இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

25/01/2013

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

நூறு பெரும் பாவங்கள்
நூறு பெரும் பாவங்கள் 
இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் பெரும் பாவங்கள், மிகப்பெரும் பாவங்கள், மகா நாசத்தை ஏற்படுத்தும் பாவங்கள், சுவனம் செல்வதற்குத் தடையான பாவங்கள், அழிவை ஏற்படுத்தும் பாவங்கள் என திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் பாவங்களைப் பற்றி பலவாறாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
திருமறையிலும் நபிமொழியிலும் பெரும் பாவம், பெரும் குற்றம் என்று கூறப்பட்ட வைகளும், எந்த செயலுக்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் தண்டனை உண்டென சொல்லப்பட்டுள்ளதோ அவைகளும், எந்த செயல்களைச் செய்பவர்கள் சபிக்கப்பட்ட வர்கள், சுவனம் புகமாட்டார்கள் என்று வந்துள்ளதோ அச்செயல்களும் பெரும் பாவங்கள், பெருங்குற்றங்கள் என்று சொல்லப்படும்.
பெரும் பாவங்களை விட்டு விலகுவதன் சிறப்பு
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (குர்ஆன் 4:31)
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்). ((குர்ஆன் 53:31)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து நேரத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகைகள், ரமழான் மாதங்கள் ஆகிய இவைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களைப் போக்கிவிடுகின்றன. ஆனால் ஒரு நிபந்தனை, பெரும் பாவங்களைவிட்டும் விலகி இருக்கவேண்டும். (முஸ்லிம்)

இறை நிராகரிப்பை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள், மிகப்பெரும் பாவங்கள், மகா நாசத்தை ஏற்படுத்தும் பாவங்கள்
1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பது.
(பாவங்களில் மிகப்பெரிய பாவம் அல்லாஹ்விற்கு இணைவைப்பதாகும் - புகாரி, முஸ்லிம்)
2. தொழுகையை விடுவது.
(முஃமினுக்கும், ஷிர்க் மற்றும் குஃப்ருக்கும் இடையில் தொழுகையை விடுவது தவிர வேறொன்றும் இல்லை. அதாவது தொழுகையை விட்டவன் காஃபிராகி விடுவான் - முஸ்லிம்)
3. பெற்றோருக்கு மாறு செய்வது.
4. பொய் சாட்சி சொல்வது.
5. கொலை செய்வது.
(மிகப்பெரும் பாவங்களாவன: அல்லாஹ் விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறு செய்வது, பொய் சாட்சி சொல்வது, கொலை செய்வது - முஸ்லிம்)
6. பெற்றோரை ஏசுவது, சபிப்பது.
(மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்'' என்று கேட்கப்பட்டது. அதற்கு ''ஒருவர் மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர் இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - புகாரி, முஸ்லிம்)
7. சூனியம் செய்வது.
8. வட்டி வாங்கி உண்பது.
9. அனாதையின் சொத்தை உண்பது.
10. போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.
11. ஒழுக்கமுள்ள இறை நம்பிக்கைக் கொண்ட அப்பாவி பெண்கள்மீது பழி சுமத்துவது.
(மகா நாசத்தை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைவிட்டும் விலகிக் கொள்ளுங்கள். அவை: அல்லாஹ்விற்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் புனிதமாக்கிய உயிரைக் கொல்வது, வட்டி வாங்கி உண்பது, அனாதையின் சொத்தை பயன்படுத்துவது, போரில் புறமுதுகுக் காட்டுவது, ஒழுக்கமான இறை நம்பிக்கைக் கொண்ட அப்பாவி பெண்கள்மீது பழி சுமத்துவது- புகாரி, முஸ்லிம்)

சுவனம் செல்வதற்குத் தடையான பாவங்கள்
12. இறை நம்பிக்கையின்றி இருப்பது.
(இறை நம்பிக்கையாளரைத் தவிர மற்றவர் சுவனம் புகமாட்டார். நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாதவரை சுவனம் புக மாட்டீர்கள்- முஸ்லிம்)
13. அண்டை வீட்டாருக்கு தொந்தரவு தருவது.
(அண்டை வீட்டாருக்கு தீங்கிழைப்பவர் சுவனம் புகமாட்டார்- முஸ்லிம்)
14. பெருமை கொள்வது.
(அணுவளவும் பெருமை உள்ளவர் சுவனம் புகமாட்டார்- முஸ்லிம்)
15. கோள் சொல்வது - இரட்டை முகம் காண்பிப்பது.
(கோல் சொல்பவர் சுவனம் புகமாட்டார். அல்லாஹ்வின் முன்னிலையில் மறுமையில் மிகக் கெட்டவர்களில் இரு முகமுடையவனும் ஒருவன் ஆவான்- முஸ்லிம்)
16. தற்கொலை செய்தல்.
(யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறானோ அவன் அதே விஷத்தைக் குடிப்பது கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக வேதனை அனுபவிப்பான்- புகாரி, முஸ்லிம்)
(யார் எப்படி தற்கொலை செய்து கொள்கிறாரோ.... அவ்வாறே நரகத்தில் தண்டனை கொடுக்கப்படுவார்).
17. உறவுகளைத் துண்டிப்பது.
(உறவுகளைத் துண்டிப்பவர் சுவனம் புகமாட்டார்- முஸ்லிம்)
18. தடுக்கப்பட்ட வழிகளில் பொருள் சம்பாதித்து, உண்பது.
(ஹராமில் வளர்ந்த உடல் சுவனம் நுழையாது- அஹ்மது, இப்னு ஹிப்பான்)
19. செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுவது.
20. மது அருந்துவது.
21. சூனியத்தை நம்புவது.
22. குறி பார்ப்பது.
23. விதியை மறுப்பது.
(செய்த உபாகரத்தை சொல்லிக் காண்பிப்பவர், மது அருந்துபவர், சூனியத்தை நம்புபவர், குறி பார்ப்பவர், விதியை மறுப்பவர் ஆகிய இவர்கள் சுவனம் புகமாட்டார்கள் - அஹ்மது)


24. கடனை அடைக்க வழியில்லாமல் இறப்பது.
(இறந்தவரை தொழ வைப்பதற்காக நபியிடம் கொண்டு வரப்படும். அவர்மீது கடன் இருப்பின் ''இவர் கடனை நிறைவேற்ற ஏதும் வழி செய்துள்ளாரா?'' என்று விசாரிப்பார்கள். அவருக்குக் கடனை அடைக்கும் அளவு சொத்து உள்ளது என்று கூறப்பட்டால் தொழவைப்பார்கள். அவருக்கு சொத்து இல்லையெனில் ''உங்களின் தோழருக்கு நீங்கள் தொழுது கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிடுவார்கள். மார்க்கப் போரில் உயிர் நீத்தவருக்கு அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால், கடனைத்தவிர- முஸ்லிம்)
25. பெண், ஆணைப்போன்று நடந்து கொள்வது.
26. குடும்பத்தில் நடக்கும் கெட்ட நடத்தையை கண்டும் காணாமல் இருப்பது.
(மூன்று நபர்கள் சுவனம் புகமாட்டார்கள், மறுமையில் அல்லாஹ் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்கள்: பெற்றோருக்கு மாறு செய்பவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண்கள், குடும்பத்தினரின் கெட்ட நடத்தைகளை கண்டும் காணாமல் இருப்பவன்- நஸாயி, அஹ்மது)
27. வயோதிகத்தில் விபசாரம் செய்வது.
28. அரசன் பொய் சொல்வது.
29. ஏழை பெருமையடிப்பது.
(மூன்று நபர்கள், அவர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான் அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனையும் உண்டு. அவர்கள், விபசாரம் செய்யும் வயோதிகன், பொய் பேசும் அரசன், பெருமையடிக்கும் ஏழை- முஸ்லிம்)
30. அகந்தையுடன் நடந்து செல்வது, கெட்ட குணம்.
31. ஒப்பந்தம் செய்தவர்களைக் கொல்வது.
(ஒப்பந்தக்காரர்களை கொலை செய்து விடுபவன் சுவனத்தின் வாடையைக்கூட நுகரமாட்டான். சுவனத்தின் வாடையை நாற்பது ஆண்டுகள் தொலைவிலிருந்தும் உணர்ந்து கொள்ளமுடியும்- புகாரி, முஸ்லிம்)
32. மக்களுக்கு மோசடி செய்யும் அரசன்.
(அல்லாஹ் அரசாட்சி கொடுத்த ஓர் அடியாரின் தனது மக்களுக்கு மோசடி செய்த நிலையில் மரணித்தால் அவன்மீது நிச்சயமாக அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுவான்- புகாரி, முஸ்லிம்)
33. மக்களை அடித்துத்துன்புறுத்துவது.
34. பர்தாவை பேணாமல் இருப்பது.
(இரண்டு கூட்டத்தினர் நரகவாசிகள் அவர்கள் சுவனம் புகமாட்டார்கள். அவர்களில் முதல் கூட்டத்தினர் மாட்டு வால்களைப்போல் சாட்டைகளை வைத்துக்கொண்டு மக்களை அடிப்பவர்கள். இரண்டாவது கூட்டத்தினர் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி அளிக்கும் பெண்கள். அவர்கள் ஆண்களை தன்பக்கம் இழுப்பார்கள் தாங்களும் ஆண்கள் பக்கம் சாய்வார்கள்- முஸ்லிம்)

அழிவை ஏற்படுத்தும் பாவங்கள்
35. சிறுநீர் கழித்து சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.
(இரு கப்ருகளைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் அவர்கள் செய்த செயல்கள் பெரியதல்ல.'' பிறகு கூறினார்கள்: ''இல்லை! அவை பெரும் பாவங்கள்தாம். ஒருவர் சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்யமாட்டார். மற்றொருவர் கோல் சொல்லித் திரிவார்''- புகாரி, முஸ்லிம்)
36. பொய் சத்தியம் செய்வது.
(பெரும்பாவங்களாவன: அல்லாஹ்விற்கு இணைவைப்பது... பொய் சத்தியம் செய்வது- புகாரி)
37. பொய் பேசுவது.
(நயவஞ்சகனின் அடையாளம் மூன்று அதில் முதலாவது பொய் பேசுவது - நரகவாசிகள் ஐந்து வகைப்படுவர்... அதில் ஒருவர் பொய்யர்- முஸ்லிம்)
38. விபசாரம்.
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (குர்ஆன் 17:32)
39. ஓரினச் சேர்க்கை.
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?'') (குர்ஆன் 7:80)
40. வட்டி வாங்குவது, கொடுப்பது.
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள் இதற்குக் காரணம் அவர்கள், ''நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். (குர்ஆன் 2:275)
(நபி (ஸல்) அவர்கள் வட்டி வாங்குபவனையும், வட்டி கொடுப்பவனையும், அதை எழுதுபவனையும், அதன் சாட்சியையும் சபித்தார்கள். மேலும் இவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவர்களே! என்றும் கூறினார்கள்- முஸ்லிம்)
41. ஜகாத் கொடுக்காமல் இருப்பது.
(ஜகாத் கொடுக்காதவர்களை நெருப்புப் பட்டைகளைக் கொண்டு நரகத்தில் அவர்களது நெற்றி, முகம், முதுகு மற்றும் கன்னத்திலும் சூடு போடப்படும். மறுமையின் ஒருநாள் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது- அஹ்மது, முஸ்லிம்)
42. கனவில் காணாததை கண்டதாகக் கூறுவது.
(கனவில் காணாததைக் கண்டதாக கூறுபவனிடம் மறுமையில் இரண்டு கோதுமைகளை கொடுத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றுடன் இணைத்துக் கட்டு என சொல்லப்படும். ஆனால் அது அவனுக்கு அறவே முடியாது- முஸ்லிம்)
43. மற்றவர்களது உரையாடலை அவர்களது விருப்பமின்றி கேட்பது.
(மற்றவர்களது உரையாடலை அவர்களது விருப்பமின்றி கேட்பவர் காதில் மறுமையில் செம்பை பழுக்கக் காய்ச்சி ஊற்றப்படும்- முஸ்லிம்)

44. உருவம் வரைவது.
(அல்லாஹ்விடத்தில் மறுமையில் மிகக் கடினமான வேதனைக்குறியவர், உருவம் வரைபவர்கள்- முஸ்லிம்)
45. தலாக் விடப்பட்ட பெண்ணை முதல் கணவனுக்கு ஆகுமாக்கி வைப்பதற்காக மணமுடிப்பது, முணமுடித்துக் கொடுப்பது.
46. முத்தலாக் விட்ட பிறகு அவளையே மணம் முடிக்க விரும்பி பிறருக்கு திருமணம் செய்து வைப்பது.
(முஹல்லில் - முஹல்லல்ல{ஹ ஆகிய இருவரையும் அல்லாஹ் சபித்துள்ளான்- அபூதாவூது, திர்மிதி)
47. குடும்பத்தார்களை பராமரிக்காமல் விட்டுவிடுவது.
(குடும்பத்தார்களை பராமரிக்காமல் விட்டுவிடுவது ஒருவனின் பாவத்திற்கு போதுமானது- முஸ்லிம், அஹ்மது)
48. லஞ்சம் வாங்குவது, கொடுப்பது.
(லஞ்சம் கொடுப்பவனையும் வாங்கு பவனையும் அல்லாஹ் சபிக்கின்றான்- அபூதாவூது, அஹ்மது)
49. வமிசத்தைக் இழிவாகப் பேசுவது.
50. ஒப்பாரி வைப்பது.
(இரண்டு செயல்கள் இறை நிராகரிப்புக்கு சமமான பாவங்களாகும். அவை: வமிசத்தைக் இழிவாகப் பேசுவது, இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது- முஸ்லிம்)
51. இஸ்லாமிய சமுதாயத்தை விட்டும் வெளியேறுவது.
(யார் சமுதாயத்தை விட்டு வெளியேறு கிறாரோ அவர் (தன்மீதுள்ள) இஸ்லாமிய சின்னத்தை கழட்டியவராவார்- திர்மிதி, அஹ்மது, இப்னு குஜைமா)
52. சூதாடுவது, பந்தயம் கட்டுவது.
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (குர்ஆன் 5:90)
53. முஸ்லிமை ஏசுவது, அவரிடம் சண்டையிடுவது.
(முஸ்லிமை ஏசுவது பெரும்பாவம், அவரிடம் சண்டைக்குச் செல்வது 'குஃப்ர் இறை நிராகரிப்பாகும்'- புகாரி)
54. நபி (ஸல்) அவர்கள்மீது பொய் சொல்வது.
(யார் வேண்டுமென்றே என்மீது பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும்- புகாரி)
55. திருடுவது.
(திருடுபவனை அல்லாஹ் சபிக்கின்றான்- முஸ்லிம்)
56. உயிருள்ள பிராணிகளை நிறுத்தி வைத்து குறிபார்த்து அம்பெறியப் பழகுவது.
(உயிருள்ள பிராணியை எவன் குறியாக (இலக்காக) ஆக்கி கொள்கிறானேர் அவனை அல்லாஹ் சபிக்கின்றான்- முஸ்லிம்)
57. குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது.
(குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்ப வர்களை அல்லாஹ் சபிக்கின்றான்- முஸ்லிம்)
58. அல்லாஹ் அல்லாதவைகளுக்கு பலியிடுவது.
(யார் அல்லாஹ் அல்லாதவைகளுக்கு பலியிடுகிறாரோ, அவரை அல்லாஹ் சபிக்கின்றான்- முஸ்லிம்)
59. தந்தையை மாற்றிக் கூறுவது.
60. எஜமானரை மாற்றிக் கூறுவது.
(யார் தந்தையை மாற்றிக் கூறுகிறாரோ அல்லது எஜமானரை மாற்றிக் கூறுகிறாரோ அவர்மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் உண்டாகும்- புகாரி, முஸ்லிம்)
61. முகத்தில் அடையாளமிடுவது. (சூடு போடுவது.)
(யார் முகத்தில் சூடுபோடுகிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கின்றான். முகத்தில் சூடு போடப்பட்ட கழுதையை பார்த்தபோது நபி (ஸல்) அவர்கள் இவ்விதம் கூறினார்கள்- முஸ்லிம்)
62. நிலங்களின் அடையாளங்களை மாற்றுவது.
(யார் பூமியின் அடையாளங்களை மாற்றுகிறாரோ, அவரை அல்லாஹ் சபிக்கின்றான்- முஸ்லிம்)
63. புறம் பேசுவது.
49:12 .முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். (குர்ஆன் 49:12)
64. மது தயாரிப்பது, விற்பது.
(மதுவை பிழிய சொல்பவன், பிழிந்து கொடுப்பவன், குடிப்பவன், சுமந்து செல்பவன், யாருக்கு சுமந்து செல்லப்படுகிறதோ அவன், அதை ஊற்றிக் கொடுப்பவன், அதை விற்பவன், அதன் கிரயத்தை சாப்பிடுபவன், அதை வாங்குபவன், யாருக்காக வாங்குகிறானோ அவன் ஆகிய 10 நபர்களை நபி (ஸல்) அவர்கள் மது விஷயத்தில் சபித்தார்கள்- திர்மிதி, இப்னு மாஜா)
65. பச்சை குத்துவது.
(பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ்வின் படைப்பை மாற்றுகிறவர்களையும் அல்லாஹ் சபிக்கின்றான்- புகாரி)
66. நெற்றி (புருவ) முடியை அகற்றுவது.
67. பல்லை ரம்பத்தைக் கொண்டு தீட்டி அழகுபடுத்துவது.
(நெற்றி முடியை அழகுக்காக அகற்றும் பெண்களையும் அழகுக்காக பற்களை தேய்த்து குறைத்துக் கொள்ளும் பெண்களையும் அல்லாஹ்வின் படைப்பை மாற்றிக் கொள்ளும் பெண்களையும் அல்லாஹ் சபிக்கின்றான்- புகாரி)
68. சவரிமுடி கட்டிக் கொள்வது.
(சவரிமுடி கட்டிவிடும் ஆணையும் பெண்ணையும், பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் சபிக்கின்றான்- புகாரி)

69. ஆண்களை பெண்களைப் போன்று நடந்துகொள்வது.
(பெண்ணைப் போன்ற நடத்தையுடைய ஆண்களையும் ஆணைப்போன்ற நடத்தை யுடைய பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்- புகாரி)
70. கப்ருகளை தொழும் இடமாக்குவது.
(யூதர்கள், கிறிஸ்துவர்கள்மீது சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கஸ்தலங்களை தொழும் இடங்களாக ஆக்கிக் கொண்டனர்- புகாரி)
71. வழிப்போக்கருக்கு தண்ணீர் தர மறுப்பது.
(மூன்று நபர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை பார்க்கவும் மாட்டான் அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு. அவர்களில் ஒருவன் பாலைவனத்தில் தன்னிடம் தேவைக்கு போக மீதம் தண்ணீர் இருந்தும் அதை வழிப் போக்கருக்கு தர மறுப்பவன்...- முஸ்லிம்)
72. பொய் சத்தியம் செய்து பொருளை விற்பது.
73. கரண்டைக்குக் கீழ் ஆடை அணிபவன்.
(மூன்று நபர்களை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் அவர்களை தூய்மைப் படுத்தவும் மாட்டான் அவர்களுக்கு நோவினைத் தரும் வேதனையும் உண்டு. அவர்கள், உபகாரத்தைச் சொல்லிக் காண்பிப்பவன், கரண்டைக்குக் கீழ் ஆடை அணிபவன், பொய் சத்தியம் செய்து பொருளை விற்பவன்- முஸ்லிம்)
74. (பைஅத்) வாக்குப் பிரமாணத்திற்கு மோசடி செய்பவன்.
(மூன்று நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான் அவர்களை பார்க்கவும் மாட்டான் அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.. அதில் ஒருவர் ஆட்சியாளரிடம் வாக்கு பிரமாணம் செய்து கொடுக்கிறார் ஆனால், அவரது நோக்கமோ அவரிடமிருந்து உலகாதாயத்தை பெருவது மட்டுமே. ஆட்சியாளர் மூலம் பலன் கிடைத்தால் வாக்கை நிறைவேற்றுகிறார், ஏதும் பலன் கிடைக்கவில்லையெனில் வாக்கை நிறைவேற்றுவதில்லை- முஸ்லிம்)
75. ரமழான் நோன்பை விடுவது.
(அல்லாஹ் அனுமதித்த சலுகையின்றி ஒருவர் ரமழானில் ஒரு நாள் நோன்பை விட்டால், காலமெல்லாம் அவர் அந்த நோன்பை நோற்றாலும் அவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது- அஹ்மது, திர்மதி, அபூதாவூது)
76. முஸ்லிம்களின் மீது ஆயுதத்தை உபயோகிப்பது.
(யார் நம்மைத் தாக்க ஆயுதத்தைத் தூக்குகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல- புகாரி, முஸ்லிம்)
77. இஸ்லாமின் அடிப்படைக் கடமைகளை விடுவது.
(இஸ்லாம் ஐந்து கடமைகள்மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சிக் கூறுவது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஜகாத் கொடுப்பது, கஅபாவை ஹஜ் செய்வது, ரமழானில் நோன்பு நோற்பது- புகாரி, முஸ்லிம்)
78. பொதுச் சொத்தில் மோசடி செய்வது.
(ஒருவர் கனீமத்துப் பொருளில் ஒரு போர்வையை திருடியதற்காக அவரை நபி (ஸல்) அவர்கள் 'நரகவாசி' என்று கூறினார்கள்- முஸ்லிம்)
79. மனைவியின் பின்புறத்தில் உறவு கொள்வது.
(மனைவியின் பின்புறத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்- அபூதாவூது)
80. அநியாயம் செய்வது.
(அநியாயம் செய்வதை பயந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அநியாயம் செய்வது மறுமை நாளில் பல சிரமங்களை ஏற்படுத்திவிடும்- புகாரி, முஸ்லிம்)
81. இரும்பை (ஆயுதத்தை)க் கொண்டு சுட்டிக் காட்டுவது.
(யார் தனது சகோதரனை ஓர் இரும்பைக் கொண்டு சுட்டிக் காட்டுகிறாரோ, அவர் அதை கீழே வைக்கும்வரை மலக்குகள் அவரை சபிக்கின்றனர்- முஸ்லிம்)
82. புனித பூமியான மக்காவின் கண்ணியத்தை பாழ்படுத்துவது, அதன் சங்கைக்கு பங்கம் விளைவிப்பது.
(அல்லாஹ்விடம் மக்களில் மிக வெறுப்பு மிக்கவர்கள் மூன்று நபர்கள். அவைகளில் ஒருவர் புனித பூமியின் கண்ணியத்தை பாழ்படுத்துபவர்... - புகாரி)
83. ஏமாற்றுவது.
(யார் நம்மை ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல- முஸ்லிம்)
84. முகஸ்துதி.
(யார் பிறர் தன்னை புகழவேண்டும் என்பதற்காக அல்லது பிறர் தன்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒரு காரியத்தைச் செய்கிறாரோ அவரை அல்லாஹ் தண்டிப்பான்- புகாரி, முஸ்லிம்)
85. காணாமல் போன பொருளை தன்னால் அறியமுடியும் என்று கூறுபவனிடம் செல்வது.
(யார் இவனிடம் சென்று தன் பொருளைப் பற்றி விசாரிக்கிறாரோ அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்பட மாட்டாது- முஸ்லிம்)
86. வெள்ளி, தங்கப் பாத்திரங்களை பயன்படுத்துவது.
(வெள்ளி, தங்கப் பாத்திரங்களில் சாப்பிடுபவன் அல்லது குடிப்பவன் தனது வயிற்றில் நரக நெருப்பையே விழுங்குகிறான்- முஸ்லிம்)
87. ஆண்கள் பட்டு ஆடைகள், தங்கம், வெள்ளி நகைகள் அணிவது.
(தங்கம், வெள்ளி, பட்டு ஆகியவை இவ்வுலகில் இறை மறுப்பாளர்களுக்குரியது மறுமையில், இறை நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் சொந்தமானது - புகாரி)
(ஒரு வெள்ளி மோதிரம் மட்டும் அணிந்து கொள்வதற்கு ஆண்களுக்கு அனுமதியுள்ளது.
88. நபித்தோழர்களை ஏசுவது.
(எனது தோழர்களை ஏசாதீர்கள். அன்சாரிரிகளை நேசிப்பவர் முஃமின் அவர்களை வெறுப்பவர் நயவஞ்சகத் தன்மை யுடையவர் அவர்கள்மீது அன்பு கொள்பவர் மீது அல்லாஹ்வும் அன்பு கொள்கிறான். அவர்களை வெறுப்பவர்களை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்- புகாரி, முஸ்லிம்)
89. தொழுபவருக்கு முன் குறுக்கே செல்வது.
(தொழுபவருக்கு முன் குறுக்கே செல்பவர் அதன் தண்டனையை தெரிந்துகொண்டால் அவ்வாறு செல்வதைவிட நாற்பது ஆண்டுகள் நிற்பது மேல் என எண்ணிக் கொள்வார்- புகாரி, முஸ்லிம்)
90. அடிமை, எஜமானனை விட்டும் ஓடுவது.
(தனது எஜமானர்களை விட்டும் ஓடிய அடிமை இறைவனை மறுத்துவிட்டார். அவர் அவர்களிடம் திரும்பி வரும்வரை அவ்வாறே இருப்பார்- முஸ்லிம்)
91. அனாச்சாரம் அல்லது வழிகேட்டிற்கு அழைப்பது.
(அல்லாஹ்விடம் மக்களில் மிக வெறுப்பிற்குரியவர் மூன்று நபர்கள். அவர்களில் ஒருவர் தான் முஸ்லிமாக இருந்தும் அறியாமைக் காலத்து வழிமுறையைப் பின்பற்றுபவர்- புகாரி)
(தவறான வழியில் செல்ல பிறரைத் தூண்டுபவருக்கு அவ்வழியில் செல்பவரின் பாவம் முழுமையாக வந்தடையும். அதனால் பின்பற்றுபவர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையவும் செய்யாது).
92. கணவன், மனைவி உறவுகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவது.
(மறுமையில் அல்லாஹ்விடம் தகுதியால் மிகக் கெட்டவர்களில் ஒருவன், தனது மனைவியிடம் சேர்ந்துவிட்டு அதை பிறரிடம் பேசுகிறவன்- முஸ்லிம்)
93. மதீனாவின் கண்ணியத்தை பாழ்படுத்துவது.
94. மதீனாவின் கண்ணியத்தை பாழ்படுத்துபவர்களுக்கு அடைக்கலம் தருவது.
(மதீனா புனித நகரமாகும். அதன் கண்ணியத்தை யார் பாழ்படுத்துகிறாரோ அல்லது அதனை பாழ்படுத்துகிறவர்களுக்கு அடைக்கலம் தருவாரோ அவர்மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபமும் உண்டாகும்- புகாரி)
95. ஒரு முஸ்லிம் பிறருக்கு கொடுத்த பாதுகாப்பில் பங்கம் விளைவிப்பது.
(முஸ்லிம்கள் அனைவரும் கொடுக்கும் பாதுகாப்பு சமமானதே. யார் பிற முஸ்லிம் கொடுக்கும் பாதுகாப்பில் பங்கம் விளை விக்கிறாரோ, அவர்மீது அல்லாஹ், மலக்குகள், மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகும். அவனிடமிருந்து கடமையான அல்லது உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது - புகாரி, முஸ்லிம்)
96. அல்லாஹ் இன்னாரை மன்னிக்க மாட்டான் என்று சத்தியம் செய்வது.
(அல்லாஹ் கூறுகின்றான்: யாரொருவர் இன்னாரை நான் மன்னிக்க மாட்டேன் என்று என்மீது சத்தியம் செய்து கூறுகிறாரோ, அவருக்கு நான் கூறுகிறேன். இன்னாரின் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன் உனது அமலை நான் நாசமாக்கிவிட்டேன் (ஹதீஸ் குதுஸி) - முஸ்லிம்)
97. ஜுமுஆ தொழுகையை விடுவது.
(சிலர் ஜுமுஆ தொழுகையை விட்டு விடுகின்றனர் அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ள வேண்டும் அல்லது உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுவான் பின்பு மறதியாளர்களில் ஒருவனாக அவன் ஆகி விடுவான்- முஸ்லிம்)
98. கணவனின் வெறுப்பை சம்பாதிப்பது.
(கணவனின் அழைப்பை ஏற்காமல் அன்றிரவுஅவனது கோபத்திற்கு ஆளான மனைவியை காலை விடியும் வரை மலக்குகள் (வானவர்கள்) சபித்துக் கொண்டிருக்கின்றனர்- புகாரி, முஸ்லிம்)
99. மனைவி, கணவனுக்கு நன்றி மறப்பது.
100. அதிகமாக சபிப்பது.
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்களே நீங்கள் தர்மம் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் நரகத்தில் அதிகம் இருப்பதை நான் பார்த்தேன். அதற்குக் காரணம் என்ன என்று அப்பெண்கள் வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அதிகம் சபிக்கின்றீர்கள், கணவனுடன் நன்றிகெட்டத் தனமாக நடந்து கொள்கிறீர்கள் - புகாரி)

ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜித், தமிழில்: அ. உமர் ஷரீஃப்
, ,