இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

28/06/2012

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இறைதியானம்
இறைதியானம்
அல்ஹதீஸ் விளக்கம் மௌலவியா ஸீனத் குறைஸா தாஸிம் (இஸ்லாஹி)

--------------------------------------------------------------------------------

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் என் மீது அதிகமாக உள்ளன. ஆகவே நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள் என வேண்டினார்.அதற்கு ரஸுல் (ஸல்) அவர்கள், உமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வின் திக்ரிலே திளைத்திருக்கட்டும் எனப் பகர்ந்தார்கள். ஆதாரம் : திர்மிதி அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் பிஷ்ர் (ரலி)
முஃமின்கள் எல்லா வேளைகளிலும் அல்லாஹ்வின் நினைவில் இருக்க வேண்டும் என அல்குர்ஆன் கூறுகிறது
.
முஃமின்களே! அல்லாஹ்வை மிக அதிகமாக திகர் செய்யுங்கள். காலையிலும் மாலையிலும் அவனை தஸ்பீஹ் செய்யுங்கள். (33:41-42)
இது தியானத்தில் உயர் அந்தஸ்து உடையதாகும். அல்லாஹ்வின் நினைவு உள்ளத்தில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். தியானத்தின் பலனை விளங்கிக் கொண்ட, அதனுடைய சிறப்பைப் புரிந்து கொண்ட எந்த நல்லடியாரும் அவரின் ஆயுள் காலத்தின் அற்ப நேரத்தைக் கூடி இறைவனின் நினைவின்றி வீணாக்கியதில்லை. அல்லாஹ்வின் பெயரை மொழிதல், தியானம் (திக்ர்) செய்தல் முதலியவை மாபெரும் சிறப்பைக் கொண்டுள்ளன. எனவே தான்,
எந்நேரமும் அல்லாஹ்வின் திக்ரால் உமது நாவு திளைத்திருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
திக்ர் என்பது நினைத்தல், மொழிதல் என்ற பொதுவான கருத்தை உணர்த்துவதாக இருந்தாலும் இஸ்லாமிய பரிபாஷையில் அல்லாஹ்வின் நினைவையே அப்பதம் குறிக்கிறது. ஓர் அடியான் அல்லாஹ்வின் விருப்பத்துக்கேற்ப அவனது திருப்தியை எதிர்பார்த்து செயற்படுவதையும் அல்குர்ஆன் திக்ரு என அழைக்கிறது.
விசுவாசிகளே! உங்களது செல்வங்களும் குழந்தைகளும் அல்லாஹ்வின் திக்ரை விட்டும் உங்களை திசை திருப்பாதிருக்கட்டும். எவரேனும் இவ்வாறு செய்தால் அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர் தாம். (அல்முனாபிகூன் : 9)
தொழுகையின் நோக்கம் அல்லாஹ்வின் திக்ரே என அல்குர்ஆனின் சூரா அல்அன்கபூத் குறிப்பிடுகிறது.
(நபியே!) வஹி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட (இவ்) வேதத்தை நீர் ஓதி, தொழுகையைக் கடைபிடித்து வாரும். ஏனென்றால் நிச்சயமாகத் தொழுகை, மானக்கேடான காரியங்களிலிருந்தும் (மனிதனை) விலக்குகிறது. அல்லாஹ்வை (மறக்காது) நினைவில் வைத்து (திக்ர் செய்து) வருவது, நிச்சயமாகப் பெரிது. அன்றி, நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (29:45)
திக்ரின் மகிமை பற்றிக் கூறும் அல்குர்ஆன் வசனங்கள் சில பின்வருமாறு :
நீங்கள் என்னைத் தியானியுங்கள். நானும் உங்களை நினைத்து அருள் புரிந்து வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (எனக்கு நன்றி செலுத்தாத) நிராகரிப்போராகி விடாதீர்கள். (2:152)
(நபியே!) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) உரத்த குரலிலன்றியும், காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் திருநாமத்தை துதி செய்த கொண்டிருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் நீரும் இருக்காதீர். (7:205)
நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள். (அல்ஜும்ஆ :10)
இவை தவிர அல்குர்ஆனில் இன்னும் அநேக இடங்களில் திக்ரின் மகிமை விளக்கப்பட்டுள்ளது. பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பின்வரும் நபிமொழி முக்கியமானது :
தன் இறைவனை நினைவுகூரும் மனிதன் உயிருள்ள ஒரு மனிதனுக்கு ஒப்பாவான். அல்லாஹ்வை நினைவு கூராத மனிதன்உயிரற்ற பிணத்திற்கு ஒப்பாவான். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ்வின் நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. அதனைக் குறித்து அலட்சியமாய் இருப்பது மனிதனின் உள்ளத்தை மரணிக்கச் செய்து விடுகிறது என்பதே இந்நபி மொழி கூறும் கருத்தாகும். மனித உடலின் வாழ்க்கைக உணவைக் கொண்டே அமைந்துள்ளது.
உணவு கிடைக்காவிட்டால் இந்த உடல் இறந்து விடுகிறது. அதுபோலவே இந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மாவுக்குரிய உணவான இறைதியானம் கிடைக்காது போய் விட்டால் அதற்கும் மரணமேற்பட்டு விடுகிறது. ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
யார் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் 33 தடவை அல்லாஹ்வை சுப்ஹானல்லாஹ் எனப் போற்றுகிறாரோ, 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வைப் புகழ்கிறாரோ, 33 தடவை அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துகிறாரோ முடிவில் நூறாவதாக லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஐஷயின் கதீர் எனக் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். கடலின் நுரையளவு அப்பாவங்கள் இருந்த போதிலும்சரியே! (முஸ்லிம்)
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் :
அல்லாஹ் கூறுகிறான் : என்னை என் அடியான் நினைவு கூரும் போதும் என் நினைவில் அவனது உதடுகள் இரண்டும் அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன். (புகாரி)
அவனுடன் இருக்கிறேன் என்பதன் பொருள், அல்லாஹ் அந்த அடியானைத் தன் பாதுகாப்பில், கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறான். தீமை செய்தல், மாறு செய்தல் என்பற்றை விட்டு அவனை காப்பாற்றுகிறான் என்பதாகும். மேலும் இந்த ஹதீஸ், அல்லாஹ்வை உள்ளத்தின் முழு ஈடுபாட்டுடன் நாவினால் நினைவு கூர வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
மற்றுமொரு முறை,
முபர்ரிதூன்கள் (அல்லாஹ்வின்) திருப்பொருத்தத்தின் பக்கமும் உயர் அந்தஸ்துக்களின் பக்கமும் முந்தி விட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முபர்ரிதூன்கள் என்றால் யார்? எனத் தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், திக்ரு செய்யும் ஆண்களும், திக்ரு செய்யும் பெண்களும் எனப் பதிலளித்தார்கள். (முஸ்லிம்)
இவ்வாறாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய முறையில் திக்ரு செய்வதால் அளப்பரிய நற்கூலிகளை உடையவர்களாக நாம் ஆகி விடலாம். ரஸுல் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த வசனங்களையும், துஆக்களையும் மொழிந்து அல்லாஹ்வை திக்ரு செய்வது தனித் தனியே நிறைவேற்றப்படுவது மிகவும் சிறந்தது. எனவே தான், தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து கண்ணீர் சிந்திய ஒரு மனிதன் எவ்வித நிழலும் இல்லாத மஹ்ஷர் வெளியில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலின் கீழ் நிழல், பெறும் ஏழு கூட்டத்தாருள் ஒருவராவார். தனிமையில் திக்ரு செய்வதை வலியுறுத்துவதாக பின்வரும் குர்ஆன் வசனம் காணப்படுகிறது.
(நபியே!) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) உரத்த குரலிலன்றியும், காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் திருநாமத்தைத் துதி செய்து கொண்டிருப்பீராக!.. (அல் அஃராப் : 205)
எனினும் கூட்டாக இருந்தும் இதனை செய்ய முடியும் என்பதற்கு வேறு பல ஆதாரங்கள் காணப்படுகின்றது. (திக்ரு என்பது இறைவனை நினைவு கூறக் கூடிய சொற்பொழிவுகளையும் குறிக்கும்)
ஒரு கூட்டம் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக அமர்ந்து விட்டால் மலக்குமார்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் ரஹ்மத் அவர்களை அணைத்துக் கொள்ளும். மன அமைதி அவர்களை நோக்கி இறங்கும். அவர்களை அல்லாஹ் தன்னோடு இருப்பவர்களோடு நினைவு கூறுவான். (முஸ்லிம்)
மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
எவர்கள் ஒரு சபையில் அமர்ந்து அல்லாஹ்வின் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வார்களோ அவர்கள் செத்த கழுதையைத் தின்று விட்டு கலைந்து செல்பவர்களைப் போல் ஆவார்கள். இந்த சபை அவர்களின் கைசேத்திற்கு காரணமாய் அமையும். (அபூதாவூத்)
எம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவு இறைதியானத்தில் ஈடுபடுவது அவசியம். அதுபோல எந்நிலையில் இருந்த போதும் இறைதியானத்தை மேற்கொள்பவர்களாக நாம் ஆக வேண்டும். அமர்ந்த வண்ணம், நின்ற வண்ணம், நடந்த வண்ணம், வேலைகளைச் செய்த வண்ணம் கூட திக்ரு செய்வதால் அல்லாஹ்விடத்தில் பெரும் அந்தஸ்தை அடையலாம். அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது :
(அறிவுடைய) இத்தகையோர், (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், தங்கள் படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள் பூமியின் படைப்பைப் பற்றி சிந்தித்து.. .. (ஆலு இம்ரான் : 191)
இறைதியானத்தில் அல்குர்ஆன் ஓதுவதும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஓர் அடியான் இதற்கெனவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். குர்ஆனை தினமும் குறித்தளவு (ஒரு ஜுஸ்வு அல்லது அரை ஜுஸ்வு அல்லது முடியுமான அளவு) ஓதுவதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும்.
இன்று இரண்டு பேர் ஒன்று கூடி விட்டால் மற்றவரின் குறைகளைப் பேசி பாவத்தைச் சம்பாதிப்பதே பெரும்பாலானோரின் பழக்கமாகி விட்டது. இது பெரும் பாவமாகும். இவற்றை விடுத்து இறை தியானத்தில் ஒவ்வொரு சபையையும், சந்திப்பையும், நேரத்தையும் கழிப்போமேயானால் தீமைக்குப் பதில் நன்மைகள் விளையும். ஒவ்வொரு நேரத்திலும் ஓத வேண்டிய துஆக்கள் ஹதீஸ்களில் வந்துள்ளன. இயன்றளவு துஆக்களை மனனம் செய்து கொள்ளுங்கள். இவற்றின் விபரங்களை அறிந்து கொள்ள இன்று அநேகமான நூல்கள் காணப்படுகின்றன. இவற்றை வாங்கி மனனம் செய்து எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் பயிற்சியை ஏற்படுத்தலாம்.
இறைவனின் அன்பைப் பெறுவதற்கான வழிமுறைகளுள் மிகப் பிரதானமானது இறைதியானமாகும். எனவே, இறைதியானத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் நல்லடியார்களாக மாற அல்லாஹ் எமக்கு அருள்புரிவானாக!
, ,