குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

12.11.20

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அல் குறைஷி-அல் மாவூன்
குறைஷிகள்
அல் குர்ஆன் அத்தியாயம் :106 


 
 
சிதறிக் கிடந்தச் சமூகம் – ஒன்று 
சேர்ந்துச் சிறந்த தாலே 
குறைஷி கோத்திரம் உயர்ந்தது – மக்கத்துக்
குடிகள் யாவும் மதித்தனர் !

குறைஷியர் மனம் நெகிழ்ந்திட -அவர்
குறைகள் யாவும் விலகிட
நல்லவை மட்டுமே தெரிந்து – மனம்
விரும்ப வைத்த தாலே

கோடையின் சூட்டைத் தவிர்க்க – குளிர்
பலஸ்தீனம் சிரியா அமைந்த
வடக்கு நோக்கிப் பயணிக்க – மனம்
விரும்பவும் வைத்த தாலே

குளிர்கால நடுக்கம் தவிர்க்க – சுடும்
கதிரவன் தகிக்கும் தெற்கில்
எமனை நோக்கி ஏகவும் – மனத்தில்
விருப்பம் விதைத்த தாலே

கஅபாவின் இறைவனை வணங்கட்டும் – அவன்
காட்டிய வழியுடன் இணங்கட்டும்
வழியிலும் தொழிலும் உயர்த்திய – அந்தத்
தூயவன் ஒருவனைத் தொழுட்டும்

அவன்தானே ஆற்றுவித்தான் பசியை – நல்
அறுசுவை வகையில் உணவளித்து !
அவன்தானே அகற்றினான் கிலியை – அவர்
அடைக்கலம் பெறவே அபயமளித்து !

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


அற்பப் பொருட்கள்
அல் குர்ஆன் அத்தியாயம் :107 அல் மாவூன்  



எண்ணியவற்றிற் கீடாகவும் – துணிந்து
பண்ணியவற்றிற் கிணையாகவும்
மண்ணிலடங்கிய பின் – மீண்டும்
விண்ணிலுயிர்ப்பிக்கும் நாளில்

வேதனைகளைக் கொண்டோ – அழகிய
வாழ்வதனைத் தந்தோ
தீர்ப்பெழுதும் நாளை – பொய்யெனக்
கொள்பவனைக் கண்டீர்?

மெய்ச்செய்தி இதனை – குருடாய்ப்
பொய்ச்செய்தி என்பவனே
அநாதைகளை விரட்டி – பெரும்
அநியாயம் செய்கின்றான்

ஏழைக்கு உணவளிக்க – இவன்
என்றுமே முயன்றதில்லை
இருப்போரைக் கொடுக்க வேண்டி – ஓர்
இம்மியும் தூண்டவில்லை

கவனச் சிதறலோடு – செய்யும்
தொழுகையாளிக்கும் கேடுதான்
சுவனச் சுவை வாழ்வு – வெறும்
கனவோடு தீரும்தான்

பாராமுகமான இவன் – தன்
தோராயத் தொழுகையிலே
ஆராய ஒன்றுமில்லை – இதில்
கூரான சிரத்தையில்லை

ஊரார்க்குக் காட்டிடவும் – இன்னும்
வேறாட்கள் பார்த்திடவும்
தொழுவது போலன்றோ – இவன்
விழுவதும் எழுவதும் !

அற்பமான பொருட்களின்பால் – இவன்
அளவற்றை ஆசைகொண்டு
சொற்பமான ஈகையையும் – தன்
சொல் செயலால் தடுத்திடுவான் !


 சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்.

நன்றி: சத்திய மார்க்கம் / அதிரை நிருபர்
, ,