் என்பது அதன் நேரடிப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். நேரடிப் பொருள் கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது மட்டும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதுபோல் முன்பின் வாசக அமைப்பு நேரடிப் பொருள் கொள்ள இடம் தராவிட்டால் அப்போதும் கெட்ட மனிதர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்கள் ஷைத்தான் என்பதற்கு நேரடிப் பொருள் கொள்ள முடியாத வசனங்களாகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் மீண்டும் மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவர் தான் ஷைத்தான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரீ 3275 தொழுது கொண்டிருக்கும்போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுபோல் கெட்ட மனிதர்களே இவ்வசனங்களில் ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

6. அல்லாஹ் இயலாதவனா?


இவ்வசனங்களை (2:15, 2:88, 2:89, 2:152, 2:158, 2:159, 2:161, 3:87, 4:46, 4:47, 4:52, 4:93, 4:118, 4:147, 5:13, 5:60, 7:44, 9:68, 9:79, 11:18, 24:7, 33:57, 33:64, 38:78, 47:23, 48:6, 64:17, 76:22) மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வை பலவீனனாகக் காட்டுவது போல் சிலருக்குத் தோன்றலாம். அல்லாஹ் அனைத்து ஆற்றலும் மிக்கவன். எந்தக் காரியத்தையும் அவன் செய்வதென்றால் 'ஆகு' எனக் கூறினால் உடனே ஆகி விடும். ஆனால் "அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான்", "அல்லாஹ் கேலி செய்கிறான்", "அல்லாஹ் ஏமாற்றுகிறான்" என்பன போன்ற வாக்கியங்கள் இவ்வசனங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. ஏமாற்றுதல், கேலிசெய்தல் போன்றவை கையாலாகாத பலவீனர்களின் செயல்களாகும். 'ஆகு' என்று கூறி ஆக்கும் வலிமை பெற்றவன், திட்டமிட்டு சூழ்ச்சி செய்யத் தேவை இல்லை எனும்போது இறைவன் ஏன் இப்படிக் கூற வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். பெரும்பாலான மொழிகளில் இத்தகைய சொற்பிரயோகங்களை அதற்குரிய நேரடிப் பொருளைத் தவிர்த்து வேறு பொருளிலும் பயன்படுத்துவதைக் காணலாம். உதாரணமாக, "நீ வரம்பு மீறினால் நான் வரம்பு மீறுவேன்'' என்று நாம் கூறும்போது, முதலில் உள்ள வரம்பு மீறுதல் தான் அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாகக் கூறப்பட்ட வரம்பு மீறுதல், பதிலடி என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் நமக்கெதிராக வரம்பு மீறிய பின் அதற்குப் பதிலடி தருவது வரம்பு மீறலாக ஆகாது. "அவர்கள் கேலி செய்தால் அல்லாஹ்வும் கேலி செய்வான்'' என்பது "கேலி செய்ததற்கான தண்டனையை வழங்குவான்'' என்ற கருத்திலும், "அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்'' என்பது "சூழ்ச்சியைத் தோல்வியுறச் செய்வான்'' என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. "நீ செய்தால் நான் செய்வேன்'' என்ற தோரணையில் அமைந்த, இறைத் தன்மையைப் பாதிக்கும் வகையிலான அனைத்துச் சொற்களையும் இவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும். கண்டிக்கும் வகையில் இல்லாமல் பாராட்டும் வகையிலும் இத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. "என்னை நீ நினைவு கூர்ந்தால் நானும் உன்னை நினைவு கூர்வேன்'' "நீ நன்றி செலுத்தினால் நானும் நன்றி செலுத்துவேன்'' என்று இறைவன் கூறுவான். இறைவன் நம்மை நினைவு கூரத் தேவையில்லை. நமக்கு நன்றி செலுத்தவும் தேவையில்லை. எனவே அதற்கான பலனைத் தருவான் என்று இது போன்ற சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டும். "இறைவன் சபிக்கிறான்'' என்றால் "தண்டிக்கிறான்'' என்று புரிந்து கொள்ள வேண்டும்.



7. திருக்குர்ஆனின் அறைகூவல்


இவ்வசனங்கள் (2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34) திருக்குர்ஆனைப் போல் ஒரு நூலை உலகமே திரண்டாலும் உருவாக்கிட இயலாது என்று அறைகூவல் விடுகின்றன. எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், அரபுமொழி விற்பன்னர்களாகவும், உயர்ந்த இலக்கியத் தரத்தில் கவிதைகளை இயற்றுவோராகவும் இருந்தனர். எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதை இறைவேதம் எனக் கொண்டுவந்தார்களோ அது அன்றைய விற்பன்னர்களது இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது. (திருக்குர்ஆன் எவ்வாறு இறைவேதமாக அமைந்துள்ளது என்பதை முன்னுரையில் ‘இது இறைவேதம்’ என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.) எனவே "இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தை எழுத்தறிவு இல்லாத முஹம்மது கற்பனை செய்து விட்டார் என்று நீங்கள் கருதினால் பண்டிதர்களான நீங்கள் இதுபோல் தயாரித்துக் காட்டுங்கள்!'' என்று திருக்குர்ஆன் மூலம் அறைகூவல் விடப்பட்டது. முழு மனித குலத்துக்குமான இந்த அறைகூவல் இன்றளவும் எவராலும் எதிர்கொள்ளப்படவில்லை. திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா?


"சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்றும், பெண் துணைகள் உள்ளனர் என்றும் இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது. நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? என்ற கேள்வி இதில் எழும். இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் சொல்லிலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ்மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கை ஒருமையில் மட்டுமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்புகள் உள்ளன. உதாரணமாக அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும். படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு தமிழில் கிடையாது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக 'அவர்கள்' எனக் கூறுகிறோம். அரபுமொழியில் படர்க்கை ஒருமையில் மட்டுமின்றி படர்க்கைப் பன்மையிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது. அதுபோல் முன்னிலையில் பேசும்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 'நீ' 'நீங்கள்' என்று கூறுகிறோம். தமிழ்மொழியில் இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. ஆனால் அரபுமொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்புகள் உள்ளன. தொழுங்கள் என்று தமிழ்மொழியில் கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் குறிக்கும் சொல்லமைப்பு என்று புரிந்து கொள்வோம். ஆனால் அரபுமொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க பொதுவான சொல்லமைப்பு இல்லை. 'ஸல்லூ' (தொழுங்கள்) என்று அரபுமொழியில் கூறினால் ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும்போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும். பெண்களை நோக்கி 'தொழுங்கள்' என்று கூறுவதாக இருந்தால் 'ஸல்லீன' எனக் கூற வேண்டும். அரபுமொழியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் "ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்'' என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டும். திருக்குர்ஆனில் உள்ள அனைத்துமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது என்பதால் அனைத்துக் கட்டளைகளையும் இப்படி இரண்டிரண்டு தடவை கூற வேண்டிய நிலை இதனால் ஏற்படும். ஒவ்வொரு கட்டளையையும் இரண்டிரண்டு தடவை கூறினால் தற்போது உள்ள திருக்குர்ஆன் போல் இரு மடங்காக ஆகி விடும். மேலும் அரபு அல்லாத மொழியில் மாற்றம் செய்யும்போது இந்த நடை வெறுப்பை ஏற்படுத்தி விடும். சுருக்கமாகவும், எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டு விடாமலும், ஆண்களையும், பெண்களையும் உள்ளடக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருக்குர்ஆன் ஒரு மாற்றுவழியைத் தேர்வு செய்துள்ளது. அதாவது அனைத்துக் கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டு, "ஆண்களுக்குச் சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளன" என்று ஒன்றிரண்டு வசனங்களில் மட்டும் கூறுவது தான் அந்த வழிமுறை. "ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?'' என்று உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. நூல் : அஹ்மத் 25363 இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் 33:35 வசனத்தில் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக் கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்குக் கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது. 4:124 வசனத்தில் நல்லறம் செய்த ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 4:124, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன. ஆண்களும், பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும்போது, ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகளை அல்லாஹ் வழங்கமாட்டான். மறுமையில் பரிசு வழங்கும்போது "அனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்'' என்ற கருத்தை 5:119; 9:100; 22:59; 58:22; 88:9; 98:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள். எனவே அல்லாஹ், ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்து விட்டு, பெண்களுக்குத் துணை இல்லாமல் விடமாட்டான். ஹூருல் ஈன்கள் மட்டுமின்றி சொர்க்கத்தில் இன்னும் ஏராளமான பாக்கியங்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் போது ஆண்பாலாகவே கூறியிருக்கிறது. 2:82, 3:15, 3:136, 3:198, 4:13, 4:57, 4:122, 5:85, 5:119, 7:42, 9:22, 9:72, 9:89, 9:100, 10:26, 11:23, 11:108, 14:23, 18:108, 20:76, 21:102, 23:11, 25:16, 25:76, 29:58, 31:9, 39:73, 46:14, 48:”5 57:12, 58:22, 64:9, 65:11, 98:8 ஆகிய வசனங்களில் சொர்க்கத்தில் நுழைந்தவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த அனைத்து இடங்களிலும் காலிதூன் என்ற ஆண்பால் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. காலிதாத் என்ற பெண்பால் சொல் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தப்படவில்லை. ஆண்கள் மட்டும் தான் சொர்க்கத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. ஆண்களுக்குச் சொல்லப்பட்ட அனைத்தும் பெண்களுக்கும் உரியது என்றே புரிந்து கொள்கிறார்கள். இறையச்சமுடையவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று கூறும் போது முத்தகீன் என்ற ஆண்பால் சொல்லைத்தான் திருக்குர்ஆன் 3:13313:35, 15:45, 16:30, 16:31, 25:15, 26:90, 28:83, 44:51, 50:31, 51:15, 52:17, 52 54, 54:55, 68:34 77:41 ஆகிய வசனங்களில் பயன்படுத்தியுள்ளது. பெண்பாலைக் குறிக்கும் முத்தகியாத் என்று ஒரு வசனத்தில் கூட சொல்லப்படவில்லை. இறையச்சமுடைய ஆண்களுக்கு மட்டும் தான் சொர்க்கம் என்று இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு சொர்க்கம் உண்டு எனக் கூறும் 3:136, 3:198, 5:65, 9:21, 9:111, 10:9, 13:23, 15:47, 16:31, 18:107, 19:62, 31:8, 32:19 33:44, 34:47, 36:57, 37:42, 38:50, 42:22 ஆகிய வசனங்களில் லஹும் என்று ஆண்பாலாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது ஆண்களாகிய அவர்களுக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு சொர்க்கத்தின் பாக்கியங்கள் இல்லை என்று யாரும் கூறுவதில்லை. சொர்க்கவாசிகளின் முகம் வெண்மையாக இருக்கும் எனக் கூறும் 3:107 வசனத்தில் ஆண்களைக் குறிக்கும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலாறு, தேனாறு, மதுவாறு ஆகியவை சொர்க்கத்தில் உண்டு எனக்கூறும் 47:15 வசனத்தில் இவை ஆண்களுக்கு உரியதாகவே கூறப்பட்டுள்ளது. தங்க ஆபரணங்கள், பட்டாடை ஆகியவை வழங்கப்படுவதாகவும், கட்டில்களில் சாய்ந்து இருப்பார்கள் என்றும் கூறும் 18:31, 22:23, 35:33, 43:71, 52:20, 55:54, 76:13, வசனங்களில் ஆண்களுக்கு வழங்கப்படுவதாகவே கூறப்பட்டுள்ளது. மாளிகைகள், குவளைகள், பணிபுரியும் இளமை மாறா சிறுவர்கள், இறைச்சி, வெள்ளிப்பாத்திரம், வெள்ளிக்குவளை, கற்பூரம் கலந்த பானம், இஞ்சி கலந்த பானம், கட்டில்கள், கஸ்தூரியால் முத்திரையிடப்பட்ட பானம், நீரூற்றுக்கள், நிழல்கள், கனிகள் உள்ளிட்ட பாக்கியங்களைக் கூறும் 37:45, 38:51, 39:20, 43:73, 46:47, 52:22, 52:23, 52:24, 56:16-21, 76:5, 76:15, 76:17, 76:19, 77:41, 83:23, 83:25 ஆகிய வசனங்களில் ஆண்பாலாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது நல்லறம் செய்த ஆண்கள் இதனை அனுபவிப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. சொர்க்கத்தின் எல்லா பாக்கியங்களும் ஆண்களுக்கு உரியது என்ற கருத்தைத் தரும் வகையில் திருக்குர்ஆன் கூறி இருப்பதால் இவை எதுவும் பெண்களுக்கு இல்லை என்று ஒரு அறிஞரும் கூறவில்லை. ஆனால் ஹூருல் ஈன் குறித்து பேசும்போது மட்டும் ஆண்களுக்கு என்று தானே சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்குத் துணை உண்டு என்று சொல்லப்பட்டுள்ளதா என்று கேட்கின்றனர். அப்படியானால் சொர்க்கத்தின் எல்லா இன்பங்களும் ஆண்களுக்கு உரியதாகத் தானே சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு இல்லை என்று சொல்வீர்களா என்று கேட்டால் ஏற்கத்தக்க பதில் அவர்களிடம் இல்லை. இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு யார் கணவராக இருந்தாரோ அவரே சொர்க்கத்தில் அவருக்குக் கணவராக அமைவார் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஏற்கத்தக்க எந்தச் சான்றும் இல்லை. கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும்போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் நல்லவர்களாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்? என்று பல கேள்விகள் இக்கூற்றினால் எழும். "இங்கிருந்த துணையை விடச் சிறந்த துணையைக் கொடு'' என்று இறந்தவருக்காகப் பிரார்த்திக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர். நூல் : முஸ்லிம் 1674, 1675, 1676 ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவருக்காகவும் இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நபிவழியாகும். இங்கிருப்பதை விடச் சிறந்த துணை ஆண்களுக்கும், பெண்களுக்கும் மறுமையில் உண்டு என்பதை இதிலிருந்து அறியலாம். எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் கொண்டு அறிந்து கொள்கிறோம். அதுபோலவே சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்து ஆண்பாலாகக் கூறப்பட்டாலும் அது பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதும், இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.
பிஜெ புனித குரான் விளக்கங்களிருந்து இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
, ,