குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

15.8.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

மண்ணறையின் கேள்விகள்
                             மண்ணறையின் கேள்விகள் மத்ஹபுக்கு

ஓ!! என்னருமை முஸ்லிம் சமுதாயமே!! நீ மரணித்த பின் உன்னை அனைவரும் சேர்ந்து மண்ணறையிலே வைத்த பின், மண்ணறை மலக்குகள் உன்னிடம் என்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்பதையும், மறுமை நாளிலே என்ன என்ன கேள்விகள் கேட்கப்படும் என்பதையும் ஒளிவு மறைவு இல்லாமல், இறைவனின் திருப் பெயரைக் கொண்டு சொல்வீர்களா !?
அன்றைய தினம் எந்த மத்ஹபைப் பற்றியும் விசாரிக்கப்பட மாட்டாது, நீ எந்த மத்ஹபைப் பின்பற்றி வாழ்ந்தாய் என்றும் விசாரிக்கப்பட மாட்டாது. ஆனால், கண்டிப்பாக நீ ஏன் குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்றினாய், உன்னை ஏன் ஒரு மத்ஹபுக்குள் உன்னை இணைத்துக் கொண்டாய்? என்ற கேள்விகள் கண்டிப்பாக அவனிடம் கேட்கப்படும். எந்தவித இஸ்லாமிய அடிப்படையோ அல்லது சரியான ஆதாரங்களின் அடிப்படையோ, இதில் எதுவுமே இல்லாமல் குறிப்பிட்ட ஒரு மத்ஹபை ஒருவர் பின்பற்றுவது என்பது கண்மூடித்தனமானது. இது யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களுடைய மார்க்க விவகாரங்களில் இறைவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதை விடுத்து, தங்களுடைய மத குருமார்களை பின்பற்றுவதற்கும், அவற்றில் தீர்ப்புச் சொல்வதற்கும் அவர்களையே முழுமையாக நம்புவதற்கு ஒப்பாகும். இத்தகைய கண்மூடித்தனமான செய்கைகள் ஒருவரை வழிகேட்டிற்குத் தான் அழைத்துச் செல்லுமே தவிர அவ்வாறு பின்பற்றுபவரை இறைவனின் உவப்பிற்கு உரியவராக ஆக்காது.

ஒவ்வொருவருடைய இறப்பிற்குப் பின்னும், அவர் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வுலகில் வாழ்ந்தார் என்று தான் கேட்கப்படுமே ஒழிய இந்த உலகில் எந்த இமாமமைப் பின்பற்றி தன்னுடைய மார்க்கத்தைக் கடைபிடித்தார் என்று கேட்கப்பட மாட்டாது. இங்கே இஸ்லாமிய நம்பிக்கை என்பது அவர் தன்னுடைய மார்க்க விசயங்களில் எந்தளவு அறிவுடையவராக இருந்தார் என்பதும், அந்த அறிவின் துணை கொண்டு எந்தளவு தன்னுடைய மார்க்கத்தைக் கடைபிடித்தார் என்பதும் பொருளாகும். ஒருவருக்கு தன்னுடைய மார்க்கத்தின் அடிப்படை விசயங்கள் பற்றி சரியான அறிவு இல்லை எனில், அவர் எவ்வாறு தனக்கு ஏற்படும் பிரச்னைகளில் சந்தேகமானவற்றைத் தீர்த்துக் கொள்ள இயலும். தன்னால் அந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள இயலவில்லை எனில், அதற்குரிய அறிஞர்களிடம் அவற்றைக் குறித்து விளக்கம் பெற்றுக் கொள்வதும், அவர் தந்த விளக்கம் குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைந்தது தானா என்று ஆராய்வதும், குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் அமைந்திருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்வதும், என்பன போன்ற இத்தகைய செயல்பாடுகள் யாவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த உண்மையான எளிமையான, இலகுவாகப் பின்பற்றத்தக்க இஸ்லாமிய வழிமுறைகளாகும்.

என்னுடைய அன்பார்ந்த சகோதரர்களே !! மத்ஹபுகளின் மாயையில் தங்களுடைய உண்மையான ஈமானைத் தொலைத்து விட்டு வெகுதூரம் சென்று விட்டவர்களே!! இஸ்லாம் நேர்வழியின் பால் இன்னும் உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த உண்மையான வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களை மட்டுமல்ல உங்கள் மார்க்கத்தையும் புதுப்பித்துக் கொள்வதோடு, இது வரை உங்களாலும், உங்கள் மூதாதையர்களாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த தூய இஸ்லாத்தை மக்களது மனங்களில் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், இஸ்லாம் இரு கரம் கொண்டு உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஒரு வழி முறை மட்டுமே உங்களை அழிவிலிருந்து காப்பாற்றி, வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லக் கூடியது. எனவே இஸ்லாத்தின் வழிவந்த மக்களே !! ஓரிறைக் கொள்கையான தவ்ஹீதைப் பின்பற்ற வாருங்கள் !! இறைவனுக்கு இணைவைக்காமல் தனித்தவனான அவனை மட்டுமே வணங்குங்கள், அவன் ஒருவனே நாம் எல்லோரும் வணங்கத்தக்கவன், அவனிடம் மட்டுமே உங்களது தேவைகளைக் கேளுங்கள், அவனிடம் மட்டுமே உதவிகளைக் கேளுங்கள், அவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். ஒவ்வொரு முஸ்லிமையும் உங்களது சகோதரர்களாகக் கருதுங்கள், உங்களுக்கு நீங்கள் எதை விரும்புகின்றீர்களோ அவற்றையே உங்கள் சகோதரருக்கும் விரும்புங்கள்.

கீழே உள்ள ஹதீஸானது, இமாம் திர்மிதி அவர்கள் தனது சுனன் திர்மிதியில், இப்ரத் பின் சரிய்யா என்பவர் அறிவித்த ஒரு ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸானது நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.

((وعظنا رسول الله صلى الله عليه وسلم يوما بعد صلاةِ الغداةِ موعظة بليغةً ذرفت منها العيون ووجلتْ منها القلوبُ فقال رجل : إن هذه موعظة مودِع فماذا تعهد إلينا يارسول الله؟ قال : أُوصيكم بتقوى الله، والسمع والطاعةِ وإن عبد حبشي فإنه من يعش منكم يرى اختلافاً كثيراً وإياكم

ومحدثات الأمور فإنها ضلالة فمن أدرك ذلك منكم فعليكم بسنتي وسنة الخلفاءِ الراشدين المهديين، عضوا عليها بالنواجذ))
ஒரு நாள் காலைத் தொழுகைக்குப் பின்பு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு மிக நீண்டதொரு அறிவுரையை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையானது எங்களது இதயங்களில் அச்சத்தை உண்டுபண்ணி கண்களில் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒருவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இது தங்களுடைய இறுதி உரையைப் போன்றல்லவா இருக்கின்றது? என்று கேட்டார். அதன்பின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்குப் பயப்படும்படி உங்களை அறிவுறுத்துகின்றேன். உங்களுக்கு ஒரு (கருப்பு நிறமுள்ள) அபீஸீனிய அடிமையைத் தலைவராக நியமித்தாலும், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அவரது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடங்கள். எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் நிறைய மாறுபாடுகளைச் சந்திப்பீர்கள். என்னுடைய சுன்னாவையும், என்னுடைய தோழர்களும் நேர்வழிபெற்ற கலீபாக்களின் நடைமுறைகளை மட்டுமே பின்பற்றுங்கள். அவற்றை கெட்டியாக  பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (இஸ்லாத்தில் புதிதாக உண்டாக்கப்படும்) புதினங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள், ஏனெனில் அவை யாவும் வழிகேடுகளும், தவறானவையும் ஆகும்.

இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்று தன்னுடைய சுனன் திர்மிதியில் பதிவு செய்துள்ளார்கள். மேலும், சுனன் அபுதாவூது-லும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட ஹதீஸின் மூலம் நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகளையும், அவர்களது தோழர்களும் நேர்வழிபெற்ற கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றி, இன்று நடைமுறையில் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற இமாம்களையும், அவர்களின் பெயரால் இருந்து கொண்டிருக்கின்ற மத்ஹபுகளிலிருந்தும் விலகுவதும் தான் ஒரு முஸ்லிமினதும், நேர்வழியை விரும்பக் கூடியவர்களதும் கடமையுமாகும். இதுவல்லாமல் நேர்வழி இன்னதென்று தெரிந்த பின்னரும் ஒருவர் மீண்டும் இந்த மத்ஹபுகளையே பின்பற்றிக் கொண்டிருக்கின்றார் எனில், அவர் மேற்கண்ட ஹதீஸூக்க முரணாக நடக்கின்றார் என்றே நினைக்க முடியும். இது அவர்களின் ஈமானின் பலவீனத்தையே காட்டுகின்றது. ஹனஃபி மத்ஹபில் புலமை பெற்ற ஏராளமான அறிஞர்கள், குறிப்பிட்ட ஒரு மத்ஹபைப் பின்பற்றுவது கூடாது என அறிவித்தும் இன்னும் மக்கள் அவற்றைப் புறக்கணித்த நிலையிலேயே தங்கள் மார்க்கக் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக, ஹனஃபி மத்ஹபின் பிரபல அறிஞர்களான கமால் பின் ஹமாம் என்பவர் தன்னுடைய அத்-தஹ்ரீர் என்னும் நூலிலும், இப்னு ஆபிதீன் அ';'hமீ என்பவர் தன்னுடைய அவாயில் ரத்துல் முக்தார் என்னும் நூலிலும், ஒரு குறிப்பிட்ட மத்ஹபைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று சொல்லப்படும் அறிக்கையின் உண்மைத்துவமானது சந்தேகத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
, ,