இந்தியா – Google செய்திகள்

பதிவுகளில் தேர்வானவை

17/03/2016

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -17
almighty-arrahim.blogspot.com
வாழ்வியல் முன்னேற்றத்தைப் பற்றி எழுதும்போது உறவுகளின் முக்கியத்துவம் ஏன் என சிலர் நினைக்கலாம். காரணம் இருக்கிறது, நம் வட்டாரம் சார்ந்த ஆண்கள்
முன்னேர நினைத்து ஏறக்குறைய ஒரு ஓட்டப்பந்தய ட்ராக்கில் நிற்பதுபோல் வாழ்க்கையை தொடங்க நினைக்கும்போது அந்த ஆண்மகனின் எண்ணம் எல்லாம் தான் அடையப்போகும் அல்லது தொடப்போகும் வெற்றியில்தான் இருக்கும், அதற்கிடையில் தனது பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும் அந்த சம்பாதிக்கும் ஆண்மகனை ஓட விடாமல் ஆளுக்கு ஒரு தாம்புக் கயிற்றை அவன் இடுப்பில் கட்டி தன் வசம் இழுத்தால் எப்படித்தான் அந்த பாவப்பட்ட ஜென்மம் ஓடி ஜெயிக்க முடியும். இதை நான் எழுதக் காரணம் நம் சமுதாயங்களில் புரையோடிப் போயிருக்கும் ' ஆண்மகன் தான்தன் சகோதரியின் பொருளாதாரத்துக்கு பொறுப்பு,ஆண்மகன் தான் தன் சகோதரியின் பிள்ளைகளின் கல்யாணம் முடிந்தால் தனது பேரப் பிள்ளைகளின் தேவைக்கும் பொறுப்பு என்ற எழுதப்படாத சட்டம்நம் பகுதி ஆண்களின் தலையில் எழுதப்பட்டிருப்பதுதான். பெண்களை படிக்க வைத்து தனது சொந்த படிப்பையும் திறமையும் நம்ப விடாமல் அவர்களை தொடர்ந்து ஆண்களை சார்ந்து இருக்க வைக்கும் பழக்கம். தொடர்ந்து ஆண்களை சம்பாதிக்கும் எந்திரமாக்கியிருக்கிறது.


பெண்கள் அதிகம் படித்தால் எங்கு நம்மை அதிகம் கேள்வி கேட்டுவிடுவார்களோ என்று நினைக்கும் " ஆப்கானிஸ்தான் தனமான புத்தி" நம் பகுதியில் பல ஆண்களிடம் இருக்கிறது.


ஆக ஆண்களின் முன்னேற்றத்தில் மனைவியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை முன்னால் அத்தியாயத்தில் பார்த்தாலும் அடுத்த வெகு அருகில் இருக்கும் உறவான பிள்ளைகளின் பங்கு இதில் மிக முக்கியம். இன்றைய தேதியில் நம் ஊர் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வாழ்வியல் மாற்றம் ஏதோ மேஜிக் ஷோவில் நடந்தது மாதிரி வந்ததல்ல.


நம் ஊர் பகுதிகளில் முன்பு இருக்கும் வீடுகள் இன்றைய பிள்ளைகள் மறந்து இருக்கலாம் அல்லது அவர்களுக்கு தெரியாமலேயே போயிருக்கலாம். இரண்டு ரூம்கள் குனிந்து நுழைந்து படுத்து குனிந்து வெளியே வருகிற மாதிரி ஒன்னுக்கும் உதவாத டிசைனில் , ஒரு குழந்தை பிறந்தால் தாய் / குழந்தை /தகப்பன் மூன்று பேரும் படுக்க முடியாத அளவுக்கு 'நாயர் ஸ்டைல்" வீடுகள் கட்டியிருப்பார்கள். இதில் நான் சொன்ன 2 வது ரூம் பெரும்பாலும் ஸ்டோர் ரூமாகவும் ,மழைக்காலங்களில் சமையல் கட்டாகவும் பயன்படும். [சமையல் அறை எனும் 'பெரிய்ய்ய்ய வார்த்தை' இதற்கு பொருந்தாது]. இப்படி அடிப்படை வாழ்க்கையை மாற்றி அமைத்து ஒரு நல்ல வீடு கட்டி வாழவே நம் இனம் குறைந்தது 30 வருட உழைப்பை கொட்டி உருவாக்கியிருக்கிறது. கடந்து போன 30 வருடமும் திருப்பி வரலாம். வாழ்க்கை திரும்பி கிடைக்குமா?


இன்றைக்கு 35 வயதிலிருந்து 65வயது வரை உள்ளவர்கள் வெளிநாடு போய் இந்த அடிப்படை வாழ்க்கையை குறைந்த பட்சம் அடையத்தான் தனது இளமையை,தனது கனவுகளை, தனது சுதந்திரத்தை எல்லாவற்றையும் பணயம் வைத்து, தனது பிள்ளைகள் நன்றாக படித்து பொறுப்புள்ளவர்களாக ஆகிவிட்டால் என் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை என்று மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் . அவர்களை பிள்ளைகள் காதல் என்ற பெயரிலும், வசதியான வாழ்க்கை வாழ வேண்டி அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதிலும் பெற்றோர்களை நோகடிப்பது எந்த வகையில் ஞாயம்?. இந்த பாவப்பட்ட பெற்றோர்கள் செய்த குற்றம்தான் என்ன...? பிள்ளைகளை நம்பியது தவறா?. பிள்ளைகளை நம்பாமல் வேறு யாரைத்தான் நம்புவது?.


இன்றைக்கு துபாயிலும்,சவூதியிலும், அமெரிக்கா, யூ,கே,ஆஸ்திரேலியா, ஜப்பான் என்று பிழைக்க போன யாருக்கும் விசாவும், ஏர்லைன்ஸ் டிக்கட்டும் ஏதோ ஒரு காலை நேரத்தில் நரசுஸ் காப்பி குடித்துக் கொண்டு, காலை பேப்பரை புரட்டிக் கொண்டிருக்கும்போது வாசல் வந்து கதவைத் தட்டி யாரும் கொடுத்து விட்டு போனதல்ல. முதன் முதலில் ஸ்டேம்ப் ஆகும் விசாவையும், முதன் முதலில் கிடைத்த ஏர்டிக்கட்டையும் பார்க்க இன்றைய தகப்பன்கள் எத்தனை நாள் பட்டினியாக இருந்திருப்பார்கள். எத்தனை நாள் பம்பாயில் கழிவறைக்கு கூட க்யூவில் வெகுநேரம் நின்றிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். எத்தனை இன்டர்வியூ,எத்தனை ஏமாற்றங்கள்.. அத்தனையும் சுமந்துதான் நிமிர்ந்திருக்கிறார்கள்.இத்தனை வருடத்து தியாகத்தையும் சில சமயங்களில் பிள்ளைகள் எப்படி ஒரே வார்த்தையில் பெற்றோர்களின் முதுகெழும்பை உடைக்க பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் இன்னும் விளங்காத வித்தை.


எதுவும் வாழ்க்கையில் அந்தந்த வயதும் பொறுப்பும் வந்தவுடன் நிகழ்ந்தால் அதற்கு மரியாதை.. அதை மீறி செயல் படும்போது... வாழ்க்கையின் சவால்கள் மீறியவர்களுக்கு எதிர்ப்பாகவே போய்விடுகிறது.


30 வயது தம்பதியினர் பிள்ளை பெறாதபோது 'இன்னுமா பிள்ளை இல்லை...என்று கேட்கும் சமுதாயம் , 60 வயது தம்பதியினர் பெற்றுக்கொண்டால் "இப்போது ஏன்" என்று கேட்க தவறுவதில்லை என்பதிலேயே... அது அது சரியான வயதில் நிகழ வேண்டும் என்ற உண்மை இளைய சமுதாயத்திற்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதை சொல்கிறது.


எப்போதும் புத்திசாலிகள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை தனது நிலையை உயர்த்திக் கொள்ளாமல் எடுப்பதில்லை. திருமணப்பந்தலில் நிற்கும் ஒரு மணமகனின் கால் குறைந்த பட்சம் அடுத்த நாளே உழைத்து சம்பாதிக்கும் உறுதியை தன்னை நம்பி வந்தவளுக்கு தர வேண்டும். கல்யாணத்திற்கு பிறகு மனைவிக்கு தைக்கும் ஜாக்கெட்தையல் கூலியை கூட பெற்றோர்களிடம் கேட்கும் சூழ்நிலையை வைத்துக் கொண்டு‘'சுதந்திரம்" 'யூத்' என்று பேத்திக் கொண்டிருப்பது தவிர்க்க.


இன்றைய இளைய சமுதாயம் தனது நண்பர்களை தெரிவு செய்வதிலும் கவனம் தேவை Talking Companionக்கும் Friends வித்தியாசம் தெரியவேண்டும்.


உங்களோடு ஊர்சுத்த , படம் பார்க்க,ப்ரவுசிங் சென்டருக்கு கூட வர,ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட,மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து கதைத்து கொண்டுவர வருபவர்கள் எல்லாம் தனது குடும்பம், தனது தேவை என்று வந்தவுடன் கூட வருவார்கள் என்று ஒரு மாயையில் சுற்றும்போது நிதானித்து யோசிக்கவும்.


உங்களின் நட்பு உண்மையாக இருந்தால் அது காலத்தை வென்று தொடரும். அது உங்களின் வார்த்தைகளுக்குள் வசப்படாது. உங்களின் விளக்கத்தை விளங்காது. விதியின் துரத்தலிலும் விலகாத விதியை தன்வசப்படுத்தியிருக்கும்.


நல்ல நட்பு கிடைக்காதவன் வறுமைக்குள் தள்ளப்பட்டவனுக்கு சமம். ஆனால் இளமையின் துள்ளலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நட்பு உங்களுக்கு நஞ்சாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளும் திறமை உங்களுக்குள் இருக்க வேண்டும்.


சரி இதை இந்த அத்தியாயத்தில் சொல்ல காரணம் ஏன்? .. ஒரு சம்பாதிக்கும் குடும்ப தலைவனின் மொத்த எதிர்பார்ப்பே தனது பிள்ளைகள் நல்லபடியாக வர வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் இருக்கும். எந்த தகப்பனும் தன் பிள்ளை கெட்டுப்போக வேண்டும் என்று எப்போதும் நினைக்க மாட்டான். பிறந்த நிமிடத்திலிருந்து தனது பிள்ளைக்கு எது தேவைப்படும் என்று தேட ஆரம்பித்துதேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாய் செய்த தகப்பன் தன் பிள்ளைகளுக்கு வாழ்க்கையை மட்டும் தேர்ந்தெடுக்க தெரியாது என்று பிள்ளைகள் சொல்லும்போது குடும்பத்தை காக்க எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தியாகத்தையும் பூஜ்யமாக்கும் சூழ்நிலையை , வார்த்தையை எப்படி தாங்க முடியும்.?


பிள்ளைகள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளின் சிசி,பயன்படுத்தும் ஐ போனின் ஸ்பெக்ஸ் (specification) தெரியாத தகப்பன் இருக்கலாம் ஆனால் அதை வாங்கித் தந்தது அந்த தகப்பன் தான் என்று பிள்ளைகள் உணர்ந்தால் சரி.


பிள்ளைகளை வளர்ப்பதில் தகப்பனின் கடமையும் முக்கியம்,பிள்ளைகளுக்கு “ YES, YES” என்று எல்லாம் கொடுத்து வளர்க்கும்போது “NO” என்பதின் அர்த்ததை புரிய வைக்க தெரிந்திருக்க வேண்டும். சில விசயங்களில் நமக்கு வாங்கி கொடுக்க வசதியிருந்தும் “NO’என்று சொல்ல தெரிய வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பிள்ளைகள் தன் வாழ்க்கையில் ஏற்படும் Rejectionஐ சமாளிக்க தெரியாமல் பாதிக்கப்பட்டு விடக்கூடும்.


பிள்ளையை வளர்க்கும் தாய்மார்களும் [அது எந்த வயது பிள்ளைகளாக இருந்தாலும் சரி] சில விசயஙகளில் கவனம் தேவை. அன்பாக வளர்க்கிரேன் என்று பிள்ளைகளை அருகதையற்றவர்களாக்கி விடவேண்டாம்.


நாம் வாங்கித்தரும் ஐ போன் ,கேட்ஜெட்டுகளால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பள்ளம் விழுந்துவிடாது. ஆனால் அதை பிள்ளைகள் தனது தகுதிக்கு மீறி கேட்டு நச்சரிக்கும் அட்டிட்யூடில் இது கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப பொருளாதாரத்தில் குழி தோண்டும்.


பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவதற்கும் பரிவு காட்டுவதற்கும் யாரும் தடை சொல்ல மாட்டார்கள். அதே போல் பிள்ளைகளும் நான் என் பெற்றோரை மதிக்கிறேன் என்று வார்த்தை அளவில் மட்டும் சொல்லக்கூடாது. அது 'ஆக்சன்'எனும் செயல்பாட்டு வடிவிலும் இருக்க வேண்டும்.இது இளைய சமுதாயத்துக்கு மட்டும்.


உங்கள் குடும்ப கெளரவம்,பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ரிலே ரேஸ் மாதிரி, உங்கள் தகப்பன் ஏற்கனவே ட்ராக்கில் சரியாக ஒடி வந்து உங்களிடம் அந்த ரிலே பட்டனை தர வருகிறார்.. நீங்கள் இன்னும் தயாராகாமல் நீங்கள் ஒட வேண்டிய தூரத்தையும் அவரையே ஒட சொல்வது எந்த வகையில் ஞாயம்.?


இன்றைய இரவு உணவுக்காக நீங்கள் அமர்ந்திருக்க பசியுடன் தான் நீங்கள் தூங்கப்போக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்காமல் உங்கள் சாப்பாட்டு தட்டையில் உணவை பரிமார ஒருநாளும் தவராமல் உழைக்கும் ஜீவனை நீங்கள் எப்படி மதிக்க வேண்டும்.?


ZAKIR HUSSAIN
, ,