இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

10/03/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -16
"ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் நிச்சயம் இருப்பாள்" என்று சொல்லக்கேள்வி. இது ஒரு ஆண் மட்டும் வெற்றி அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஒரு குடும்பம் வெற்றியடைய பெண்களின் பங்கு மிக மிக அவசியம்.
ஒரு குடும்பம் நல்ல பெயர் வாங்கவும் கெட்ட பெயர் வாங்க வைக்கவும் பெண்களால் நிச்சயம் முடியும்.

ஆண்கள் சம்பாதிக்காமல் வீணாக காலத்தை கழித்து அதை பார்த்த பெண்கள் குடும்ப பொறுப்பை சுமந்து கடை வைத்து,துணிமணிகள் விற்று தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு நிறுத்தி இன்று அந்த குடும்பங்களை சார்ந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் வாழ தன் வாழ்க்கையை தியாகம் செய்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

அதே சமயம் தனக்கு எல்லாம் தெரியும் என்று "அட்டு லாயர்" மாதிரி பேசி குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி கடைசியில் எல்லோரும் வெறுப்படைகிற மாதிரி நடந்து கொள்வதும், வீட்டில் கணவன் எல்லா வசதிகள் செய்து கொடுத்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் கேவலங்களை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் தலை குனிய வைத்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

பாராட்டும்படி நடக்கும் பெண்கள் ,மன சங்கடத்தை ஏற்படுத்தும் பெண்கள் எல்லா குடும்பத்திலும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை வைத்தே நமது குடும்பத்தின் பயணம் இருக்கும் என்பது நிச்சயம்.

மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் பேசாமல் தன் கருத்தும் , சொல்லும் முதலிடம் பெற வேண்டும் என்று கத்திப்பேசும் பெண்களிடம் பேச முயற்சிப்பது கிரிமினல் வேஸ்ட்.இது ஆண்களுக்கும் பொருந்தும்.


இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய விசயம் டெலிவிசனின் ஆதிக்கம்.

அடிமைத்தனத்தில் மிகவும் கொடுமையானது நாம் எதற்கு அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியாமலே அடிமையாக இருப்பது அல்லது அடிமைத்தனம் பழகிப்போவது.ஒரு வருடத்தில் நீங்கள் டெலிவிசன் முன்னால் உட்கார்ந்து போக்கும் பொழுதை நீங்கள் கணக்கிட்டால்..உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய காலப்பகுதி அனாவிசயமாக திருப்பி திருப்பி ஒளிபரப்ப பட்ட ஒரே காட்சிகளை டி வி யில் பார்த்தே கரைந்து போயிருக்கும். இப்படி'மாத்தி மாத்தி' ஒளிபரப்பப்படும் விசயங்கள் உங்களை அடிமைப்படுத்தி விட்டபிறகு நீங்கள் உண்மையான விழிப்புணர்வு பெரும் சூழலில் இந்த சமுதாயம் உங்களை விட்டு கண்ணுக்கு எட்டாத தூரத்தை தாண்டி முன்னேறியிருக்கும்.

நேரமும் உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வம்தான் அதை முறையில்லாமல் செலவழித்தால் உங்கள் குடும்பத்தை யார் வந்து வழிநடத்தமுடியும்.

30 வருடத்துக்கு முன் இருந்த பெண்களுக்கும் இப்போது உள்ள பெண்களுக்கும் நடைமுறை என்று பார்த்தால் மிகப்பெரிய சவால் இன்று உள்ள பெண்களுக்குத்தான்.பிள்ளைகள் பிறந்தால் அதை படிக்க அனுப்ப பள்ளிக்கூடம் , ஒதுவதற்கு பள்ளி / மதரசா என்று இருந்த காலம் போய், காலையில் பள்ளிக்கூடம் அனுப்புவதிலிருந்து ஹோம் வொர்க், பள்ளியில் ஒதுவதை வீட்டில் ஒத ப்ராக்டிஸ் கொடுப்பதுவரை வீட்டில் உள்ள பெண்களுக்கே முழுப்பொறுப்பு. இதில் பிள்ளைகளுக்கு என்ன ஊட்டுகிறோம் என்பதில் கவனம் தேவை. வெறும் பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமில்லை வாழ்க்கை. அதன் எதிர்காலத்திட்டமும் சரியாக ஊட்டப்பட வேண்டும். "எனக்கு என்ன தெரியும், நான் என்ன வெளியில் போய் வரும் ஆண்பிள்ளையா.. அதை எல்லாம் தகப்பன் பார்த்துக்கொள்ளட்டும்'என இருந்தால் திசை தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கும் கொடுமைக்கு ஆளாகி விடுவோம்.

இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது.இன்று உங்கள் பிள்ளை10 வயதானால் இன்னும் 20வருடத்தில் [30 வயதில்] எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. அந்த பிள்ளையை தயார் படுத்துவது பெண்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதே உண்மை.

சின்ன வயதில் பிள்ளைகளுக்கு'லாட்ஜ் ரூம் பாய்' மாதிரி எல்லாம் செய்து கொடுத்து விட்டு பிள்ளை வளர்ந்த பிறகு "பொறுப்புதான் வரமாட்டேங்குது" என புலம்பி புண்ணியமில்லை.

குடும்பத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் மார்க்க அறிவும் உலக கல்வியும் சரியான விதத்தில் கலந்து தரும் டாக்டர் நீங்கள்தான்.

- ஜாகிா் ஹுசேன் இன்ஷா அல்லாஹ் வெள்ளி தோறும் (தொடரும்)
, ,