இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

16/02/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மெமரி டிஸ்க் அபாயங்கள்

மெமரி டிஸ்க் அபாயங்கள் - 1


இங்கு மெமரி டிஸ்க் என்று குறிப்பிடுவது உங்கள் செல்பேசியின் மெமரி, கணினியின் ஹார்ட் டிஸ்க், மினி, மைக்ரோ மெமரிக் கார்டுகள், பென் டிரைவ் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் உருவாக்கும் அல்லது பரிமாறிக் கொள்ளும் தகவல்களை இலகுவாக சேமித்து வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் உபயோகப்படுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும் இந்த அற்புதப் பொருளில் சில அபாயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன, எப்படி சாத்தியம், செய்முறை மற்றும் தவிர்க்கும் முறைகள் குறித்து இத்தொடரில் காண்போம்.

மெமரி டிஸ்க்குகளில் சேமித்து வைக்கும் தகவல்களில் கிளுகிளுப்பான விஷயங்கள், வேலை சம்பந்தப்பட்ட ரகசியங்கள், உங்கள் பிரத்யேக தகவல்கள், படங்கள், வீடியோக்கள் இப்படி பயன்படுத்துபவரின் வயதிற்கேற்ப மாறுபடும். இவற்றில் சில தகவல்கள் நீங்கள் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததாக இருக்கும். உங்கள் மெமரி டிஸ்க்குகள் விற்பனை மூலமோ, அவசரத்திற்கு ஓசி கொடுக்கும் போதோ அல்லது பழுதுபார்க்கவோ கைமாறும் போது அழிக்கப்பட்டக் கோப்புகளும் சேர்ந்து கைமாற அதிக வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் "கருவறையில் பஜனை " என்ற படம் மொபைல் போன் பழுதுபார்க்கப் போய் அதிலுள்ள மெமரி கார்டில் இருந்து சுடப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரபல விரல் நடிகரின் துபாய் கும்மிகள் சில காலம் முன்பு இணையத்தில் சக்கைப் போடு போட்டதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவையெல்லாம் எப்படி நடக்கிறது?.

அதைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் கோப்புகள் மெமரி டிஸ்க்குகளில் எப்படி சேமிக்கப் படுகிறது, அவற்றை நாம் அழிக்கும் போது நம் கண்களுக்கு அழிக்கப்பட்டதாகத் தோன்றினாலும் அழிக்கப் பட்ட தகவல்களின் உண்மை நிலை என்ன.. போன்ற விஷயங்களை அறிந்து கொள்வோம். மெமரி டிஸ்க்குகள் அவற்றின் சேமிப்பு அளவிற்கேற்ப சில,பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன (memory blocks). ஓவ்வொரு பகுதிக்கும் ஒரு குறியீட்டு பெயர் இருக்கும்.

தகவல்களை சேமிக்கும் போது முதலில் உங்கள் கோப்பின் அளவு கணக்கிடப்படும். பின்னர் அந்த அளவினை சேமிக்குமளவிற்கு இடமுள்ள ஒரு பகுதியிலோ அல்லது பல பகுதிகளிலோ சேமிக்கப் படும். இவ்வாறு பல நூறு கோப்புகள் சேமிக்கப்படும் பொழுது மீண்டும் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் போது எவ்வாறு கோப்புகள் கண்டுபிடிக்கப் படுகின்றன?. ஓவ்வொரு மெமரி டிஸ்க்கில் கோப்பு அட்டவணை ஒன்று இருக்கும். ஓவ்வொரு கோப்பும் எந்தெந்த பகுதிகளில்சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். அவற்றைப் பயன்படுத்தியே கோப்புகள் மீளவும் உபயோகத்திற்கு கண்டுபிடித்துத் தரப்படுகின்றன.

கோப்புகளை அழிக்கும் போது என்ன நடக்கும்?. கோப்புகளை அழிக்கும் போது அந்த கோப்புகள் அழிக்கப்படுவதில்லை, மாறாக மெமரி டிஸ்க்கின் கோப்பு அட்டவணையில் அந்த கோப்பு அழிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படும். அதனால் கோப்புகள் உங்கள் பார்வைக்கு காட்டப்படாது. சரி எப்பொழுது உண்மையாகவே கோப்புகள் அழிக்கப்படுகின்றன. மெமரி டிஸ்க்கில் மேலும் சேமிக்க இடம் இல்லாத போது அழிக்கப்பட்டதாக கோப்பு அட்டவணையில் பதியப்பட்டுள்ள் பகுதிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும், அப்பொழுது தான் கோப்புகள் முழுமையாக அழிக்கப்படும்.

எனவே மெமரி டிஸ்க்கின் அளவை நாம் பயன்படுத்தும் தன்மைக்கேற்ப அழிக்கப் பட்ட கோப்புகள் உங்கள் மெமரி டிஸ்க்கிலேயே இருக்கும். அவற்றை எப்படி திரும்ப பெறுவது?. கோப்பு அட்டவணையில் அழிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட தகவலை, உபயோகத்தில் இருப்பதாக மாற்றியெழுதினால் கோப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறும். இதை செய்வதற்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. அவற்றின் மூலம் அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் பெறலாம்.

அந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி எப்படி அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் பெறுவது, மீண்டும் பெற முடியாத அளவுக்கு எப்படி கோப்புகளை அழிப்பது, மெமரி டிஸ்க்குகள் கைமாறும் போது தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன.. இவை குறித்து அடுத்த பகுதியில்.
thanks to suduthanni.blogspot.com
, ,