குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.1.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மறுமை வாழ்வு - ஒரு தெளிவு!
மறுமை வாழ்வு - ஒரு தெளிவு!

ஆராய்ச்சி மற்றும் பகுத்தாய்வு அடிப்படையில் கிடைக்கப் பெறும் விவரங்களை வகைப்படுத்துவதை மட்டுமே விஞ்ஞானம் கவனத்தில் கொள்கிறது. ஆகவே, இறப்பிற்குப் பின் ஒரு வாழ்வு உண்டு எனும் கேள்விக்கு அறிவியல் ஆய்வெல்லையில் இடமேயில்லை. அறிவியல் ஆராய்ச்சியிலும் பகுப்பாய்விலும் மனிதன் சில நூற்றாண்டுகளாகவே ஈடுபட்டுள்ளான். ஆனால், இறப்பிற்குப் பின்னரும் வாழ்வு உண்டு
எனும் கோட்பாடோ நீண்ட நெடுங்காலமாக மனிதனுக்கு அறிமுகமானதொன்று. உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் மனிதர்களை இறைவனை வணங்குமாறும் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வில் நம்பிக்கை கொள்ளும்படியும் போதித்து வந்துள்ளனர். மறுமை வாழ்வின் மீது கொள்ளும் எள்ளளவு சந்தேகமும் இறைமறுப்புக்கு வழி வகுப்பதோடு ஏனைய நம்பிக்கைகளையம் பொருளற்றதாக்கி விடும் எனும் அளவுக்கு அவர்கள் மறுமை வாழ்வைப் பற்றி வலியுறுத்தியுள்ளார்கள். பல நூற்றாண்டு கால இடைவெளியில் தோன்றிய இறைத்தூதர்களும் மறுமை வாழ்வை அத்தனை நம்பிக்கையோடு ஆணித்தரமாக ஒரே தோரணையில் வலியுறுத்திய பாங்கு, ஒன்றை உறுதிப்படுத்துகிறது. மறுமை வாழ்வின் அடிப்படை அறிவை அவர்கள் இறைவெளிப்பாட்டிலிருந்தே பெற்றிருக்க வேண்டும். அனைத்து இறைத்தூதர்களும் பெரும்பாலும் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மக்கள் மறுத்தார்கள். மறுமை வாழ்வு கிடையாது என்றே மக்கள் கருதினர். ஆனால், அத்தனை எதிர்ப்பு இன்னல்களுக்கிடையிலும் ஏராளமான நல்லறத் தோழர்களை இறைத்தூதர்கள் பெற்று வந்தனர். ஆண்டாண்டு காலமாக நம்பி வந்த மூடக் கொள்கைகள், குலப் பழக்கவழக்கங்கள், பண்டைய மரபுகள், மூதாதையர் வழி இலைகளிலிருந்து மாறுபட்ட தோடல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் கண்டு அஞ்சாது துணிந்து எழுந்து நிற்கும் ஆற்றலை அந்த நல்லடியார்களுக்கு அறித்தது எது எனும் கேள்வி இங்கு எழுகிறது. தமது சொந்த சமுதாயத்திலிருந்தே அவர்களை தனிமைப்படுத்தியது எது? பதில் மிக எளிது. அவர்கள் தமது இதயத்தையும் அறிவையும் கொண்டு ஆய்ந்து சத்தியத்தை உணர்ந்தார்கள். அவர்கள் சத்தியத்தை புலனறிவின் மூலமாகவா உணர்ந்தார்கள்? இல்லை! நிச்சயமாக இல்லை. ஏனெனில், இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வை மனிதன் உயிருடனிருக்கும் போது அனுபவிக்கவே முடியாது. இறைவன் மனிதனுக்கு புலனுணர்வை மட்டும் வழங்கவில்லை. பகுத்தறிவு, அழகுணர்ச்சி, மனவிழிப்பு, கலையுணர்வு, ஒழுக்க உணர்வுகளையும் அருளியுள்ளான். புலன்களால் உணர முடியாத விஷயங்களை, நிலைமைகளை புரிந்து கொள்ளும் வழிகாட்டுதலை இத்தகைய உணர்வே தரும்.
இதனால் தான், இறைவனையும், மறுமை வாழ்வையும் நம்பும்படி மக்களை அழைத்து அனைத்து இறைத்தூதர்களும் மனிதனின் பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு மற்றும் விழிப்புணர்வுக்கும் வேண்டுகோள் விடுத்தனர். உதாரணமாக மக்களின் சிலைவணக்கவாதிகள் மறுமை வாழ்வுக் கோட்பாட்டை மறுத்த போது குர்ஆன் தர்க்கரீதியாக பகுத்தறிவு வாதத்தை முன் வைத்தது :
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான். ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! ''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள். வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன். யாவற்றையும் நன்கறிந்தவன். (36:78-81)
இன்னொரு இடத்தில், மறுமை வாழ்வு மறுப்பிற்கு சரியான அடிப்படையை இறைமறுப்பாளர்கள் பெற்றிருக்கவில்லை என்று குர்ஆன் கூறுகிறது :
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள். ''நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம். ஜீவிக்கிறோம். ''காலம்'' தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை'' என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை. அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், ''நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்'' என்பது தவிர வேறில்லை. (45:24-25)
இறந்தோர் அனைவரையும் எழுப்ப இறைவனால் நிச்சயம் முடியும். ஆனால் இறைவனுக்க சுயமான திட்டங்கள் உண்டு. ஒரு நாள் வரும். அன்று உலகமனைத்தையும் இறைவன் அழித்து விடுவான். இறந்தவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்படுவர். அந்த நாள் நீண்ட நெடிய வாழ்வின் துவக்க நாளாகும். அந்த வாழ்வுக்கு முடிவே இல்லை. ஆண் பெண் ஒவ்வொருவரும் செய்த நன்மை அல்லது தீமைகளுக்கேற்ப வெகுமதி அல்லது தண்டனையை இறைவனால் அன்று அளிக்கப்படுவர். மனிதனின் ஆத்மீக தேட்டங்களை நிறைவு செய்யும் வகையில் குர்ஆன், மறுமை வாழ்வின் அவசியத்தை விளக்குகிறது. இறப்பிற்குப் பின் வாழ்வு இல்லையென்றால் இறைநம்பிக்கை என்பதும் அர்த்தமற்றதாகி விடும். அப்படியே ஒருவர் இறைவனை நம்பினாலும் நீதி நியாயமற்ற இறைவனைத் தான் நம்ப வேண்டியிருக்கும். படைத்ததோடு தனது பணி முடிந்தது. மனிதனின் நடவடிக்கைகளைப் பற்றி சிறிதும் அக்கறையற்ற இறைவனையே நம்ப வேண்டியிருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. நிச்சயமாக, இறைவன் நீதிமிக்கவன். வரை முறையின்றி கொடுமை புரிந்தவர்கள், அப்பாவி உயிர்களைப் பறித்தவர்கள், சமுதாயத்தில் லஞ்ச ஊழல்களைத் தோற்றுவித்தவர்கள், தமது மன இச்சைக்கேற்ப ஆடும்படி மக்களை அடிமைப்படுத்தி,ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆகியோரை இறைவன் நிச்சமயாகத் தண்டிப்பான். மனிதன் இவ்வுலகில் மிக அற்பகாலமே வாழ்கிறான். சொற்பகால இச்சடவுலகில் மனிதனின் தவறுகள் அல்லது நற்பண்புகளுக்கேற்ப சரிசமமாக தண்டனை அல்;லது வெகுமதி வழங்குவது இயலாத காரியம். நியாயத் தீர்ப்பு நாள் வந்தே தீரும் என்று குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது. செய்த நன்மை அல்லது பாவங்களுக்கேற்ப ஆண், பெண் இருபாலருக்குமே இறைவன் தீர்ப்பளிக்கிறான்.
இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர் : ''(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது'' என்று கூறுகிறார்கள். அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும். அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன். வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு  செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக. ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன. மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு. (34:3-5)
இறைவனின் கருணையும் நீதியும் முழு அளவில் மறுமைநாளில் வெளிப்படும். இறைவனுக்காகவே இவ்வுலகில் தொல்லைகளைச் சகித்துக் கொண்டவர்களுக்கு குறைவிலா பேரின்பம் காத்திருக்கிறது. ஆனால் மறுமைநாளைப் புறக்கணித்து இறையருளை மதிக்காமல் வாழ்ந்தவர்கள் அந்நாளில் பேரிழிவுக்குள்ளாகி நிற்பார்கள். இறையடியார்கள் மற்றும் பாவிகளின் மாறுபட்ட நிலைமை குறித்து குர்ஆன் இப்படிச் சுட்டுகிறது.
எவனுக்கு நாம் நல்வாக்கை அளித்து, அதை அவனும் அடை இருக்கின்றானோ அவனும்,இவ்வுலக வாழ்வின் சுகங்களை அளித்துப் பின்னர் மறுமை நாளில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவனும் சமம் ஆவார்களா? (28:61)
எல்லையற்ற மறுமைவாழ்வின் தயாரிப்பினை இவ்வுலகில் செய்து கொள்ள வேண்டும் என்று குர்ஆன் மேலும் கூறுகிறது. ஆனால் இதனை மறுப்பவர்கள் மன இச்சைக்கும் ஆசைக்கும் அடிமையாகி இறைநம்பிக்கையாளர்களையும், நேர்மையாளர்களையும் பரிகசிக்கின்றனர். அத்தகையோர் மரணத் தருவாயில் தமது தவறுகளை உணர்ந்து கொள்வர். தமக்குஇவ்வுலகில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமாறு அப்பொழுது அவர்கள் புலம்புவார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படும். மரணத்தருவாயில் பாவிகள் அல்லல்படும் நிலையை இறுதித் தீர்ப்பு நாளின் பயங்கரம், சத்தியவாதிகளுக்கு வாக்களிக்கப்பட்ட நற்பேறு இவையனைத்தும மிக அழகாக குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன். ''என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!'' என்று கூறுவான்.
''நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக'' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும். இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். (23:99-104)
மறுமை நம்பிக்கை மனிதனுக்கு தீர்ப்பு நாளின் வெற்றியை மட்டும் அருளவில்லை. இவ்வுலகில் மனிதன் தனது பொறுப்பையுணர்ந்து தனக்குரிய பணியினைச் செம்மையாக, முறையாக ஆக்கரமாக செய்து உலகை அமைதியும் இன்பமும் நிரம்பியதாகச் சமைக்கவும் வழி கோலுகிறது.
அன்றைய அரபிய மக்களை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். மறுமை நாள் மீதான நம்பிக்கை இல்லாதிருந்த அந்தக் காலத்தில் அவர்கள் கொலை, கொள்ளை, சூதாட்டம், மது, இனச் சண்டை போன்றவற்றில் தீவிரமாக மூழ்கிக் கிடந்தார்கள். ஓரிறைக் கொள்கை மற்றும் மறுமை மீதான நம்பிக்கை கொண்ட நாள் முதலாய் அவர்கள் உலகின் மிக ஒழுக்கமான சமுதாயமாக, பண்பட்டு நின்றனர். பாவங்களை விட்டொழித்தனர். ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி புரிந்தனர். வறியோர்க்கு ஈந்தனர். சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டனர். மறுமை நம்பிக்கை அடுத்த உலகில் தொடர் வினைகளை ஏற்படுத்த் வல்லதைப் போன்றே இவ்வுலகிலும் உண்டாக்கவல்லது. ஒரு தேசம் ஒட்டு மொத்தமாக மறுமை நம்பிக்கையைப் புறக்கணித்தால் அங்கு அனைத்துப் பாவங்களும் தீமைகளும் தலைவிரித்தாடும். இலஞ்ச ஊழல்கள் பெருகும். இறுதியில் அச்சமுதாயமே அழிவுக்குள்ளாகும். ஆத், ஸமூத், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரின் அழிவைப் பற்றிக் குர்ஆன் விபரமாகக் கூறுகிறது.
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான். எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கறீரா?
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால்
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவன்) நிகழும்.
வானனும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள். அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சமந்திருப்பார்கள்.
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ''இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்'' எனக் கூறுவார்.
''நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.''
ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கiயில் -
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டிதாக) சமீபத்திருக்கும்.
''சென்று போன நாட்களில் நீங்க்ள முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்க்ள இப்போது மகிழ்வோடு புசியுங்கள். இன்னும் பருகுங்கள்'' (என அவர்களுக்குக் கூறப்படும்).
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான். ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!'' (என்று அரற்றுவான்).
''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.''
''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
''பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' (என்று உத்தரவிடப்படும்).
''நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.''
''அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் துண்டவில்லை.''
''எனவே, அவனுக்கு இன்றைய தனிம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.''
''சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.''
''குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.''
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.) 69:39
இதனால் மறுமை நாள் பற்றி சிந்தனைக்க ஆதாரம் உள்ளதை இவ்வாறாக உணரலாம்.
முதலாவதாக,
எல்லா இறைத்தூதர்களும் மக்களை அதனை நம்புமாறு அறிவுறுத்தியள்ளார்கள்.
இரண்டாவதாக,
ஒரு சமுதாயம் மறுமையின் நம்பிக்கையின் அடிப்படையில் நிர்மானிக்கப்பட்டால், அது அமைதி நிரம்பிய தலைசிறந்த சமுதாயமாக விளங்கும். அங்கு சமூக  இழிவும் ஒழுக்கக் கேடும் இருக்காது.
மூன்றாவதாக,
இறைத்தூதர்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்ததை மதிக்காமல், மறுமை நம்பிக்கைகளை ஒட்டு மொத்தமாக ஒரு சமூகம் புறக்கணிக்குமாயின் அச்சமூகம் முழுவதுமே இறைவனால் இவ்வுலகிலேயே தண்டிக்கப்பட்டதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
நான்காவதாக,
மனிதனின் ஆத்மீக, பகுத்தறிவு, ஒழுக்கவுணர்வு, தேட்டங்கள் மறுமை வாழ்வை உறுதிப்படுத்தி அங்கீகரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
ஐந்தாவதாக,
இறப்பிற்குப் பின் ஒரு வாழ்வு இல்லையென்றால், இறைவனின் கருணைக்கும் நீதிக்கும் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போகிறது.

, ,