குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.11.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?
almighty-arrahim.blogspotcom
முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும்.
இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


அதாவது, அல்லாஹ் எங்கும் இருக்கின்றான். தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை தவறானதாகும். இப்படி ஒரு முஸ்லிம் நம்புவது, குர்ஆனுக்கும் நபிகளாரின் வழிமுறைக்கும் மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பதே சரியான கொள்கையாகும். பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.



அல்லாஹுவின் கூற்றுக்கள்:

1. அர்ரஹ்மான் அர்ஷின் மீது இருக்கின்றான். (அல்குர்ஆன் 20:5)

அதாவது, அல்லாஹ் உயர்வான இடத்தில் இருக்கின்றான் என்பதாக பல தாபிஈன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள். இந்தச் செய்தி, புகாரியில் பதியப்பட்டிருக்கின்றது.

2. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும். (அல்குர்ஆன் 67: 16)

அதாவது, வானத்தில் இருப்பவன் என்பதின் கருத்து, அல்லாஹ் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

3. அவர்கள் தங்களுடைய மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)

இங்கு, அவர்கள் என்று கூறப்பட்டிருப்பது மலக்குகளாகும். அவர்கள் அவர்களுக்கு மேலிருப்பவனை பயப்படுகிறார்கள் என்றால், அந்த அல்லாஹ்வைத் தான் குறிக்கின்றது. இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

4. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 :158) அதாவது, வானத்திற்கு உயர்த்திவிட்டான். இந்த ஆயத்தும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

5. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான். இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6: 3)

இமாம் இப்னு கஸீர்(ரஹ்) தமது நூலில் இந்த வசனத்திற்கான விளக்கத்தில் அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என “ஜஹ்மிய்யா” என்னும்வழிகெட்ட பிரிவினர் கூறுவது போல கூறமாட்டோம். மாறாக அல்லாஹ் அவர்கள் கூறுவதையெல்லாம் விட உயர்வான நிலையில் இருக்கிறான் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (அல்குர்ஆன் 57: 04) என்ற வசனத்தின் கருத்து என்னவெனில், நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் உங்களை கண்காணித்துக் கொண்டும் உங்களின் செயல்களை கவனித்துக் கொண்டும் இருக்கிறான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும் பார்வை மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைதாம் என்பதாகும். இதுபோன்று வரக்கூடிய மற்ற ஆயத்துகளின் கருத்துகளும் இதுவேயாகும்.

நபிமொழிகள்:

1. நபி(ஸல்) அவர்கள் இறைவனுடன் உரையாடுவதற்கு (மிஃராஜ்) விண்ணேற்றத்தின் போது வானத்திற்குச் சென்றார்கள். அப்போதுதான் ஐவேளை தொழுகை கடமையாக்கப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)

2. (மக்களே) என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? நானோ வானத்திலிருப்பவ(னான இறைவ)னின் நம்பிக்கைக்கு உரியவனாவேன்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள். வானில் இருப்பவன் (அல்லாஹ்) உங்கள் மீது இரக்கம் காட்டுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

4. நபி(ஸல்) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணிடத்தில் அல்லாஹ் எங்கே இருக்கிறான்? எனக் கேட்டபோது, அந்தப் பெண் வானில் இருக்கிறான் எனக் கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இந்தப் பெண்ணை விடுதலை செய்து விடுங்கள். இவள் முஃமினான பெண்தான் எனக்கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த நபிமொழியிலும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

5. அர்ஷ் நீரின் மீது உள்ளது. அல்லாஹ்வோ அர்ஷின் மீது உள்ளான். அவன் நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள்:

1. நபி(ஸல்) அவர்கள் மரணித்த நாளில் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள், ‘யார் அல்லாஹ்வை வணங்குகின்றீர்களோ, அவர்கள் அறிந்து கொள்ளுங்கள், அவன் வானில் இருக்கிறான், அவன் மரணிக்கமாட்டான். (தாரமி)

2. எங்களின் இரட்சகனை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கவர்கள், அவன் தனது படைப்பினங்களை விட்டும் தனித்து வானில் அர்ஷின் மீது உள்ளான் எனக்கூறினார்கள்.

இதனின் பொருள்: அல்லாஹ் அர்ஷின் மீது தன் படைப்பினங்களை விட்டும் தனித்திருக்கின்றான், அவன் படைப்பினங்களில் யாரும், அவனின் உயர்வுக்கு ஒப்பாக முடியாது.

3. நான்கு இமாம்களும் அல்லாஹ் அர்ஷுக்கு மேல் இருக்கிறான் என்ற விஷயத்தில் ஒற்ற கருத்தில் இருக்கின்றார்கள். படைப்பினங்களில் அவனுக்கு யாரும் ஒப்பாக முடியாது எனவும் கூறுகின்றார்கள்.

4. தொழுபவர்கள் ஸுஜூது செய்யும் போது (சுப்ஹான றப்பியல் அஃலா) ‘உயர்வான எனது இறைவன் தூய்மையானவன்’ என கூறுவதும், பிரார்த்தனை செய்பவர்களும் பிரார்த்தனை செய்யும் போது அவர்களின் இரு கரங்களையும் வானத்தின் பக்கம் உயர்த்துவதும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை காட்டுகின்றது.

5. தெளிவான சிந்தனையும் அல்லாஹ் வானில் இருக்கிறான் என்பதையே உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் எங்குமிருக்கின்றான் என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் அது பற்றி கூறியிருப்பார்கள். தமது தோழர்களுக்கும் அறிவித்திருப்பார்கள். அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்றால், உலகத்தில் அசுத்தமான இடங்களும் உண்டு, அந்த இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றானா? என்ற கேள்வியும் எழும்! அல்லாஹ் அப்படிப்பட்ட தன்மைகளை விட்டும் தூரமானவன்.

அல்லாஹ் நம்மோடு எல்லா இடங்களிலும் இருக்கின்றான் என்ற கூற்று, அல்லாஹ் ஒன்றுக்கும் மேற்பட்டவன் என்பதை குறிக்கும். ஏன் என்றால் இடங்கள் எண்ணற்றவை, வித்தியாசமானவை. அல்லாஹ் ஒருவன்தான் எனும்போது, அவன் பலராக ஆகுவதற்கு சாத்தியமேயில்லை. எனவே அவன் எல்லா இடத்திலும் உள்ளான் என்றால் அவன் ஒருவன் என்ற கூற்று பொய்யாகிவிடும். ஆகவே, அல்லாஹ் வானில்தான் அர்ஷுக்கு மேல் இருக்கிறான். அதே நேரத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அவனது ஞானத்தின் மூலம் நாம் எங்கிருந்தாலும் நமது சப்தத்தை செவிமடுத்துக் கொண்டும் நம்மைப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றான் என்பதே சரியான முடிவாகும்.

மேலே கூறப்பட்ட குர்ஆனுடைய வசனங்கள், நபிமொழிகள், நபித்தோழர்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றின் மூலம் அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேல் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பது தெளிவான ஒன்றாகும். இதற்குப் பிறகு அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற கொள்கையிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள். தவறான கொள்கைகளிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

நன்றி: சுவனப்பாதை
, ,