குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

21.6.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நிழல் தேடுவோம் வாருங்கள்
நபி (ஸல்) நவின்றார்கள் :
நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்குத் தனது பிரத்யேகமான நிலை வழங்குகின்றான் :

1. நீதி தவறாத தலைவன்
2. இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்
3. இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்
4. இறைவனுக்காக நேசம் கொண்டு அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள்
5. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (தூநடத்தைக்காக) அழைத்த போது, நான் இறைவனை அஞ்சுகின்றேன் என்று கூறிய மனிதன்
6. தமது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தர்மம் புரிந்த மனிதன்
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் விடும் ஒரு மனிதன்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
எதிர்வரும் ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பது விஞ்ஞானிகளின் தீர்க்கதரிசனம். இது தொடர்பாக மேலைநாடுகள் மாநாடுகளை நடத்துகின்றன. ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. தற்போது நிலவும் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தத்தளிக்கும் மனித சமூகம் எதிர்கால வெப்பநிலை உயர்வுக்கு என்ன பரிகாரம் காணப்போகிறது! நிச்சயம் வெயிலின் கொடுமைக்கு நிழல் தேடி அலையப் போகிறது என்பது மாத்திரம் நிஜம்.
மனித அபிவிருத்தி முயற்சியின் விளைவாக ஓசோன் படலத்தில் ஓட்டைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக சூரியனின் ஊதா நிறக் கதிர்கள் புவியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்வதோடு மனித உடலையும் தாக்கி நோய்களையும் ஏற்படுத்துகின்றன. வெயிலினதும் வெப்பத்தினதும் கொடுமையால் உலகம் நிழலையும், குளிரையும் தேடி அலைகிறது. குளிர்சாதனங்கள்     இல்லை என்றால் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், மனிதர்களோ இறைவனது நிழல் தவிர்ந்த வேறு நிழலே இல்லாத நாள் பற்றி எவ்வித சிரத்தையுமின்றி வாழ்கின்றனர். அந்நாளில் நிழல் பெறுவதற்காக வெப்பத்தில் வழியும் வியர்வையில் மூழ்கிவிடாதிருப்பதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழிகாட்டலை சற்றுச் சிந்தித்துப் பார்ப்போம். விஞ்ஞானிகள் அழிந்து போகும் உலக வாழ்க்கையில் ஆடம்பரமாக வாழ்வதற்கு வழி தேடி புவியின் வெப்பநிலை பற்றிச் சிந்திக்கின்றார்கள். அழிவில்லாத மறுமை வாழ்வின் சுகந்தத்தை சுவைப்பதற்காகவும், மறுமை வெப்பத்தினது கொடுமை பற்றியும் அதற்கான பரிகாரம் பற்றியும் சற்று சிந்திக்க முனைவவோருக்கு இந்த ஹதீஸ் வழிகாட்டுகிறது. அத்துடன் இறைவனின் நிழலுக்குச் சொந்தமானவர்களை வரிசைப்படுத்திக் காட்டுகிறது.
பொதுவாகவே அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் மறுமை நாளில் மஹ்ஷர் வெளியில் மனிதர்களின் திண்டாட்டம் பற்றிக் கூறி இதயங்களை பற்றியிழுக்கின்றன. அல்குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது.
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்- தன் மனைவியையும், தன் சகோதரனையும்- அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சற்றத்தாரையும்- இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான (70:8-14)
நபிமொழியொன்று மஹ்ஷரை இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அந்நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிக அருகாமையில் கொண்டு வரப்படும். மனிதர்கள் தங்களின் செயற்பாடுகளுக்கேற்ப வியர்வையில் மூழ்கியிருப்பர். அவர்களுள் சிலரின் கரண்டைக் கால் வரையும், வேறு சிலரின் முழங்கால் வரையும், மற்றும் சிலரின் இடுப்பு வரையும், இன்னும் சிலரின் வாய் வரையும் வியர்வை மூடியிருக்கும் (முஸ்லிம்)..
இவ்வாறு மனிதர்களின் திண்டாட்டத்தை நபிமொழி சித்தரிக்கின்றது. இவ்வாறான இக்கட்டான நிலைமையில் இறை நிழலில் குளிர்காய இடம் கிட்டுமானால் அது அள்பபரிய பாக்கியமாகும். நிச்சயமாக, அப்போதுதான் நிழலின் அருமை புரியும். அவ்வாறு அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தாரை இந்த ஹதீஸ் வரிசைப்படுத்துகிறது. இந்த கூட்டத்தினருள் ஒருவராக ஆக வேண்டும் என்பதற்காக சிந்திப்பது, முயற்சிப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் தேவையாகும்.
முஸ்லிம் நீதிமிக்கவன்.
இஸ்லாம் நீதிக்கு மிகவும் தெளிவாகச் சான்று பகர்கின்றது. குர்ஆன் இப்படிக் கூறுகின்றது:
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (4:135)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் :
மூன்று பிரிவினர் சுவனவாசிகள் ஆவர். அதில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நீதியாக நடக்கும் ஆட்சியாளன் (முஸ்லிம்).
நீதியை நிலைநிறுத்தும் தலைவருக்கு நிழலில்லாத நாளில் நிழல் கிடைக்கும் என்பது உறுதியே.
வாலிபம் ஓர் அருள்
வாலிபம் என்பது இறைவன் தந்த அருள். அது இறைவழியில் பயன்படுத்தப்பட வேண்டும். வாலிபம் உற்சாகத்தினதும் வேட்கையினதும் பருவமாகும். புரட்சி அரும்புகள் தளிர்விடும் பருவம். மாற்றங்களில் மனது மகிழும் காலம். எனவே, இவ்வாலிபம் இறைமறையின் புரட்சிக்காய் அதன் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதற்காய் தன்னிலும் மண்ணிலும் இறைபோதனைகள் வளர்வதற்காய் வாழுமானால் இவ்வாலிபம் நிழலுக்குச் சொந்தமாகும் என்பது இறைவழி காட்டும் உண்மையாகும்.
இறையில்லத் தொடர்பு
இறைவனது இல்லத்தோடு தொடர்பு வைத்துள்ள உள்ளங்களுக்கு இறையருள் உண்டு. மனிதன் தனது விவகாரங்களை இறையில்லத்துடன் தொடர்புபடுத்த வேண்டும். அமைதியற்ற வேளையில் இறையில்லத்தில் அமர்ந்து இறைவனைச் சிந்தியுங்கள். அமைதியின் பூங்காவாக மஸ்ஜிதை உணர்வீர்கள். மஸ்ஜிதின் வளர்ச்சியிலும், ஒழுங்கமைப்பிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இறைநிழலுக்குச் சொந்தக்காரனாக மாற்றி விடுகிறது.
இறைவனுக்காக நேசம் கொள்ளல்
நேசம் என்பது இறைவனுக்காகவே இருக்க வேண்டும். குறிப்பாக, இஸ்லாமிய இலட்சியவாதிகளுக்க இப்பண்பு இன்றியமையாததாகும். உறவு சீர்குலைந்து விடும் என்பதற்காக தீமையைக் கண்டு மெளினிக்கக் கூடாது. அதற்கு உறுதுணையாக இருக்கவும் கூடாது. இறைநிழலின் பக்கம் நண்பர்களை அழைத்துக் கொண்டே செல்ல வேண்டும். பிரிவு வந்தாலும் அது இறைவனுக்காக, அவன் மார்க்கத்தின் வளர்ச்சிக்காக என அமைய வேண்டும். இறைவனுக்காக அமையும் நட்பும், பிரிவும் அர்ஷின் நிழலுக்குச் சொந்தம் பெற்றுத் தரும்.
இறையச்சம்
இறையச்சமே மனிதனை இழிவான ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் சிறந்த சாதனமாகும். இன்றைய சூழலில் தீமைகளுக்கான தூண்டுதல்கள் அதிகம். ஒழுக்கம் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இறையச்சமே மனிதனை எச்சூழலிலும் பாதுகாக்கும். நிழலில்லாத நாளின் நிழலுக்குத் துணைபுரியும்.
தருமம் செய்தலும் இறைதிருப்தியும்
இறைவனுக்காக கொடுக்கப்படுகின்ற தர்மத்திற்கு கூலியிருக்கிறது. வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாது. இறை திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து மற்றவர் அறியாமல் கொடுப்பதையே இது குறிப்பிடுகிறது. தான் ஒரு கொடையாளி என்று பெயர் வாங்க கொடுக்கும் தர்மம் உலகத்திலேயே கூலியை மனிதர்களிடத்தில் பெற்றுக் கொடுக்கும். இறைவனுக்காக வழங்கப்படும் தருமம் மறுமையில் நிழலின் சொந்தக்காரர்களாக மாற்றும்.
ஒரு சொட்டுக் கண்ணீர்
முஹாஸபா (சுயவிசாரணை) ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். வாழ்க்கையின் முன்னேற்த்திற்கும், அனுபவத்திற்கும் தவ்பாவிற்கும் சிறந்த ஊடகமாக சுயவிசாரணை அமைகிறது. ஒரு மனிதன் தனிமையில் தனது வாழ்வில் தான் நடந்து வந்த பாதையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போது அவனால் இறைவன் தனக்கு அளித்திருக்கின்ற அருட்கொடைகளை உணர முடியும். சோதனைகளின் போது இறைவனை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கிறேன் என அறிய முடியும். வாழ்க்கைப் பரீட்சையில் நான் தோற்று விடுவேனா? அப்படியானால் என் நிரந்தர மறுமை வாழ்வின் முடிவு என்ன? இறைவனின் அருட்கொடைகளை சுவைத்து விட்டு அவனுக்கு துரொகம் இழைக்கிறேனா? எனக்கு ஈடேற்றம் கிடைக்குமா? என்பன போன்ற வினாக்களை தன்னுள் எழுப்பி தனிமையில் ஒரு மனிதன் இறைவனைச் சிந்திக்கிற போது, இவ்வளவு தீமைகளோடு தான் வரும் போதும் இறைவன் பாவ மன்னிப்புக்கரத்தை நீட்டி வரவேற்கிறானே என எண்ணும் போது மனதுருகிக் கண்ணீர் வழியுமானால் அம்மனிதனும் இறை நிழலுக்குச் சொந்தக் காரனே.
இங்கு கூறப்பட்ட இறை நிழலுக்குச் சொந்தமானவர்களின் உள்ளங்கள் இறைவனோடு தொடர்புபட்டுள்ளது. எனவே இங்கு உள்ளச்சுத்திகரிப்பு என்பது இன்றியமையாததாகும். புவியின் வெப்பநிலை பற்றி விஞ்ஞானிகள் சிந்திக்கட்டும். வாருங்கள் மிக்க கொடுமையும் கருமையும் நிறைந்த மஹ்ஷர் வெளியின் வெப்பத்திலிருந்து எம்மைக் காப்பாற்ற முயற்சிப்போம்! அர்ஷின் நிழலில் குளிர்காய விழைவோம்!!

அஷ்ஷெய்க் யு.சு.ஆ. அப்துல் கரீம் (இஸ்லாஹி)
, ,